'குட் பேட் அக்லி' படம் எப்படி இருக்கு?

1 சித்திரை 2025 செவ்வாய் 09:53 | பார்வைகள் : 322
அஜித்தின் படங்களுக்கு எப்போதுமே ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவும், அந்த வகையில் அதீத எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான 'விடாமுயற்சி' திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய தவறியது. ரூ.350 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்திருந்தது. இந்த படத்தை இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கி இருந்த நிலையில், த்ரிஷா கதாநாயகியாக நடித்திருந்தார். அனிரூத் இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு, அஜர்பைஜான் நாட்டில் நிலவிய கால நிலை மாற்றம் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில், ஆதிக் ரவிச்சந்திரன் கூறிய கதை பிடித்ததால், அவரின் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார் அஜித். அதன்படி, ஆதிக் - அஜித் காம்போவில் உருவான... 'குட் பேட் அக்லி' படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு மே மாதம் ஸ்பெயின் நாட்டில் தொடங்கியது. பின்னர் ரஷ்யாவின் பல்வேறு இடங்களில் எடுக்கப்பட்ட இப்படம் கடந்த டிசம்பர் மாதம் முடிவுக்கு வந்தது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இப்படம் வெளியாகும் என கூறப்பட்ட நிலையில், பொங்கலுக்கு 'விடாமுயற்சி' ரிலீஸ் ஆனதால், 'குட் பேட் அக்லி' ரிலீஸ் தேதி தள்ளி போனது. பின்னர் ஏப்ரல் மாதம் 10-ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், படத்தின் ரிலீசுக்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில், படத்தின் புரோமோஷன் பணிகள் ஒருபுறம் பரபரப்பாக சென்று கொண்டிருக்க... படம் குறித்த சில சுவாரஸ்ய தகவலும் அவ்வப்போது வெளியான வண்ணம் உள்ளது.
அதன்படி, வெளிநாட்டிற்காக அனுப்பவேண்டிய பதிவு சென்சார் செய்யப்பட்ட நிலையில், படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் ஒரு இடத்தில் கூட கத்தரி போடாமல், படம் மிகவும் அருமையாக வந்துள்ளதாக படக்குழுவை பாராட்டி உள்ளனர். சென்சார் தரப்பில் இருந்தும் இந்த படம் மிகப்பெரிய ஹிட் அடிக்கும் என கூறப்படுகிறது. இப்படத்தில் அஜித்துடன் இணைந்து, த்ரிஷா, சுனில், பிரசன்னா, அர்ஜுன் தாஸ் என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். அஜித் பல கெட்டப்பில் மிரட்டியுள்ள இந்த படத்தில் இருந்து, இதுவரை இரண்டு பாடல்கள் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.