முதல் சர்வதேச போட்டியிலேயே வரலாறு படைத்த வீரர்! பாகிஸ்தானை அலறவிட்ட அப்பாஸ்

29 பங்குனி 2025 சனி 10:13 | பார்வைகள் : 616
பாகிஸ்தானுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 73 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
நேப்பியரில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி 50 ஓட்டங்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது.
எனினும் மார்க் சாப்மேன், டேர்ல் மிட்சேல் கூட்டணி வாணவேடிக்கை காட்டியது. அரைசதம் அடித்த டேர்ல் மிட்சேல் 84 பந்துகளில் 76 ஓட்டங்கள் விளாசி ஆட்டமிழந்தார்.
பின்னர் அறிமுக வீரர் முகமது அப்பாஸ் களம் கண்டார். அவரும் சிக்ஸர்களை பறக்கவிட ஜெட் வேகத்தில் ஸ்கோர் உயர்ந்தது.
சாப்மேன் தனது 3வது சதத்தை விளாசினார். 111 பந்துகளை எதிர்கொண்ட மார்க் சாப்மேன் (Mark Chapman) 6 சிக்ஸர், 13 பவுண்டரிகளுடன் 132 ஓட்டங்கள் விளாசி அவுட் ஆனார்.
மறுபுறம் விக்கெட்டுகள் சரிய, அதிரடியில் மிரட்டிய முகமது அப்பாஸ் (Muhammad Abbas) 26 பந்துகளில் 3 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 52 ஓட்டங்கள் விளாசினார்.
24 பந்துகளில் அரைசதம் அடித்த அப்பாஸ், அறிமுக ஒருநாள் போட்டியில் அதிவேகமாக 50 ஓட்டங்களை எட்டிய முதல் வீரர் எனும் சாதனையை படைத்தார். இதற்கு முன்பு இந்திய அணியின் குர்ணால் பாண்ட்யா 26 பந்துகளில் அரைசதம் அடித்ததே சாதனையாக இருந்தது.
நியூசிலாந்து அணி 50 ஓவரில் 344 ஓட்டங்கள் குவித்தது. இர்ஃபான் கான் 3 விக்கெட்டுகளும், அகிப் ஜாவித் மற்றும் ஹாரிஸ் ராஃப் தலா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
பின்னர் ஆடிய பாகிஸ்தான் அணியில் அப்துல்லா ஷாபிஃக் (36), உஸ்மான் கான் (39) நல்ல தொடக்கம் தந்தனர். அடுத்து வந்த பாபர் அசாம் அதிரடி காட்ட, அணித்தலைவர் முகமது ரிஸ்வான் 30 (34) ஓட்டங்களில் வெளியேறினார்.
அதனைத் தொடர்ந்து சல்மான் அஹா, பாபர் அசாம் கூட்டணி கைகோர்த்தது. பாபர் அசாம் (Babar Azam) 83 பந்துகளில் 3 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 78 ஓட்டங்கள் விளாசினார்.
சல்மான் அஹா நின்று ஆட, ஏனைய வீரர்கள் வந்த வேகத்தில் ஆட்டமிழந்து வெளியேறினர். இதனால் பாகிஸ்தான் அணி 44.1 ஓவரில் 271 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது. நியூசிலாந்தின் நாதன் ஸ்மித் 4 விக்கெட்டுகளும், ஜேக்கப் டுஃபி 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.