வரலாற்று வெற்றி... கொல்கத்தாவை கதறவிட்ட மும்பை இந்தியன்ஸ்

1 சித்திரை 2025 செவ்வாய் 06:21 | பார்வைகள் : 187
கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை அணி அபார வெற்றி பெற்றது.
12-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. நாணய சுழற்சியில் வென்ற மும்பை முதலில் பந்துவீச்சை தெரிவு செய்தது.
மும்பை இந்தியன்ஸ் அணி முதன்முறையாக இந்த ஆண்டு வான்கடே மைதானத்தில் விளையாடுகிறது என்பதால் அந்த அணி மீது பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. அதற்கு ஏற்ப முதலில் துடுப்பாட்டம் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வேகப்பந்துவீச்சால் சின்னாபின்னம் ஆக்கியது மும்பை இந்தியன்ஸ்.
முதலில் ட்ரெண்ட் போல்ட் தான் வீசிய முதல் ஓவரிலேயே ஒரு விக்கெட் வீழ்த்தினார். அதன் பின் தீபக் சஹார் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அறிமுக வேகப்பந்துவீச்சாளர் அஸ்வனி குமார் மூன்று ஓவர்களில் 24 ஓட்டங்கள் விட்டுக் கொடுத்து நான்கு விக்கெட்டுகளை சாய்த்தார்.
ஹர்திக் பாண்டியா, விக்னேஷ் புத்தூர் மற்றும் மிட்செல் சாண்ட்னர் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 16.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 116 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது.
அந்த அணியில் அதிகபட்சமாக அங்குரிஷ் ரகுவன்ஷி 16 பந்துகளில் 26 ஓட்டங்கள் எடுத்திருந்தார். அவருக்கு அடுத்து ரமன்தீப் சிங் 12 பந்துகளில் 22 ஓட்டங்களை சேர்த்திருந்தார்.
அடுத்து 117 ஓட்டங்கள் என்ற இலக்கை நோக்கி மும்பை இந்தியன்ஸ் அணி விளையாடியது. ரோஹித் சர்மா 13 ஓட்டங்களிலும், வில் ஜாக்ஸ் 16 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர்.
துவக்க வீரர் ரயன் ரிக்கெல்டன் அதிரடியாக விளையாடி 41 பந்துகளில் 62 ஓட்டங்கள் சேர்த்தார். சூர்யகுமார் யாதவ் 9 பந்துகளில் 27 ஓட்டங்கள் சேர்த்திருந்தார். இவர்கள் இருவரும் ஆட்டமிழக்காமல் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றியை உறுதி செய்தனர்.
12.5 ஓவர்களில் எல்லாம் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி இலக்கை எட்டியது. மொத்தமாக 29.1 ஓவர்களில் ஒட்டுமொத்த போட்டியுமே முடிவுக்கு வந்தது.
இந்த வெற்றியின் மூலம் வான்கடே மைதானத்தில் ஒரே அணிக்கு எதிராக அதிக வெற்றிகளைப் பெற்று சாதனை படைத்திருக்கிறது மும்பை இந்தியன்ஸ் அணி.