சன்ரைசர்ஸ் ஐதராபாத்தை சம்பவம் செய்த இருவர்! 80 ரன் வித்தியாசத்தில் படுதோல்வி

4 சித்திரை 2025 வெள்ளி 09:06 | பார்வைகள் : 251
SRH அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 80 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த போட்டியில் KKR மற்றும் SRH அணிகள் மோதின. முதலில் களமிறங்கிய கொல்கத்தா அணியில் டி காக் (1) மற்றும் நரைன் (7) அடுத்தடுத்து விக்கெட்டை இழந்தனர்.
பின்னர் வந்த அணித்தலைவர் அஜிங்க்யா ரஹானே சிக்ஸர்களை பறக்கவிட்டு, 27 பந்துகளில் 38 ஓட்டங்கள் விளாசி வெளியேறினார்.
அதனைத் தொடர்ந்து கைகோர்த்த ரகுவன்ஷி, வெங்கடேஷ் ஐயர் SRH பந்துவீச்சை அடித்து நொறுக்கினர்.
இதன்மூலம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 200 ஓட்டங்கள் குவித்தது. வெங்கடேஷ் ஐயர் 29 பந்துகளில் 60 ஓட்டங்களும், ரகுவன்ஷி 32 பந்துகளில் 50 ஓட்டங்களும் விளாசினர்.
கடைசி கட்டத்தில் அதிரடி காட்டிய ரிங்கு சிங் 17 பந்துகளில் 32 ஓட்டங்கள் குவித்தார். அடுத்து ஆடிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி ஆரம்பத்திலேயே விக்கெட்டுகளை இழந்தது.
கமிந்து மெண்டிஸ் (27), கிளாசென் (33) இருவர் மட்டும் ஓரளவு ஓட்டங்கள் எடுத்தனர். ஏனைய வீரர்கள் சொதப்பியதால் சன்ரைசர்ஸ் அணி 120 ஓட்டங்களுக்கு சுருண்டு, 80 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்றது.
வருண் சக்கரவர்த்தி, வைபவ் அரோரா தலா 3 விக்கெட்டுகளும், ஆந்த்ரே ரசல் 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.