Paristamil Navigation Paristamil advert login

திரியாய் மக்களின் நிலங்கள் ஆக்கிரமிப்பு- உரிமையாளர்கள் ஆதங்கம்!

திரியாய் மக்களின் நிலங்கள் ஆக்கிரமிப்பு-  உரிமையாளர்கள் ஆதங்கம்!

1 சித்திரை 2025 செவ்வாய் 11:10 | பார்வைகள் : 170


திரியாய் கிராமமானது திரியாய், மரவடிச்சோலை, கல்லறாவ ஆகிய கிராம சேவகர் பிரிவுகளை உள்ளடக்கியதாக காணப்படுகிறது. இங்கு தமிழர்கள் 531 பேர், சிங்களவர்கள் 274 பேர், முஸ்லிம் ஒருவர் என 806 பேர் வசித்து வருகின்றார்கள்.

வன வள பாதுகாப்பு திணைக்களத்தினால் திரியாய் வட்டாரத்தில் 3000 ஏக்கருக்கு மேற்பட்ட மக்கள் விவசாயம் செய்த நிலங்கள் 1987 மற்றும் 2012ஆம் ஆண்டுகளுக்குப் பின்னர் கையகப்படுத்தப்பட்டுள்ளன.

அந்த வகையில் பின்வரும் கிராம சேவகர் பிரிவுகளில் கையகப்படுத்தப்பட்டுள்ள, மக்கள் காலாகாலமாக பயன்படுத்திவந்த 2712 ஏக்கர் காணிகளை விடுவிக்குமாறு தொடர்ச்சியாக கோரிக்கை விடுக்கப்பட்டு வருகின்றபோதும் இதுவரை எவ்வித முன்னேற்றமும் இல்லை.

செந்தூர் கிராம சேவகர் பிரிவில் 474 ஏக்கரும் கல்லம்பத்தை கிராம சேவகர் பிரிவில் 636 ஏக்கரும் கட்டுக்குளம் கிராம சேவகர் பிரிவில் 1080 ஏக்கரும் திரியாய் கிராம சேவகர் பிரிவில் 522 ஏக்கருமான காணிகளை விடுவிக்குமாறு கோரி விண்ணப்பிக்கப்பட்டு வருகின்றன.

இப்பகுதியில் உள்ள 4 இராணுவ முகாம்களுக்காகவும் 3 கடற்படை முகாம்களுக்காகவும் 55 ஏக்கருக்கு மேற்பட்ட மக்களுடைய காணிகள் வழங்கப்பட்டுள்ளதுடன் திரியாய் மக்கள் நீண்டகாலமாக சுடுகாடாக பயன்படுத்தி வந்த 80 ஏக்கர் காணியும் கடற்படையினரால் கையகப்படுத்தப்பட்டுள்ளது.

தொல்லியல் திணைக்களத்தினால் 466 ஏக்கருக்கு மேற்பட்ட காணிகள் கையகப்படுத்தப்பட்டுள்ளதுடன். திரியாய் கிராமத்தில் உள்ள 2020.08.20 அன்று பதிவு செய்யப்பட்ட பத்மராஜ பபத புராண ரஜமகா விகாரைக்கு பூஜாபூமி மற்றும் அளிப்பு மூலமாக 44.325 ஹெக்டேயர் காணியும், திரியாய் கிராமத்தில் உள்ள 2018.05.30 அன்று பதிவு செய்யப்பட்ட சப்தநாக பபத வன செனசுந்த விகாரைக்கு 2019.07.06 அன்று அளவையிடப்பட்டு அளிப்பு மூலமாக 20.2343 ஹெக்டேயர் காணியும், கல்லறாவ கிராமத்தில் உள்ள 2022.08.20 அன்று பதிவு செய்யப்பட்ட தபசு பல்லுக வனசெனசுன விகாரைக்கு அளிப்பு மூலமாக 2020.12.30 அன்று 2.4598 ஹெக்டேயர் காணியும் ஒதுக்கப்பட்டு அளிக்கப்பட்டது.

 (2020.10.02 வர்த்தமானி) எனினும் இவற்றை விட மேலதிகமான காணிகளையும் கையகப்படுத்தியுள்ளனர்.

