எம்.ஜி.ஆர்., அணுகுமுறையை பின்பற்றுங்கள்: அ.தி.மு.க.,வுக்கு சைதை துரைசாமி வேண்டுகோள்

3 சித்திரை 2025 வியாழன் 10:40 | பார்வைகள் : 541
எம்.ஜி.ஆர்., அணுகுமுறையை பின்பற்றி, பா.ஜ.,வுடன் கூட்டணி வைத்து, தி.மு.க.,வை வீழ்த்த வேண்டும்' என்று, அ.தி.மு.க.,வுக்கு சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அவரது அறிக்கை: மத்திய அரசுடன் நட்போடு பழகி, தேர்தலில் கூட்டணி அமைத்தே, அ.தி.மு.க., நிறுவனர் எம்.ஜி.ஆர்., வென்றார்.
தஞ்சை லோக்சபா தொகுதி இடைத்தேர்தலில் இந்திரா போட்டியிட, அ.தி.மு.க., ஆதரவு கொடுக்காததால், காங்கிரசுடனான கூட்டணி முறிந்தது. அதன்பின் நடந்த லோக்சபா தேர்தலில், காங்கிரசுடன் தி.மு.க., கூட்டணி அமைத்தது. அந்த தேர்தலில், அ.தி.மு.க.,வுக்கு இரண்டு இடங்கள் மட்டுமே கிடைத்தன. அதனால், இந்திரா மீண்டும் பிரதமரானதும் எம்.ஜி.ஆர்., ஆட்சி கலைக்கப்பட்டது.
அதன்பின், காங்கிரசுடன் இணக்கமான போக்கைக் கடைப்பிடித்து, தி.மு.க.,வை தனிமைப்படுத்தும் முயற்சியில், எம்.ஜி.ஆர்., ஈடுபட்டார். திருப்பத்துார் இடைத்தேர்தலில் காங்கிரஸ் -- தி.மு.க., கூட்டணி வேட்பாளரான அருணகிரிக்கு தானே வலியச் சென்று, ஆதரவு கொடுத்தார்.
தி.மு.க., கூட்டணியை பிரிக்க வேண்டும் என்பதற்காக, காங்கிரசுக்கு பிரசாரம் செய்து வெற்றி பெற வைத்தார். இது, அன்றைய அரசியலில் மிகப்பெரிய அளவில் அதிர்வுகளை ஏற்படுத்தியது; மத்திய அரசுடன் நல்ல நட்பு உருவானது.
கடந்த 1984ல், எம்.ஜி.ஆர்., உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தபோது, இந்திரா நேரில் வந்து பார்த்து, அவர் வெளிநாட்டில் உயர்தரச் சிகிச்சை பெற வசதிகளை செய்து தந்தார்.
1984ல், அ.தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணி மிகப் பெரிய வெற்றி பெற்றது. அ.தி.மு.க.,வுக்கு நெருக்கடிகள் ஏற்பட்டபோது, மத்திய அரசின் உதவிகள் பயன் தந்தன. எனவே, ஒற்றுமையுடன் கட்சியை வெற்றிப் பாதைக்கு அழைத்து செல்ல, பா.ஜ.,வுடன் இணைந்து பலமான கூட்டணி அமைத்து, வரும் தேர்தலில் வெற்றி பெற வேண்டும்.
எனவே, எம்.ஜி.ஆரை முதன்மைப்படுத்துங்கள்; எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா விசுவாசிகளையும் தி.மு.க., எதிர்ப்பாளார்களையும் ஒற்றுமைப்படுத்துங்கள். பா.ஜ., மற்றும் தோழமைக் கட்சிகளையும் இணைத்து, 2026ல் பலமான வெற்றி கூட்டணி அமைத்து, கட்சியை வெற்றி பாதைக்கு அழைத்துச் செல்லுங்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.