தூக்கத்தை கெடுத்த அமெரிக்கா.. எலிசே மாளிகையில் அவசர சந்திப்பு!!

3 சித்திரை 2025 வியாழன் 08:57 | பார்வைகள் : 2569
நேற்று புதன்கிழமை நள்ளிரவு அமெரிக்க ஜனாதிபதி உலகநாடுகளுக்கான புதிய வரி அதிகரிப்பை அறிவித்தார். சிறிய நாடுகள் முதல், வல்லரசு நாடுகள் வரை பெருமளவில் இதனால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், பிரான்ஸ் மற்றும் ஐரோப்பாவுக்கு வரி 20% சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. பிரான்சில் இருந்து அமெரிக்காவுக்கு பிரதானமாக ஏற்றுமதி செய்யப்படும் வைன் மற்றும் மதுபான உற்பத்திகள் பெருமளவில் பாதிக்கப்படுவதுடன், 800 மில்லியன் யூரோக்கள் இழப்பு ஏற்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இதனால், பிரான்சுக்கு புதிய தலைவலி ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், இன்று ஏப்ரல் 3, வியாழக்கிழமை மாலை 4 மணிக்கு ஜனாதிபதியின் எலிசே மாளியில் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் தலைமையில் அவசர சந்திப்பு ஒன்று இடம்பெற உள்ளது.
இந்த சந்திப்பில், தொழில்துறை தலைவர்கள், பிரெஞ்சு வானூர்தியியல் மற்றும் விண்வெளித் தொழில்கள் குழுக்கள், விவசாயம், மருத்துவம், வேதியல், மதுபான உற்பத்தியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொள்கின்றனர்.
அவர்களுடன் பல்வேறு அமைச்சர்களும் பிரதமர் பிரான்சுவா பெய்ரூவும் கலந்துகொள்கிறார்.