வனவள பாதுகாப்புத் திணைக்களத்தினர் திரியாய் பகுதியில் ஏறத்தாழ 2000 ஏக்கரில் எல்லைக் கற்களை போட்டு, அதற்குள் மக்களை செல்ல விடாத ஒரு சூழ்நிலையில், ஆத்திக்காடு பகுதியில் 349 ஏக்கரையும், திரியாய் குள வயலில் 107 ஏக்கரையும், குறுப்பிட்டி கண்டலில் 400 ஏக்கரையும், வேடன்குளத்தில் 310 ஏக்கர் நிலத்தையும் விடுவிப்பதற்கான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டும் அதில் எவ்வித முன்னேற்றமும் இல்லை.

புல்மோட்டை அரிசிமலை விகாரையின் விகாராதிபதியான பானாமூரே திலகவன்ச நாயக்க தேரர் ஆத்திக்காட்டு வெளிப் பகுதியில் உள்ள தமிழ் மக்கள் காலாகாலமாக விவசாயம் செய்துவந்த 64 ஏக்கரை தனியாகவும், 18 ஏக்கரை தனியாகவும் குச்சவெளி கமநல சேவை நிலையத்தில் தற்காலிகமாக பதிவு  செய்துகொண்டு, மொத்தமாக 82 ஏக்கர் காணியை ஆக்கிரமித்து விவசாயம் செய்து வருகிறார். இதில் வைத்தியநாதன் தமயந்திதேவி என்பவருக்கு 5 ஏக்கர் பிரித்தானியர் காலத்து உறுதிக் காணியும் காணப்படுகிறது.

நீண்டகாலமாக பௌத்த பிக்குவால் ஆக்கிரமிக்கப்பட்டு செய்கையிடப்பட்டு வருகின்ற விவசாய காணிகளை விடுவிக்குமாறு மாவட்ட அரசாங்க அதிபரிடம் மக்கள் முறையிட்டதையடுத்து 07.10.2024 அன்று அரசாங்க அதிபரின் தலைமையில் மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின்போது ஆவணங்கள் உள்ள காணிகளில் விவசாயம் மேற்கொள்ளுமாறு அரச அதிபர் பணிப்புரை வழங்கியிருந்தார்.

இக்கலந்துரையாடலில் அரச அதிகாரிகள், அரிசிமலை விகாரையின் விகாராதிபதி பானாமூரே திலகவன்ச நாயக்க தேரர் உட்பட பௌத்த மதகுருமார்கள், தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்கள விவசாயிகள் உட்பட 30க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டிருந்தனர்.

மறுநாள் அப்பகுதியில் விவசாயிகள் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடச் சென்றபோது அந்த  விகாராதிபதி விவசாயப் பணிகளுக்கு தடை ஏற்படுத்தியிருந்தார்.

இந்நிலையில் கிழக்கு மாகாண ஆளுநரின் ஏற்பாட்டில் 15.10.2024 அன்று குச்சவெளி பிரதேச செயலாளர் அலுவலகத்தில் கலந்துரையாடல் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இக்கலந்துரையாடலில் ஆளுநரின் பிரத்தியேக செயலாளரும் குச்சவெளி பிரதேச சபையின் செயலாளருமான ராஜசேகர், கிழக்கு மாகாண காணி ஆணையாளர், உதவி பொலிஸ் அத்தியட்சகர், பொலிஸ் உயர் அதிகாரிகள், அரிசி மலை விகாரையின் விகாராதிபதி பானாமூரே திலகவன்ச நாயக்க தேரர் மற்றும் விவசாயிகள் உட்பட பலர் கலந்துகொண்டிருந்தனர்.

இதன்போது கருத்து தெரிவித்த பொதுமக்கள், தங்களுடைய உறுதி காணிகளை பௌத்த மதகுரு ஆக்கிரமித்து விவசாயம் செய்து வருவதாகவும் அதனை மீட்டுத் தருமாறும் கோரினர்.
அதனையடுத்து, கருத்து தெரிவித்த பௌத்த மதகுரு, தன்னிடம் 18 ஏக்கர் உறுதி காணியும் 50 ஏக்கர் பூஜா பூமிக்குரிய காணியும் இருப்பதாக கூறியதோடு, அதற்கு மேலதிகமாக இருக்கிற காணியில் பொதுமக்கள் விவசாயம் செய்வதில் தனக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை எனவும் தெரிவித்தார்.

அதன் பின்னர், காணி அளக்கும் நடவடிக்கையை முன்னெடுக்குமாறு சபையில் தெரிவிக்கப்பட்டது.

