உப்புத் தண்ணீரில் கரையும் புதிய பிளாஸ்டிக் கண்டுபிடிப்பு: ஜப்பான் ஆராய்ச்சியாளர்கள் சாதனை

30 பங்குனி 2025 ஞாயிறு 09:28 | பார்வைகள் : 345
உப்பு நீரில் கரையும் புரட்சிகரமான பிளாஸ்டிக்கை ஜப்பான் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
தினசரி வாழ்வில் நாம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகள், சுற்றுச்சூழல் மாசுபாடு, வன உயிரின அழிவு, மனிதர்களின் ஆரோக்கியக் கேடு போன்ற பல பிரச்சனைகளுக்கு முக்கிய காரணமாக உள்ளன.
நீண்ட காலமாக மட்காமல் இருக்கும் இவை, நிலம், நீர், காற்று என அனைத்தையும் மாசுபடுத்துகின்றன.
இந்த சவாலை எதிர்கொள்ள, ஜப்பானின் எமர்ஜென்ட் மேட்டர் சயின்ஸ் (செம்ஸ்) ஆய்வு மைய விஞ்ஞானிகள், உப்பு நீரில் கரையும் மக்கும் பிளாஸ்டிக் என்ற புரட்சிகரமான கண்டுபிடிப்பை நிகழ்த்தியுள்ளனர்.
இந்த புதிய வகை சுற்றுச்சூழல் நட்பு பிளாஸ்டிக், சாதாரண பயன்பாட்டின்போது உறுதியாகவும், திடமாகவும் இருக்கும். ஆனால், உப்பு நீரில் கரைந்தவுடன், இது தீங்கு விளைவிக்காத பொருட்களாக மாறி, சுற்றுச்சூழல் பாதிப்பை முழுமையாகத் தவிர்க்கிறது.
இந்த கண்டுபிடிப்பு குறித்து, ஆய்வுக் குழுவின் தலைவர் டகுசோ அய்தா கூறுகையில், "சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைக்கும் நோக்கில், சுப்ரமாலிகுலர் பிளாஸ்டிக் பாலிமர்களை பயன்படுத்தி இந்த புதிய பிளாஸ்டிக்கை உருவாக்கியுள்ளோம்.
இரண்டு அயனி மோனோமர்களை இணைப்பதன் மூலம் இது தயாரிக்கப்படுகிறது. இவை, வலிமை மற்றும் நெகிழ்வுத்தன்மையை வழங்குகின்றன என தெரிவித்துள்ளார்.
இந்த மோனோமர்களில் ஒன்று, உணவில் பொதுவாக சேர்க்கப்படும் சோடியம் ஹெக்ஸாமெட்டாபாஸ்பேட். மற்றொன்று பல குவானிடினியம் அயனி அடிப்படையிலான மோனோமர்.
இந்த இரண்டு மோனோமர்களும் பாக்டீரியாவால் வளர்சிதை மாற்றம் செய்யக்கூடியவை.
எனவே, பிளாஸ்டிக் உப்பு நீரில் கரைந்தவுடன், அது முழுமையாக மக்கிவிடும் தன்மையை உறுதி செய்கிறது," என தெரிவித்துள்ளார்.