தோனிக்கு முன்புபோல் கால் முட்டி இல்லை…! பயிற்சியாளர் ஸ்டீபன் ஃப்ளெம்மிங்

31 பங்குனி 2025 திங்கள் 12:56 | பார்வைகள் : 434
சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் எம்.எஸ்.தோனிக்கு முன்பு போல் உடல் வலிமை கிடையாது என்பதால், அவர் முன்னரே களமிறங்கி விளையாட முடியாது என பயிற்சியாளர் ஸ்டீபன் ஃப்ளெம்மிங் தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் எம்.எஸ்.தோனி, சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்றாலும் ஐபிஎல் தொடரில் CSK அணிக்காக தொடர்ந்து விளையாடி வருகிறார்.
43 வயதிலும் சிக்ஸர்களை பறக்கவிடும் தோனி, நடப்பு ஐபிஎல் தொடரில் விமர்சனங்களை சந்தித்து வருகிறார்.
சேஸிங்கில் அணி தடுமாறும்போது தோனி ஏன் முன்பே களமிறங்காமல், துடுப்பாட்ட வீரர்கள் அனைவரும் அவுட் ஆன பின் வருகிறார் என்ற கேள்வியை ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.
இந்த நிலையில், சென்னை அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் ப்ளெம்மிங் விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் வகையில் விளக்கம் கொடுத்துள்ளார்.
அவர் கூறுகையில், "எம்.எஸ்.தோனியின் உடல் வலிமையும், கால் முட்டியும் முன்பு இருந்ததைப் போல கிடையாது. அவரால் 10 ஓவர்கள் களத்தில் நின்று விளையாட முடியாது.
தன்னால் முடிந்தவரை அணிக்கு பங்களிப்பை தருகிறார். ஆட்டத்தின் தன்மை எப்படி உள்ளது என்பதைப் பொறுத்து, சில போட்டிகளில் சற்று முன்பாக களமிறங்குவார்" என தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில், தோனி 11 பந்துகளில் 1 சிக்ஸர், 1 பவுண்டரியுடன் 16 ஓட்டங்கள் விளாசினார் என்பது குறிப்பிடத்தக்கது.