வனவள பாதுகாப்பு திணைக்கள உத்தியோகத்தர், தொல்லியல் துறையினர், கிராம உத்தியோகத்தர் உட்பட ஏனைய அரச அதிகாரிகள் முன்னிலையில் காணி அளவீடு செய்து பௌத்த பிக்குவுக்குரிய பகுதியை வழங்கி ஏனைய பகுதிகளில் மக்களை விவசாயம் செய்யுமாறு சபையில் முடிவு எட்டப்பட்டது.

அந்த வகையில் மறுநாள் 16.10.2024 அன்று நில அங்கீகாரம் பெற்ற நில அளவையாளரான கணபதிப்பிள்ளை சிவானந்தன் என்பவரினால் நில அளவை செய்யப்பட்டு பௌத்த மதகுருவுக்கு சொந்தமான காணி என கூறப்படுகின்ற 18 ஏக்கர் காணியும், பூஜா பூமி எனும் பெயரில் வழங்கப்பட்ட 50 ஏக்கர் காணியும் அளவீடு செய்து வழங்கப்பட்டு, ஏனைய பகுதிகள் மக்களுடைய விவசாய நடவடிக்கைகளுக்காக வழங்கப்பட்டன. எனினும், அக்காணிகளில் மீண்டும் விவசாயப் பணிகளில் ஈடுபட பௌத்த மதகுரு தடையாக இருப்பதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

 அது மட்டுமன்றி, காலாகாலமாக வழிபட்டு வந்த நாகதம்பிரான் ஆலயத்துக்கு சென்று வழிபடவும் இந்த மதகுரு தடையாக இருப்பதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

திரியாய் பகுதியைச் சேர்ந்த விவசாயி நடராஜபிள்ளை மாணிக்கநடராசா இது தொடர்பாக கூறுகையில்,
“திரியாய் கிராமத்தில் நாங்கள் பரம்பரை பரம்பரையாக வசித்து வருகின்றோம். எங்களுடைய வாழ்வாதார தொழில் விவசாயமும் கால்நடை வளர்ப்பும் ஆகும். எங்களுக்கு வளத்தாமலைப் பகுதியில் 28 ஏக்கர் உறுதிக் காணி இருக்கின்றது. இதனை அப்பா, அப்பாவின் அப்பா காலத்தில் இருந்து நாங்கள் செய்து வருகின்றோம்.

1965ஆம் ஆண்டில் இருந்து அந்தக் காணியில் நான் விவசாயம் செய்து வருகின்றேன்.
நாட்டில் ஏற்பட்ட யுத்தம் காரணமாக 1984ஆம் ஆண்டு இடம்பெயர்ந்து வன்னி பகுதிக்கும் இந்தியாவுக்கும் சென்றோம். 2002ஆம் ஆண்டு திரியாய் மீள்குடியேற்றப்பட்டபோது நான் இந்தியாவில் இருந்ததால் வர முடியாமல் போனது. பின்னர் 2010ஆம் ஆண்டளவில் நான் எமது கிராமத்துக்கு வந்து எமது காணிகளில் விவசாயம் செய்வதற்காக சென்றபோது வனவளத்துறையினர் எங்களை அப்பகுதிக்குள் செல்ல விடாது தடுத்தனர். இந்நிலையில் 2020ஆம் ஆண்டு அரிசிமலைப் பிக்கு வந்து எமது உறுதிக் காணிகளில் விவசாயம் செய்து வருகிறார்.
இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியும் எவ்வித பலனும் இல்லை. எங்களுடைய உறுதிக் காணிகளில் விவசாயம் செய்யச் செல்லும் எம்மை தடுத்துக்கொண்டு பௌத்த பிக்கு காட்டைத் தள்ளி, விவசாயம் செய்ய ஆதரவாக வனவளத்துறையினர் செயற்படுகின்றார்கள்.
2020ஆம் ஆண்டில் இருந்து இற்றை வரைக்கும் எமது காணிகளை தனக்கு வேண்டிய சிங்கள மக்களுக்கு குத்தகைக்கு வழங்கி குத்தகை பெற்று வருகிறார். இன்னும் எமது காணியில் எம்மால் விவசாயம் செய்ய முடியாத சூழ்நிலையே காணப்படுகிறது. ஊழல் அற்ற புதிய அரசாங்கம் வந்திருக்கிறது என்கிறார்கள். ஆனால் எம்மைப் போன்ற ஏழை மக்களுக்கு நீதி என்பது எட்டாக்கனியாகவே இருக்கிறது.
அதுமட்டுமல்லாமல் காலாகாலமாக எமது மக்கள் வழிபட்டு வந்த “வளத்தாமலையான்” என்று அழைக்கப்படுகின்ற நாகதம்பிரான் ஆலயத்தையும் அரிசிமலைப் பிக்கு தங்களுடைய நாக விகாரை என்று சொல்லிக்கொண்டு எமது மக்களை வழிபட விடாமல் தடுத்து வருகின்றார்.

