உலகின் அதிக நாட்கள் வாழ்ந்த பிரெஞ்சு பெண்மணி!
9 தை 2017 திங்கள் 10:30 | பார்வைகள் : 20018
உலகம் முழுவதும் ஏதோ ஒரு அதிசய நிகழ்வு இடம்பெற்றுக்கொண்டுதான் இருக்கின்றன. எதிர்காலத்தில் மனிதன் தனது நூறு வயதை தொடுவது எவ்வளவு சாத்தியம் என தெரியவில்லை. ஆனால் பிரெஞ்சு தேசத்தில் ஒரு பெண்மணி இருந்தார். உலகில் அதிக நாட்கள் உயிர்வாழ்த பெண்மணி இவர். எவ்வளவு வருடங்கள்? வாங்க தெரிந்துகொள்வோம்!!
பெண்மணியின் பெயர் Jeanne Calment!! 19ஆம் நூற்றாண்டில் பிறந்து 20 ஆம் நூற்றாண்டில் இறந்து, இடையில் முதலாம்.. இரண்டாம் உலகப்போர்களை சந்தித்து.. வாழ்வாங்கு வாழ்ந்து மறைந்துள்ளார் இவர்.
இவரின் முழுப்பெயர் Jeanne Louise Calment. பெப்ரவர் 21, 1875 இல், பிரான்சின் Arles மாவட்டத்தில் பிறந்தார். பிறக்கும் போது இவர் நல்ல ஆரோக்கியமான குழந்தையாக இருந்தார். அவ்வளவு தான். எத்தனையோ பிரெஞ்சு குழந்தைகள் போல் இவரும் வாழ்ந்தார். பின்னர் வருடங்கள் ஓட ஓட... 1990 ஆண்டு வந்தது. அப்போது இவர் பாட்டி ஆகியிருந்தார். மன்னிக்கவும்... உலகில் அதிக நாட்கள் உயிர்வாழும் பெண்மணியாக ஆகியிருந்தார். 115 வயது!
பின்னர், 1997 ஆம் ஆண்டு வரை உயிர்வாழ்ந்து, உலகில் மிக அதிக நாட்கள் வாழ்ந்த பெண்மணியாக, வரலாறு இவருக்கென ஒரு பக்கத்தை ஒதுக்கியது. 122 வயதில், 1997 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 4 ஆம் திகதி உயிரிழந்தார். 122 வருடங்களும், 164 நாட்களும் Jeanne Calment உயிர்வாழ்ந்தார்.
தன் வாழ்நாள் முழுக்க Arles மாவட்டத்திலேயே வசித்தார். பிரான்சை விட்டு எங்கேயும் வெளியேறவில்லை!! 1988 ஆம் ஆண்டு, தனது 113 வயதில் " world's oldest living person" என கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தார்.
சிலருக்கு 40 வயதை தாண்டினாலே.. ஏண்டா வாழ்கிறோம்... என சலிப்பு தட்டி விடும்.. 122 வயது வரை வாழ்வதென்றால்... கடினம் தான்! 'இந்த சாதனை எனக்கு வேதனை' என Jeanne Calment பேட்டியளித்திருந்தார்!!