Paristamil Navigation Paristamil advert login

லோக்சபாவில் இன்று அரசு - எதிர்கட்சிகள் பலப்பரீட்சை

லோக்சபாவில் இன்று அரசு - எதிர்கட்சிகள் பலப்பரீட்சை

2 சித்திரை 2025 புதன் 05:24 | பார்வைகள் : 1057


வக்ப் வாரிய சட்டத்திருத்த மசோதா, லோக்சபாவில் இன்று மதியம், 12:00 மணிக்கு தாக்கல் செய்யப்பட உள்ளது. ஆரம்பம் முதலே எதிர்க்கட்சிகள் இந்த மசோதாவை ஏற்காததால், சபையில் இன்று அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எம்.பி.,க்கள் தவறாமல் ஆஜராக அனைத்துக் கட்சி கொறடாக்களும் உத்தரவிட்டுள்ளனர்.

சமூக நலத்திட்டங்களுக்காக முஸ்லிம்கள் எழுதி வைக்கும் சொத்துக்களை நிர்வகிக்க வக்ப் வாரியம் அமைக்கப்பட்டது; இவை, இதற்கென உருவாக்கப்பட்ட வக்ப் வாரிய சட்டப்படி நிர்வகிக்கப்பட்டு வருகின்றன. இந்த சட்டத்தில் சில திருத்தங்களை மத்திய அரசு செய்துள்ளது.

முக்கிய அம்சம்

அதில், வக்ப் வாரிய சொத்துக்களை நிர்வகிக்கும் கவுன்சிலில், பெண்கள் மற்றும் முஸ்லிம் அல்லாத பிற மதத்தவரையும் உறுப்பினராக்குவது, வக்ப் சொத்துக்களின் மீதான பிரச்னைகளில் மாவட்ட கலெக்டரே இறுதி முடிவு எடுப்பது உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

இதன் வாயிலாக, வக்ப் வாரிய சொத்துக்களை அரசு அபகரிக்க முயற்சிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன.

பார்லி., குளிர்கால கூட்டத்தொடரில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டபோது, எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டன. இதைத் தொடர்ந்து கூட்டுக்குழு ஆய்வுக்கு மசோதா அனுப்பி வைக்கப்பட்டது.பா.ஜ., - எம்.பி., ஜெகதாம்பிகா பால் கூட்டுக்குழுவுக்கு தலைமை வகித்தார். முஸ்லிம்கள் தரப்பை மளமளவென அழைத்து ஆலோசனை நடத்தி விரைவாக பணிகளை முடித்தார். கூட்டுக்குழுவில் இடம் பெற்று இருந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அளித்த பரிந்துரைகள் நிராகரிக்கப்பட்டன. தே.ஜ., கூட்டணி எம்.பி.,க்களின் பரிந்துரைகள் மட்டும் ஏற்றுக்

கொள்ளப்பட்டன.

இதனால், கொதிப்படைந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள், தங்களின் பரிந்துரைகள் இறுதி அறிக்கையில் சேர்க்கப்படாததற்கு பார்லிமென்டில் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து அவற்றை பரிசீலித்து இறுதி அறிக்கையில் சேர்க்க நடவடிக்கை எடுப்பதாக மத்திய அரசு உறுதி அளித்தது.

இந்நிலையில், திட்டமிட்டபடி வக்ப் வாரிய சட்டத்திருத்த மசோதா லோக்சபாவில் இன்று தாக்கல் செய்யப்பட உள்ளது. கேள்வி நேரம் முடிந்தவுடன் மதியம் 12:00 மணிக்கு, பார்லிமென்ட் விவகாரம் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு இந்த மசோதாவை தாக்கல் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மத்தியில் பா.ஜ., அரசுக்கு ஆதரவு அளித்து வரும், முக்கிய கூட்டணி கட்சிகளான ஐக்கிய ஜனதா தளமும், தெலுங்கு தேசமும் இந்த மசோதாவை ஆதரிப்பதாக ஏற்கனவே தெரிவித்து விட்டன. இதனால் மசோதா நிறைவேறுவதில் சிக்கல் இருக்கப் போவதில்லை. அதேநேரம், சிறுபான்மையினர் தொடர்பான விவகாரம் என்பதால், எதிர்க்கட்சிகள் சபையில் தங்கள் எதிர்ப்பை அழுத்தம் திருத்தமாக பதிவு செய்ய தீவிரம் காட்டும் என்பதில் சந்தேகமில்லை. அதனால், கூச்சலும், அமளியும் வழக்கத்தைவிட இன்று தீவிரமாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் ஒன்று திரண்டு முழக்கங்களை எழுப்பி சபை நடவடிக்கைகளை முடக்கினால், சபை தொடர்ந்து ஒத்திவைக்கப்படும். இது மசோதா நிறைவேறுவதில் தடங்கலை ஏற்படுத்தும். அதேநேரம், அரசு தரப்பு முடிவெடுத்து விட்டால் எதிர்க்கட்சிகளின் கூச்சலைப் பற்றி கவலைப்படாமல் மசோதாவை அதிரடியாக நிறைவேற்றவும் வாய்ப்புள்ளது.இருதரப்பும் வரிந்து கட்டிக்கொண்டு பலப்பரீட்சைக்கு தயாராகி இருப்பதால், பார்லிமென்ட் வட்டாரங்களில் அசாதாரணமான பரபரப்பு நிலவுகிறது.