இந்த ஆலயத்தில் எமது பரம்பரையினரே பூசை செய்து வருகின்றனர். எனது அப்பாவுக்குப் பிறகு நான்தான் பூசாரியாக கடமையாற்றி வருகின்றேன். அருகில் உள்ள புல்மோட்டையைச் சேர்ந்த முஸ்லிம் மக்களும் வளத்தாமலையானுக்கு நேர்த்திக்கடன் வைத்து, நூல் கட்டுவதற்கும் திருநீறு இடுவதற்கும் வருவார்கள்.

ஒவ்வொரு வருட ஆரம்பத்திலும் வளத்தாமலையானுக்கு பொங்கிப் படைத்துதான் எமது விவசாய நடவடிக்கைகளை தொடங்குவோம். மாடு கன்று போட்டால் முதல் கறக்கின்ற பாலை வளத்தாமலையானுக்கு பொங்கித்தான் நாங்கள் பாவனைக்கு எடுப்போம். இதை எமது மக்கள் எனக்கு நினைவு தெரிந்த காலத்தில் இருந்தே செய்து வருகின்றார்கள். எமது ஆலயத்தையும் சப்த நாக பபத விகாரை என சொல்லிக்கொண்டு அதையும் ஆக்கிரமித்து அதைச் சுற்றியுள்ள தமிழ் மக்களுடைய காணிகளையும் ஆக்கிரமித்து வைத்துக்கொண்டிருக்கின்றார்கள்.

எமக்கு ஏதேனும் துன்பம் நேர்ந்தால் எமது வளத்தாமலையானுக்கு நேர்த்தி வைப்போம். ஆனால், எமது நேர்த்திக்கடனைக் கூட செலுத்த முடியாமல் பல வருடகாலமாக எமது மக்கள் தவித்து வருகின்றார்கள். சிலர் 2 கிலோமீற்றர் தூரத்தில் உள்ள பிரதான வீதியில் இருந்து நேர்த்திக்கடன்களை நிறைவேற்றி வருகின்றனர். எமது வளத்தாமலையானை வழிபடுவதற்கு எமது அனுமதி வழங்கப்பட வேண்டும். தற்போது இந்த பகுதியில் புதையல் தோண்டியிருப்பதாகவும் அறிகின்றோம்” என தெரிவித்தார்.

“திரியாய் கிராமத்தில் நாங்கள் பரம்பரை பரம்பரையாக வசித்து வருகின்றோம். எமக்கு வளத்தாமலை கண்டப்பன் வயல் பகுதியில் எமது பாட்டனார் காலத்துக்கு முற்பட்ட காலத்தில் இருந்து 15 ஏக்கர் வயற்காணி இருக்கிறது.

நாட்டில் ஏற்பட்ட யுத்த சூழ்நிலை காரணமாக இறுதியாக 1995ஆம் ஆண்டு காலப்பகுதியில் இடம்பெயர்ந்து 2009ஆம் ஆண்டில் மீள குடியமர்த்தப்பட்டோம். பின்னர் 2015ஆம் ஆண்டு காலப்பகுதியில் இருந்து எமது காணியை துப்புரவு செய்து விவசாயத்தில் ஈடுபட முயற்சி செய்தபோதும் வனவள பாதுகாப்புத் துறையினர், தொல்லியல் துறையினர் உட்பட அரச துறையினர் எமக்கு அனுமதி அளிக்கவில்லை.  

இந்நிலையில் எமது காணிகளை பௌத்த பிக்கு ஒருவர் அடாத்தாக பிடித்து அதை சிங்கள மக்களுக்கு குத்தகைக்கு கொடுத்து, அவர்கள் அங்கு விவசாயம் செய்து வருகின்றனர். இது தமிழ் மக்களுக்கும் சிங்கள மக்களுக்கும் இடையே சமூகப் பிரிவினையை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது.

குறிப்பாக 80 தொடக்கம் 100 ஏக்கர் வரையான தமிழ் மக்களுக்குச் சொந்தமான காணிகளை பௌத்த பிக்குகள் அடாத்தாக பிடித்து விவசாயம் செய்து வருவதால் எமது மக்களுடைய வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்படுகிறது.

