Paristamil Navigation Paristamil advert login

மாண்புமிகு மன்னராட்சி முதல்-அமைச்சர் அவர்களே.... விஜய் கடும் விமர்சனம்

மாண்புமிகு மன்னராட்சி முதல்-அமைச்சர் அவர்களே.... விஜய் கடும் விமர்சனம்

28 பங்குனி 2025 வெள்ளி 17:38 | பார்வைகள் : 1785


இதுவரை தமிழகம் காணாத ஒரு தேர்தலை அடுத்தாண்டில் தமிழகம் காணப் போகிறது. இரண்டே இரண்டு பேருக்கு இடையில் தான் போட்டி. த.வெ.க.,வுக்கும், தி.மு.க.,வுக்கும் தான் தேர்தலில் போட்டி நிலவும்,'' என்று கட்சி பொதுக்குழுவில் நடிகர் விஜய் பேசினார்.

சென்னையில் நடந்த த.வெ.க., பொதுக்குழு கூட்டத்தில் விஜய் பேசியதாவது: என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களுக்கும், தோழிகளுக்கும் என்னுடைய வணக்கம். கதறல் சத்தம் எல்லாம் எப்படி இருக்கிறது? தமிழுக்கும் அமுதென்று பேர் - அந்தத் தமிழின்பத் தமிழெங்கள் உயிருக்கு நேர். இன்னைக்கு தமிழகம் இருக்கும் சூழலில், நாம் ஒரு புதிய வரலாற்றை படைப்பதற்கு தயாராக வேண்டிய அவசியத்தை நீங்க எல்லோரும் புரிந்து வைத்து இருப்பீர்கள் என்று நான் நம்புகிறேன்.

எது அரசியல்?

அரசியல் என்றால் என்னங்க, ஒவ்வொரு குடும்பமும் நல்லா வாழ வேண்டும் என்பது அரசியலா, இல்லை ஒரே ஒரு குடும்பம் மட்டும் தமிழகத்தை சுரண்டி நல்லா கொழுக்க வேண்டும் என்று நினைப்பது அரசியலா? எல்லோரும் நல்லா வாழ வேண்டும் என்பது தான் அரசியல். அது தான் நம்ம அரசியல்.

காட்சிக்கு திராவிடம், ஆட்சிக்கு திராவிட மாடல் என்று தினம், தினம் மக்கள் பிரச்னையை மடைமாற்றி, மக்கள் ஆட்சியை மன்னர் ஆட்சி போல நடத்துகிற இவர்கள் செய்யும் செயகள் ஒன்றா, இரண்டா? மாநாட்டில் ஆரம்பித்தும், இன்றைக்கு பொதுக்குழு வரைக்கும் எங்கு எல்லாம், எப்படி எல்லாம் தடைகள்.

அத்தனையும் தாண்டியும் மக்கள் சந்திப்புகள் நிகழ்ச்சி தொடர்ந்து நடந்து கொண்டு தான் இருக்கும். ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமார், ரமேஷ் இவர்கள் எல்லாம் போட்டு அடி, அடி என்று அடிக்கிறார்கள். நாமும் அப்படி போட்டு அடிக்கணுமா என்று மனதிற்குள் யோசனையாக தான் இருக்கிறது.

பாசிச ஆட்சி

மன்னராட்சி முதல்வர் அவர்களே, முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களே, பெயரை மட்டும் வீராப்பாக சொன்னால் பத்தாது. செயலிலும், ஆட்சியிலும் காட்ட வேண்டும். ஒன்றியத்தில் பா.ஜ., ஆட்சியை பாசிச ஆட்சி என்று சொல்லும் நீங்கள் மட்டும் என்ன செய்றீங்க? அதுக்கு கொஞ்சமும் குறைவில்லாத ஆட்சி தானே நடத்துகிறீர்கள்? என் கட்சியினரையும் மக்களையும் சந்திக்க தடை போட நீங்கள் யார்?

