நடந்தாய் வாழி காவிரி திட்டத்தை இரண்டு கட்டமாக செயல்படுத்த முடிவு: அமைச்சர் துரைமுருகன்

2 சித்திரை 2025 புதன் 07:29 | பார்வைகள் : 1006
நடந்தாய் வாழி காவிரி திட்டத்தை, இரண்டு கட்டமாக செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி நடந்து வருகிறது,'' என, அமைச்சர் துரைமுருகன் கூறினார்.
சட்டசபையில், கேள்வி நேரத்தில் நடந்த விவாதம்:
கொ.ம.தே.க., - ஈஸ்வரன்: கழிவு நீரால் மாசுபட்டுள்ள, காவிரி மற்றும் துணை ஆறுகளை சுத்தப்படுத்த, 'நடந்தாய் வாழி காவிரி' திட்டம் தீட்டப்பட்டது. இதற்கு, 934 கோடி ரூபாய் திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டது. மத்திய அரசு பங்கு, 60 சதவீதம்.
மாநில அரசின் பங்கு, 40 சதவீதம் என, முடிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக, நாமக்கல் எம்.பி., மாதேஸ்வரன், மத்திய அமைச்சரிடம் எழுப்பிய கேள்விக்கு, 'மாநில அரசு முன்னெடுப்பு இல்லை' என, எழுத்துப்பூர்வமாக பதில் வந்துள்ளது. மாநில அரசின் நிலை என்ன?
அமைச்சர் துரைமுருகன்: காவிரி மற்றும் திருமணிமுத்தாறு, கரபங்கா, பவானி, அமராவதி, நொய்யல் ஆகிய ஐந்து நதிகளை மாசுபடுவதில் இருந்து பாதுகாத்தல், புத்துயிர் பெறச் செய்தல், நீர் ஆதாரங்களை மேம்படுத்துதல் ஆகியவை, 'நடந்தாய் வாழி காவிரி' திட்டத்தின் நோக்கம்.
இத்திட்டத்தை இரண்டு கட்டமாக செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது. முதற்கட்டம், காவிரியில் மேட்டூரில் இருந்து திருச்சி வரை மற்றும் ஐந்து கிளை ஆறுகள்; இரண்டாவது கட்டம், திருச்சி முதல் கடல் முகத்துவாரம் வரை செயல்படுத்த உத்தேசிக்கப்பட்டது.
முதற்கட்ட திட்ட மதிப்பீடு 934.30 கோடி ரூபாய். மத்திய அரசின் பங்கு 560.58 கோடி; மாநில அரசின் பங்கு 371.72 கோடி ரூபாய். விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யும் பணி நடக்கிறது. இவ்வாறு விவாதம் நடந்தது.