முழுக்க முழுக்க விவசாயத்தை நம்பியே இந்த கிராம மக்கள் வாழ்ந்து வருகின்றார்கள். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இவர்களுடைய உறுதிக்காணிகளை பௌத்த பிக்குகளிடம் இருந்து மீட்டு காணி உரிமையாளர்களிடம் கையளிக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்” என்றார்.

ஓய்வுபெற்ற அதிபர் கனகசுந்தரம் சௌந்தராசா கருத்து தெரிவிக்கையில்,
“1985ஆம் ஆண்டுக்கு முன்னர் அதாவது திரியாயில் யுத்தம் இடம்பெறுவதற்கு முன்னர் எமது திரியாய் கிராமம் செல்வம் கொளிக்கும் ஊராக இருந்தது. எமது மக்கள் தன்னிறைவடைந்திருந்தனர். இதற்கு காரணம் விவசாயமும் கால்நடை வளர்ப்பும்தான். இதனால் அயல் கிராமங்களில் இருந்து குறிப்பாக திருகோணமலை நகரத்தில் இருந்து நிதி சேகரிக்க எமது கிராமத்துக்குத்தான் வருவார்கள்.

நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக எமது மக்கள் இடம்பெயர்ந்து பல்வேறு இடங்களுக்குச் சென்று மீண்டும் 2002ஆம் ஆண்டு மீள குடியமர்த்தப்பட்டார்கள். நீண்டகாலமாக எமது மக்கள் கிராமத்தில் இல்லாததன் காரணமாக அவர்களுடைய பொருளாதாரம் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளது.

இந்நிலையில் அவர்களுடைய பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் முகமாக தமது ஜீவனோபாயத் தொழிலான விவசாயத்தை மேற்கொள்வதற்கு வனவள திணைக்களம், வன ஜீவராசிகள் திணைக்களத்தினர் எல்லைக் கற்களை போட்டு அப்பகுதிக்குள் செல்ல விடாமல் தடுத்து  வருகின்றனர்.

தொடர்ச்சியாக விவசாயம் செய்யாததன் காரணமாக பற்றைக் காடுகள் வளர்ந்துள்ளன. எனினும் அப்பகுதியில் இன்னமும் வயல் வரம்புகள் காணப்படுகின்றன. குறிப்பாக ஆத்திக்காடு, கொம்பெடுத்தான்மடு, கல்லம்பத்தை உட்பட பல பகுதிகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.

ஆத்திக்காடு வளத்தாமலை பகுதியில் ஒரு மலை இருக்கிறது. இதில் நாகதம்பிரான் ஆலயம் ஒன்று இருக்கிறது. இதில் மாதாந்தம் மற்றும் வருடாந்தம் பொங்கல் மற்றும் பூசை நிகழ்வுகளை எமது மக்கள் செய்து வந்தார்கள். ஆனால், அது தற்போது பௌத்த பிக்குவால் கையகப்படுத்தப்பட்டுள்ளதுடன் அதனைச் சுற்றியுள்ள தமிழ் மக்களுடைய பிரித்தானிய உறுதிக் காணிகளையும் அத்துமீறி பிடித்து குத்தகைக்கு வழங்கி வருமானம் ஈட்டி வருகின்றார். எமது மக்கள் அங்கு சென்றால் அச்சுறுத்தப்பட்டு விரட்டியடிக்கப்படுகின்றார்கள்.

அத்துடன் நீலப்பனிக்கனுக்கு அப்பால் இருக்கின்ற கொம்பெடுத்தமடு பிரதேசத்தில் 1985ஆம் ஆண்டுக்கு முன்னர் விவசாயம் செய்த தமிழ் மக்களுடைய எல்லைக் காணிகளை தமது எல்லைகள் என கூறிக்கொண்டு சுமார் 700 ஏக்கருக்கு மேற்பட்ட காணிகளை ஆக்கிரமித்து,  சகோதர இன மக்கள் விவசாயம் செய்து வருகின்றனர். அது மட்டுமல்லாமல் தற்போது விவசாயம் செய்யப்படுகின்ற பகுதிகளுக்கு அருகில் உள்ள பற்றைக்காடுகளை எமது மக்கள் துப்புரவு செய்தாலும், அவர்கள் கைது செய்யப்படுகின்றனர்.