தடையை மீறி என் மக்களை சந்திக்க வேண்டும் என்று முடிவு பண்ணிவிட்டேன் என்றால் போயே தீருவேன். சட்டத்தை மதிக்க வேண்டும் என்று ஒரே காரணத்தினால் தான் அமைதியாக இருக்கிறேன். நேற்று வந்தவன் எல்லாம் முதல்வர் ஆக கனவு காண்கிறான் என்கிறீர்களே? அது நடக்கவே நடக்காது என்றும் சொல்றீங்க. அப்படியெனில் ஏன் எந்த கட்சிக்கும் இல்லாத நெருக்கடியை எனது கட்சிக்கு போடுகிறீர்கள்?

சூறாவளி

அணை போட்டு ஆற்றை தடுக்கலாம் காற்றை தடுக்க முடியாது. தடுக்க நினைத்தால் சாதாரண காற்று சூறாவளியாக மாறும். சக்தி மிக்க புயலாக மாறும். எனது அருமை தமிழக வெற்றிக்கழக தோழர்களே, நாம் மாநாட்டில் ஒரு விஷயத்தை வலியுறுத்தி சொன்னேன். அதை தான் இங்க திரும்பவும் சொல்கிறேன். இந்த மண், பிளவு வாத சக்திகளுக்கு எதிரான மண். சகோதரத்துவ மண்.

இதுவரை தமிழகம் காணாத ஒரு தேர்தலை அடுத்தாண்டில் தமிழகம் காணப் போகிறது. இரண்டே இரண்டு பேருக்கு இடையில் தான் போட்டி. த.வெ.க.,வுக்கும், தி.மு.க.,வுக்கும் தான் தேர்தலில் போட்டி நிலவும். சமய நல்லிணகத்தை பேணும், சமூக நீதிக்கான மண். இதை நாம் பாதுகாத்தே தீரணும். உங்கள் எல்லாரையும் வேண்டி, வேண்டி கேட்டு கொள்கிறேன். தமிழகத்தில் பல பகுதிகளில் இருந்து வரும் செய்திகளை எல்லாம் கேட்கும் போது, மன உளைச்சலையும், மன வேதனையும் தருவதாக இருக்கிறது.

சட்டம் ஒழுங்கு என்று ஒன்னு இருக்கிறதாகவே தெரியவில்லை. அது எல்லாம் இந்த கரப்ஷன், கபடதாரிகள் கவர்மென்ட் தான் காரணம். இந்த நிலைமை மாற வேண்டும். அதுக்கும் இருக்கிற ஒரே வழி, இங்க உண்மையான மக்கள் ஆட்சி மலர வேண்டும். அது வர வேண்டும் என்றால், இவங்களை மாற்ற வேண்டும். அதுக்கு என்ன வழி? நாம் என்ன செய்ய போகிறோம். நம்முடைய தோழர்கள் தினமும், மக்கள் போய் பாருங்கள். அவர்களுடன் பேசுங்கள்.

ஒவ்வொரு தெருவுக்கும், ஒவ்வொரு வீட்டுக்கும் போங்க. அவர்களுடைய பிரச்னை என்ன என்று கேளுங்க, அதனை தீர்ப்பதற்கு என்ன வழி என்று யோசிங்கள். அப்பொழுது தான் அவர்களுக்கு நமது மேல் நம்பிக்கை வரும். அப்படி ஒரு ஆழமான நம்பிக்கையை விதைத்து விட்டு, அதன் பிறகு நிமிர்ந்து பாருங்கள். ஒவ்வொரு வீட்டின் உச்சியிலும் தமிழக வெற்றிக் கழகத்தின் இரட்டை போர் யானை, வாகை மலர் கொடி தானாக பறக்கும்.

