புடினுடன் தொலைபேசி உரையாடல் வேண்டாம்... ட்ரம்புக்கு ஆலோசனை

4 சித்திரை 2025 வெள்ளி 09:13 | பார்வைகள் : 420
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுடன் தொலைபேசி உரையாடல்கள் வேண்டாம் என ஜனாதிபதி ட்ரம்பின் ஆலோசகர்கள் கேட்டுக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைன் விவகாரத்தில் ஜனாதிபதி புடின் தொடர்ந்து இழுத்தடித்து வருவதால், முழுமையான போர் நிறுத்தத்திற்கு புடின் உடன்படும் வரையில் தொலைபேசி அழைப்புகள் வேண்டாம் என ட்ரம்புக்கு ஆலோசனை வழங்கியுள்ளனர்.
ஆனால், புடினுடன் உடனடியாக பேச வேண்டும் என்றால், ட்ரம்ப் முடிவு செய்யலாம் என்றும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். உக்ரைன் தொடர்பிலான போர் நிறுத்த ஒப்பந்தமானது அமெரிக்காவால் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில், ரஷ்யா இதுவரை ஒப்புக்கொள்ளவில்லை என்பதுடன், அமெரிக்காவிற்கு உரிய பதிலளிக்கவும் மறுத்து வருகிறது.
ஆனால் ட்ரம்ப் நிர்வாகம் இந்த விவகாரத்தில் ரஷ்யாவுக்கு அழுத்தம் அளிக்கவும் தயங்கி வருகின்றனர். இந்த நிலையில், விளாடிமிர் புடினின் செயற்பாடுகள் ஜனாதிபதி ட்ரம்பை கோபம் கொள்ள வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
ரஷ்யா மீது மேலும் தடைகள் விதிக்கவும், பொருளாதாரத்தை மொத்தமாக முடக்க தம்மால் முடியும் என ட்ரம்ப் கொந்தளித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இதுவரை நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை.
மட்டுமின்றி, உலக நாடுகள் மொத்தத்திற்கும் 10 சதவீத அடிப்படை வரி விதித்துள்ள டொனால்டு ட்ரம்ப், ரஷ்யா மீது வரி விதிக்கவில்லை. ஏற்கனவே ரஷ்யா மீது தடைகள் இருப்பதாகவும், அமெரிக்காவுடன் அவர்கள் வர்த்தகம் செய்வதில்லை என்றும் ட்ரம்ப் விளக்கமளித்துள்ளார்.
ஆனால், மக்கள் நடமாட்டமே இல்லாத தீவு ஒன்றிற்கு ட்ரம்ப் வரி விதித்திருந்தார். சவுதி அரேபியாவில் உக்ரைன் போர் நிறுத்தம் தொடர்பில் ரஷ்ய அதிகாரிகளுடன் முன்னெடுக்கப்பட்ட பேச்சுவார்த்தையில், வர்த்தகம் மற்றும் தூதரக உறவுகளை மேம்படுத்துவது குறித்தே விவாதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.