எனவே மக்கள் பயிர்ச்செய்கையிட்ட காணிகளுக்கு அதிகாரிகள்  வந்து ஆராய்ந்து அவற்றை மீள பெற்றுக்கொடுக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும்” என குறிப்பிட்டார்.
ஆத்திக்காட்டு விவசாயி கிருஸ்ணபிள்ளை சதீஸ்வரன் தனது எண்ணக்கருத்தை வெளிப்படுத்துகையில்,

“எங்களுக்கு ஆத்திக்காட்டு வெளியில் வயல்காணி இருக்கின்றது. இது என்னுடைய அப்பப்பா, அப்பா என பரம்பரையாக விவசாயம் செய்து வருகின்ற காணி. 10 ஏக்கர் அளவில் இந்த காணி காணப்படுகிறது.
நாங்கள் 1985ஆம் ஆண்டு இடம்பெயர்ந்து மீண்டும் 1990ஆம் ஆண்டு வந்து இந்த வயற்காணியில் விவசாயம் செய்தோம். பின்னர்,  1990ஆம் ஆண்டில் மீண்டும் இடம்பெயர்ந்து 2002ஆம் ஆண்டில் மீள்குடியேறி எங்கள் கிராமத்துக்கு வந்தோம்.
அந்த யுத்த காலத்தில் காணியை துப்புரவாக்கி வயல் நிலமாக்க உரிய அனுமதி தரப்படவில்லை. நாங்கள் அனுமதி பெற்று இந்த காணிகளை சீரமைக்க முற்பட்டபோது வளத்தாமலை பகுதியில் பௌத்த பிக்கு ஒருவர் வந்திருந்து, இங்கு எவரையும் விவசாயம் செய்ய விடவில்லை. இதனால் நீதிமன்றத்துக்கு சென்றதையடுத்து, தீர்ப்பு எமக்கு சார்பாக வந்தது. அதன் பின்னரும் அந்த பிக்கு எம்மை விவசாயம் செய்ய விடவில்லை. அதன் பின்னரும் இந்த விடயத்தை பாராளுமன்ற உறுப்பினர், பிரதேச செயலாளர் உட்பட பலருக்கு தெரியப்படுத்தினோம். ஆனால், எந்த தீர்வும் எமக்கு கிடைக்கவில்லை.

தற்போது வந்திருக்கின்ற புதிய அரசாங்கத்தில் எமக்கு நல்லதொரு தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் மாவட்ட செயலகத்தில் வைத்து காணி பிரச்சினை தொடர்பாக முறையிட்டோம். அப்போது, ஆவணங்கள் இருப்பவர்கள் காணிகளில் விவசாயம் செய்யுங்கள் என கூட்டத்தில் கூறப்பட்டது. அதை நம்பி விவசாயம் செய்ய வந்தபோது மீண்டும் பிக்கு பொலிஸ் அதிகாரிகளை அழைத்து வந்து தடை விதித்தார்.

பின்னர் ஆளுநரின் தலைமையில் குச்சவெளி பிரதேச செயலகத்தில் கூட்டமொன்று ஒழுங்குபடுத்தப்பட்டது. அதன் ஊடாக, பிக்குவுக்கு உரிய காணியை அளந்து கொடுத்துவிட்டு, எமது காணிகள் அளிக்கப்பட்டதையடுத்து, அங்கு விவசாயம் செய்ய முற்படுகின்றவேளையிலும் பௌத்த பிக்கு மீண்டும் தடைவிதித்து வருகிறார்.

சொந்த வயற்காணிகளை வைத்துக்கொண்டு அரிசியை விலைக்கு வாங்கி சாப்பிடும் நிலைக்கு நாங்கள் தள்ளப்பட்டுள்ளோம். எனவே, திரியாய் விவசாயிகளான நாங்கள் தற்போது பதவி வகித்திருக்கும் ஜனாதிபதியை நம்புகின்றோம். இந்த அரசாங்கத்தில் எமது மக்களுக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் என நம்புகின்றோம்” என தெரிவித்தார்.
திரியாய் விவசாய சம்மேளனத்தின் தலைவர் அற்புதராஜன் டனுர்சன் கூறுகையில்,
“எமது திரியாய் மக்களுக்கு ஆத்திக்காடு – வளத்தாமலை பகுதியில் 125 வருட பழமை வாய்ந்த, பிரித்தானியரால் வழங்கப்பட்ட உறுதியுடைய காணி இருக்கிறது. எனினும், அந்த காணிகளை அரிசிமலை விகாரையின் விகாராதிபதி பானாமூரே திலகவன்ச நாயக்க தேரர் 2020ஆம் ஆண்டில் இருந்து இற்றை வரை அடாத்தாக பிடித்து ஆக்கிரமித்து வருகிறார்.

