கோடை காலத்தில் ஏற்பட கூடிய உடல்நல பிரச்சனைகள்பற்றி தெரியுமா ?

2 சித்திரை 2025 புதன் 14:37 | பார்வைகள் : 467
விடுமுறை காரணமாக சுற்றுலா இடங்கள் கோடைக்காலம் நிரம்பி வழியும் அதே நேரம், இந்த சீசன் பலருக்கும் உடல்நல பிரச்சனைகளையும் கொண்டு வருகிறது.கோடை மாதங்களில் நிலவும் கடுமையான வெப்பம், அதிக அளவு நீராவியை கொண்டிருக்கும் humidity சூழல் மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்கள் சிலருக்கு உடல்நலப் பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
அதீத வெயில் நிலவும் நாட்களில் நாம் கூடுதல் கவனமாக இல்லாவிட்டால் டிஹைட்ரேஷன் முதல் ஃபுட் பாய்ஸன் வரை பல்வேறு பாதிப்புகளை எதிர்கொள்ள நேரிடலாம். எனினும் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றி ஆரோக்கியத்தை உறுதி செய்யலாம். பொதுவாக கோடைகாலத்தில் மக்கள் எதிர்கொள்ளும் சில பொதுவான உடல்நலப் பிரச்சனைகள் பற்றியும், அவற்றை எவ்வாறு தடுப்பது என்பதை பற்றியும் இங்கே பார்ப்போம்.
நீர்ச்சத்து இழப்பு (டிஹைட்ரேஷன்) : அதிக வெப்பமான கிளைமேட் காரணமாக அதிகம் வியர்க்கும் போது, வியர்வை மூலம் உடலில் இருந்து நீர் மற்றும் அத்தியாவசிய தாதுக்கள் வெளியேறுகிறது. மீண்டும் திரவங்கள் மூலம் இவற்றை நிரப்பவில்லை என்றால், நீங்கள் டிஹைட்ரேஷன் நிலையை எதிர்கொள்ள நேரிடும், இது தலைச்சுற்றல், தலைவலி, சோர்வு மற்றும் சரும வறட்சியை ஏற்படுத்தும்.
இதனை தவிர்க்க தாகம் இல்லாவிட்டாலும் நாள் முழுவதும் சீரான இடைவெளியில் நிறைய தண்ணீர் குடிக்கவும். உங்கள் டயட்டில் தர்பூசணி, வெள்ளரி மற்றும் ஆரஞ்சு போன்ற நீர்ச்சத்து நிறைந்த உணவுகளை சேர்த்துக் கொள்ளுங்கள். வெயில் நாட்களில் காஃபின் மற்றும் ஆல்கஹாலை தவிர்ப்பது நல்லது. வெயிலில் வெளியே செல்லும்போது உங்களுடன் ஒரு தண்ணீர் பாட்டிலை அவசியம் எடுத்துச் செல்லுங்கள்.
சரும பிரச்சனைகள்: வெயிலில் நீண்ட நேரம் செலவிடுவது அதிகமாக வியர்க்க வழிவகுக்கும். தவிர சன்பர்ன், ரேஷஸ் மற்றும் பூஞ்சை தொற்றுகள் போன்ற பல்வேறு சரும பிரச்சனைகளுக்கு இது வழிவகுக்கும். வியர்வை சுரப்பிகள் அடைபடுவதால் ஹீட் ரேஷஸ் ஏற்படுகின்றன. தவிர அதிகப்படியான சூரிய ஒளி சருமத்திற்கு சேதத்தை ஏற்படுத்தும்.
வெயிலில் வெளியே செல்லும் முன் எப்போதும் SPF 30 அல்லது அதற்கு மேல் உள்ள சன்ஸ்கிரீனை தடவவும். வியர்வை உடலில் தேங்குவதைத் தடுக்க காற்றோட்டமான ஆடைகளை அணியுங்கள். பூஞ்சை தொற்றுகளைத் தவிர்க்க குளிர்ந்த நீரில் குளித்து பின் உங்கள் சருமத்தை உலர வைக்கவும். சருமத்தில் கற்றாழை ஜெல் அல்லது மாய்ஸ்சரைசரை பயன்படுத்தவும்.
சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகள் (UTIs): வெயில் காலத்தில் ஏற்படும் நீர்ச்சத்து இழப்பு மற்றும் அதிகப்படியான வியர்வை, சிறுநீர் வெளியேற்றத்தை குறைத்து, சிறுநீர் பாதையில் பாக்டீரியாக்கள் குவிவதை அதிகமாக்க கூடும். குறிப்பாக இது பெண்களுக்கு சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகள் உருவாகும் அபாயத்தை ஏற்படுத்துகிறது.
உடலில் இருக்கும் நச்சுகளை வெளியேற்ற நிறைய தண்ணீர் குடிக்கவும். குறிப்பாக பொது கழிப்பறைகளைப் பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டால் அதன் பிறகு, சரியான சுகாதாரத்தைப் பேணுங்கள். அதிக நேரம் சிறுநீரை அடக்காதீர்கள். அந்தரங்க பகுதியை பாதுகாப்பாக வைத்திருக்க, பாக்டீரியா வளர்ச்சியைத் தடுக்கவும் தளர்வான, பருத்தி உள்ளாடைகளை அணியுங்கள்.
ஃபுட் பாய்ஸனிங்: கோடை சீசனில் நாளுக்குநாள் அதிகரிக்கும் வெப்பநிலை, உணவுகளில் பாக்டீரியாக்கள் பெருக ஏற்ற சூழலை உருவாக்குகிறது, இதனால் உணவு மூலம் பரவும் நோய்கள் ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது. மாசுபட்ட அல்லது கெட்டுப்போன உணவை உண்பது குமட்டல், வாந்தி, வயிற்றுப் பிடிப்புகள் மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனைகள் ஏற்பட வழிவகுக்கும்.
எப்போதும் புதிதாக சமைத்த வீட்டு உணவுகளை உண்ணுங்கள், மேலும் அதிக வெயில் காலத்தில் தெரு உணவை தவிர்க்கவும். மீந்து போகும் நாவுகளை உடனடியாக குளிர்சாதன பெட்டியில் வைத்து, பின் ஒரு நாளுக்குள் அதை சாப்பிட்டு விடுங்கள். பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடும் முன் நன்கு கழுவுங்கள். வடிகட்டப்படாத தண்ணீரை பருக்காதீர்கள் மற்றும் நீங்கள் சாப்பிடும் உணவின் சுகாதாரத்தை உறுதி செய்யுங்கள்.
ஹீட் ஸ்ட்ரோக்: அதிக வெயிலில் நீண்ட நேரம் இருப்பது வெப்பச் சோர்வு (heat exhaustion) ஏற்பட வழிவகுக்கும், இது தலைச்சுற்றல், குமட்டல் மற்றும் அதிகப்படியான வியர்வையை ஏற்படுத்தும். இது தீவிர சந்தர்ப்பங்களில் உடல் குளிர்ச்சியடையும் திறனை இழக்கும் ஒரு மருத்துவ அவசரநிலையான ஹீட் ஸ்ட்ரோக்காக மாறக்கூடும்.
அதிக வெயில் நிலவும் மதியம் 12 மணி முதல் மாலை 4 மணி வரை வெளியே செல்வதைத் தவிர்க்கவும். வெயிலில் வெளியே செல்ல நேர்ந்தால் தொப்பி, சன்கிளாஸ் மற்றும் வெளிர் நிற ஆடைகளை அணியுங்கள். வெளியே வெயில் கடுமையாக இருந்தால் நன்கு காற்றோட்டமான அல்லது கூலிங்கான இடங்களில் இருப்பதை உறுதிப்படுத்தி கொள்ளுங்கள். இளநீர் போன்ற எலக்ட்ரோலைட் நிறைந்த திரவங்களை பருகுங்கள்.