பாதுகாப்பு அதிகரிப்பு

பார்லிமென்ட் உள்ளேயும், வெளியேயும் ஏற்கனவே இருக்கும் பலத்த பாதுகாப்போடு, கூடுதல் கண்காணிப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. பார்லிமென்டை நோக்கி வரும் சாலைகள், முக்கிய சந்திப்புகள் என டில்லியின் எல்லா முக்கிய இடங்களிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. எந்த ஒரு அசம்பாவிதமான சம்பவங்களும் ஏற்பட்டு விடாதபடி, நாடு முழுதும் கண்காணிப்புடன் இருக்கும்படி மத்திய உளவுத்துறையிலிருந்து அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

வக்ப் மசோதா நிறைவேற்றம் தொடர்பாக அலுவல் ஆய்வுக் குழு ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது. இதில், மணிப்பூரில் வன்முறை மற்றும் ஜனாதிபதி ஆட்சி, ஒரே எண் கொண்ட வாக்காளர் அடையாள அட்டை விவகாரம் உள்ளிட்டவை குறித்து லோக்சபாவில் விவாதம் நடத்த வேண்டும் என, எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.அரசு தரப்பு அதை ஏற்க மறுத்துவிட்டதாக தெரிகிறது. மேலும், 'வக்ப் மசோதாவை நிறைவேற்றக் கூடாது. அதை கையில் எடுக்கக் கூடாது' என, எதிர்க்கட்சிகள் தரப்பில் வாதிடப்பட்டது.

அதையும், மத்திய அரசு ஏற்கவில்லை. இதனால், கோபமடைந்த எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் அனைவருமே அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர். எத்தகைய தடைகள் வந்தாலும் அனைத்தையும் தகர்த்தெறிந்து விட்டு, வக்ப் வாரிய சட்டத் திருத்த மசோதாவை நிறைவேற்றியே தீருவது என்ற முடிவில் மத்திய அரசு திடமாக உள்ளது. இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்ட பின், அதன் மீதான விரிவான விவாதம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. எட்டு மணி நேரத்திற்கு விவாதம் நடத்த நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் திட்டமிட்ட காலக்கெடுவையும் தாண்டி நள்ளிரவு வரை கூட விவாதம் நீட்டிக்கப்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு அதிகரிப்பு

பார்லிமென்ட் உள்ளேயும் வெளியேயும் ஏற்கனவே இருக்கும் பலத்த பாதுகாப்போடு, கூடுதல் கண்காணிப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. பார்லிமென்டை நோக்கி வரும் சாலைகள், முக்கிய சந்திப்புகள் என டில்லியின் எல்லா முக்கிய இடங்களிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. எந்த ஒரு அசம்பாவிதமான சம்பவங்களும் ஏற்பட்டு விடாதபடி, நாடு முழுதும் கண்காணிப்புடன் இருக்கும்படி மத்திய உளவுத்துறையிலிருந்து அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விவாதத்தில் பங்கேற்க வேண்டும்

மசோதாவின் மீதான விவாதம் நடைபெற வேண்டும். அதில் ஒவ்வொரு கட்சியும் பங்கேற்று பேச வேண்டும். நாட்டு மக்கள் அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில், அவரவர் கருத்துகளை அழுத்தமாக பதிவு செய்ய வேண்டும். இது அந்த கட்சிகளுக்கான உரிமை. இதை அந்த கட்சிகள் செய்ய வேண்டுமென்றுதான் அரசு விரும்புகிறது.

-கிரண் ரிஜிஜு

பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சர், பா.ஜ.,

பாதியில் வெளிநடப்பு

அலுவல் ஆய்வுக்கூட்டத்திலிருந்து எதிர்க்கட்சிகளாகிய நாங்கள் பாதியிலேயே வெளிநடப்பு செய்துவிட்டோம். காரணம், எங்கள் கருத்துகள் எதுவும் ஏற்கப்படவில்லை. உண்மையில் அரசு என்னதான் நினைத்துக் கொண்டிருக்கிறது என்பது புரியவில்லை. சபாநாயகராவது எங்களது எதிர்ப்பை கவனத்தில் கொள்வார் என நம்புகிறோம்.
 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்