மன்னராட்சி

தானாக பறக்கும். மன்னராட்சி முதல்வர் அவர்களே, உங்க ஆட்சியை பற்றி கேள்வி கேட்டால் மட்டும் ஏன் சார் உங்களுக்கு இவ்வளவு கோபம் வருகிறது. நீங்கள் ஒழுங்காக ஆட்சி நடத்தி இருந்தீங்க என்றால் பெண்கள் பாதுகாப்பு ஒழுங்காக இருந்திருக்கும். சட்டம் ஒழுங்கு சரியாக இருந்திருக்கும். பச்ச புள்ளைங்க, படிக்கிற புள்ளைங்க, சின்ன குழந்தைங்க, வீட்டில் இருக்கும் பெண்கள், இவங்க எல்லோருக்கும் நடக்கிற கொடுமைகளை சொல்ல முடியல சார். இதுல வேற உங்களை அப்பா என்று கூப்பிடுகிறார்கள் என்று சொல்கிறீர்கள்.

கஷ்டங்களை அனுபவித்து கொண்டு இருக்கிற, எனது சகோதரிகளான தமிழக பெண்கள் தான் உங்களுடைய அரசியலுக்கு முடிவு கட்ட போகிறார்கள். உங்களுடைய இந்த அரசிலுக்கு முடிவு கட்ட போகிறார்கள். சரி பெண்கள் லைப் தான் இப்படி போராட்டம் ஆக இருக்கிறது என்று பார்த்தால், இங்க எத்தனை போராட்டங்கள். பரந்தூர் போராட்டம், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டம், போதைப்பொருள் எதிர்ப்பு போராட்டம்.

போராட்டங்கள்

வரி உயர்வு போராட்டம், மீனவர்கள் போராட்டம், போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம், ஜாதிவாரி கணக்கெடுப்பு போராட்டம், சாம்சங் தொழிலாளர்கள், விவசாயிகள் போராட்டம், இஸ்லாமிய அமைப்புகள், செவிலியர்கள், மருத்துவர்கள் போராட்டம் என சொல்லி கொண்டே போகலாம். இது எல்லாம் சாம்பிள் தான். இந்த எல்லா போராட்டங்களுக்கும் தமிழக வெற்றிக் கழகம் கூட நிற்கும்.

இங்க நீங்கள் தான் இப்படி என்றால், அவங்க யாரு உங்கள் சீக்ரெட் ஓனர் உங்களுக்கும் மேல, மோடி ஜி அவர்களே, உங்களுடைய பெயர்கள் எல்லாம் சொல்வதற்கு எங்களுக்கு பயம் மாதிரியும், அப்படி ஒரு விஷயத்தை சொல்லிற வேண்டியது. நான் படத்துல சொல்வேன், லியோவை பார்க்கணும், லியோவை பார்க்கணும், சத்தியமாக அப்படி தான் இருக்கிறது. சென்டரில் ஆள்கிறவர்கள் என்று சொல்கிறோம். சென்டரில் யார் ஆள்கிறா? காங்கிரசா? இங்க stateல ஆள்கிறவர்கள் என்று பேசுகிறோம்? அ.தி.மு.க.,வா? அப்புறம் என்ன பெயரை சொல்ல வேண்டும் என்று புரிய வில்லை.

மறைமுக கூட்டணி

ஓட்டுக்காக காங்கிரஸ் கூட்டணி, கொள்ளையடிப்பதற்காக பா.ஜ., உடன் மறைமுக கூட்டணி?

தமிழகத்தில் த.வெ.க., ஆட்சி அமைந்ததும் பெண்கள் பாதிப்பை 100 சதவீதம் உறுதி செய்வோம். சட்டம் ஒழுங்கு நல்லா வைத்து இருப்போம். கல்வி, சுகாதாரம் அனைத்திலும் கவனம் செலுத்துவோம். அதுவும் எல்லோருக்கும் எல்லாம் சமமாக கிடைக்கிற மாதிரி செய்வது தான் எங்களுடைய டார்கெட். எப்பொழுதும் உழைக்கிறவர்கள் பக்கம் தான். நமது தமிழகம் இயற்கை நிறைந்த பூமி. மக்களை பாதிக்கிற மாதிரி திட்டங்களை செயல்படுத்தாதீர்கள். இவ்வாறு விஜய் பேசினார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்