ஊழலுக்கு மன்னிப்பே கிடையாது: ஆர்ப்பாட்டத்தில் வாசன் பேச்சு

30 பங்குனி 2025 ஞாயிறு 06:59 | பார்வைகள் : 1844
இந்தியாவை அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய, பல கோடி ரூபாய் டாஸ்மாக் ஊழலுக்கு மன்னிப்பே கிடையாது'' என, த.மா.கா., தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.
தி.மு.க., அரசின் டாஸ்மாக் ஊழலை கண்டித்து, சென்னை மாவட்ட த.மா.கா., சார்பில், நேற்று சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு வாசன் பேசியதாவது:
வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிய, தி.மு.க., ஆட்சியை மக்கள் வீட்டிற்கு அனுப்பத் தயாராகி விட்டனர்.
காஸ் சிலிண்டர், டீசல் மானியம், கரும்புக்கு குறைந்தபட்ச ஆதார விலை, மாதம் ஒருமுறை மின்கட்டணம் கணக்கீடு, கல்விக்கடன் ரத்து, அரசு மற்றும் போக்குவரத்து ஊழியர்கள் கோரிக்கை, நீட் தேர்வு ரத்து என, தி.மு.க., கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை.
எங்கும் ஊழல், எதிலும் ஊழல் என்பதை மறைக்க, மொழி மற்றும் தொகுதி சீரமைப்பு பிரச்னையை கையில் எடுத்துள்ளனர். தொகுதி மறு சீரமைப்பால், தொகுதிகள் எண்ணிக்கை கூடுமே தவிர, குறையாது. அனைத்து தரப்பு மக்களும் தி.மு.க., மீது கோபமாக உள்ளனர். ஒத்த கருத்துடைய கட்சிகள் ஒன்றிணைய வேண்டும்.
தமிழக மக்களை குழப்பி ஓட்டுகளைப் பெற தி.மு.க., முயற்சிக்கிறது. பல கோடி ரூபாய் டாஸ்மாக் ஊழல், இந்தியாவையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. மக்களின் ரத்தத்தைக் குடிக்கும் அவர்களுக்கு மன்னிப்பே கிடையாது. எங்கள் கூட்டணி அவர்களுக்கு தண்டனை கொடுக்கும்.
இவ்வாறு, அவர் பேசினார்.