இந்நிலையில், புதிய அரசாங்கம் வந்த பின்னர் கிழக்கு ஆளுநரின் ஆலோசனைக்கு அமைய, 07.10.2024 அன்று மாவட்ட செயலகத்துக்கு எம்மையும் பௌத்த பிக்குவையும் மாவட்ட செயலாளர் அழைத்து, எங்களது ஆவணங்களை பரிசீலனை செய்து ஆவணங்கள் இருப்பவர்கள் விவசாயம் செய்யலாம் என தெரிவித்திருந்தார். ஆனால், மறுநாள் வயலுக்குச் சென்றபோது பௌத்த பிக்கு விவசாயிகளை விரட்டியடித்தார். பின்னர் 15.10.2024 அன்று குச்சவெளி பிரதேச சபையில் கூட்டம் நடைபெற்று, அதன் ஊடாக பௌத்த பிக்குவுக்குரிய காணி அளந்து கொடுக்கப்பட்டதோடு, மக்களுடைய காணிகளில் மக்கள் விவசாயம் செய்யலாம் என்றும் கூறப்பட்டது. எனினும் தொடர்ந்து அந்த பௌத்த பிக்கு எமது மக்களுடைய காணிகளில் விவசாயம் செய்வதற்கு தடையாக இருந்து வருகின்றார்.

பௌத்த பிக்கு எமது உறுதிக்காணிகளை அடாத்தாக பிடித்து குத்தகைக்கு கொடுத்து வருடாவருடம் இலட்சக்கணக்கில் சம்பாதித்து வருகின்றார். அத்துடன் மாடி வீடு கட்டி வசித்து வருகின்றார். ஆனால் எமது மக்கள் வாழ்வாதாரம் இன்றி வறுமையில் வாடி வருகின்றார்கள். எனவே எமது மக்களுக்கு புதிய அரசாங்கத்திலாவது நியாயமான தீர்வு கிடைக்க வேண்டும்” என்று குறிப்பிட்டார்.
விவசாயி அற்புதராஜன் கௌசலா கூறுகையில்,

“எமது திரியாய் கிராமத்தில் ஆத்திக்காடு எனப்படுகின்ற வயல்பகுதி 880 ஏக்கர்களை கொண்டதாக காணப்படுகின்றது. இது எமது மூதாதையர் காலத்தில் இருந்து அதாவது 1900 ஆண்டுகளுக்கு முற்பட்ட காலத்தில் இருந்து செய்கை பண்ணப்பட்டு வருகின்றது. எனக்கு இங்கு பரம்பரைக் காணி 10 ஏக்கர் இருக்கிறது. இந்த காணிகளில் 1990ஆம் ஆண்டு வரை விவசாயம் செய்து வந்தோம்.

பின்னர் யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து வெளிமாவட்டங்களுக்கு சென்றதால் இந்தக் காணிகளில் செய்கையிட முடியாமல் போனது. 2002ஆம் ஆண்டுக்கு பிற்பட்ட காலத்தில் மீள்குடியேற்றம் நடந்தது. தொடர்ந்தும் 2009ஆம் ஆண்டும் மீள்குடியேற்றம் நடந்தது. அதன் பின்னர், எமது ஜீவனோபாய தொழிலான விவசாயத்தை நம்பித்தான் நாங்கள் இந்த கிராமத்தில் மீள குடியேறி இருக்கிறோம். நீண்டகாலமாக பயிர் செய்யாமல் பற்றை வளர்ந்து கிடக்கும் காணிகளை துப்புரவு செய்வதற்காக எம்மிடம் இருக்கின்ற உறுதி மற்றும் அனுமதிப்பத்திரங்களை காணிபித்தும் வனவள பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் எம்மை விடவில்லை. ஆனால், பௌத்த பிக்கு எமது காணிகளை துப்புரவு செய்து விவசாயம் செய்வதற்கு திணைக்கள அதிகாரிகளும் உடந்தையாக இருந்து வருகின்றார்கள்.

அரிசிமலை பிக்கு மக்களுடைய பெருமளவான காணிகளை ஆக்கிரமித்து விவசாயம் செய்து வருகின்றார். அதில் 82 ஏக்கர் காணியை குச்சவெளி கமநல சேவை நிலையத்தின் கீழ் பதிவு செய்து பசளை பெற்றுக்கொண்டும் இழப்பீடுகள் பெற்றுக்கொண்டும் விவசாயம் செய்து வருகின்றார்.

திரியாயின் ஏனைய பகுதிகளை விட இந்த பகுதியில் மாத்திரம் உறுதி மற்றும் அனுமதிப்பத்திரங்கள் கொண்ட 800 ஏக்கருக்கு மேற்பட்ட காணிகள் இருக்கின்றன. இவற்றை வனவள பாதுகாப்பு திணைக்களம், வன ஜீவராசிகள் திணைக்களம் உள்ளிட்ட திணைக்களங்கள் எம்மை விவசாயம் செய்ய விடாமல் தடுத்து வருகின்றன.
இந்நிலையில் பௌத்த பிக்கு எமது காணிகளில் விவசாயம் செய்து வருகின்றார். ஆனால், நாங்கள் ஒரு நேரம் கூட ஒழுங்காக சாப்பிட முடியாமல் பட்டிணியால் வாடி வருகின்றோம்” என்றார்.
இவ்வாறாக, அப்பகுதி மக்கள் தமது காணிகளில் தமக்கு உரித்து இருந்தும், விவசாயம் செய்து வாழ்வாதாரத்தை பெற்றுக்கொள்ள முடியாத அவல நிலையை வேதனையுடன் பகிர்ந்துகொண்டனர்.

திரியாய் கிராமமும் அதன் வரலாறும்
திரியாய் கிராம சேவகர் பிரிவானது 11.26 சதுர கிலோமீற்றர் பரப்பளவு கொண்டதாகும். இங்கு 300 குடும்பங்களைச் சேர்ந்த 806 பேர் வசித்து வருகின்றார்கள். இதில் ஆண்கள் 442 பேர், பெண்கள் 364 பேர்.
 
திரியாய் கிராம சேவகர் பிரிவானது திரியாய், மரவடிச்சோலை, கல்லறாவ ஆகிய கிராமங்களை உள்ளடக்கியதாக காணப்படுகிறது.

திரியாய் கிராமம், திருகோணமலை மாவட்டத்தில் உள்ள ஒரு பழம்பெரும் கிராமமாகும். திருக்கோணேஸ்வரர் ஆலயத் திருப்பணிக்காக குளக்கோட்டு மன்னனால் திரியாயில் மக்கள் குடியேற்றப்பட்டு, 7 குளங்கள் அமைத்துக் கொடுக்கப்பட்டதோடு கால்நடைகளும் கொடுக்கப்பட்டதாக வரலாறுகள் கூறுகின்றன.

இந்த வரலாற்றுப் பின்னணியை நோக்குகையில், திரியாயில் இருந்து திருக்கோணேஸ்வரர் ஆலயத்துக்கு திரி, நெய் வழங்கப்பட்டு வந்ததால் “திரி - ஆய் - திரியாய்” ஆகிய சொற்கள் இணைந்து “திரியாய்” எனும் பெயர் வந்ததாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக, தாமரைத் தண்டில் இருந்து தயாரிக்கப்பட்ட திரியும், பசு நெய்யும் ஆலயத்துக்கு வழங்கப்பட்டு வந்ததாகவும் கூறப்படுகின்றது.

இங்கு 1825ஆம் ஆண்டு பாடசாலையொன்று கட்டப்பட்டதாகவும், 1875ஆம் ஆண்டு பிள்ளையார் ஆலயத்தின் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டதாகவும் வரலாற்று ஆவணங்கள் கூறுகின்றன.
1985ஆம் ஆண்டு திரியாய் கிராமம் எரியூட்டப்பட்டது. அந்த சம்பவத்தில் 12 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.

அவ்வேளை, கிடைத்தவற்றை எடுத்துக்கொண்டு உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு திரியாய் மக்கள் இடம்பெயர்ந்தனர். அந்த சூழ்நிலையில் தங்கள் காணிகளுக்கான ஆவணங்களை இழந்த மக்கள் இன்று தங்கள் காணிகளை உரிமை கோர முடியாமலும், காணிகளில் விவசாயம் செய்ய முடியாமலும் தவிக்கின்றார்கள்.

எனவே, அரசாங்கம் திரியாய் மக்களுடைய காணிகளுக்கான ஆவணங்களை வழங்கி அவர்களுடைய நிலங்களை விடுவித்து, அந்த நிலங்களில் அவர்கள் விவசாயம் செய்ய உதவ வேண்டும். நல்லிணக்கம், சகவாழ்வை ஏற்படுத்த வேண்டுமாயின், இன மற்றும் மதங்களுக்கிடையே பிளவுகளை ஏற்படுத்தக்கூடிய செயற்பாடுகளையும் அரசு தடுக்க வேண்டும்.

நன்றி  virakesari

 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்