உக்ரைன் ஒரு பயங்கரவாத நாடு...... மேற்கு ஆப்பிரிக்க நாடுகளின் குழு கண்டனம்

4 சித்திரை 2025 வெள்ளி 09:26 | பார்வைகள் : 354
ரஷ்யாவில் நடந்த சந்திப்பு ஒன்றில் உக்ரைனை ஒரு பயங்கரவாத நாடு என அடையாளப்படுத்தியுள்ள இராணுவ ஆட்சிக்குழுக்கள் தலைமையிலான மேற்கு ஆப்பிரிக்க நாடுகளின் குழு, விளாடிமிர் புடின் உடனான வளர்ந்து வரும் இராணுவ உறவுகளைப் பாராட்டின.
உக்ரைனுக்கு எதிரான முழு அளவிலான போரைத் தொடர்ந்து மேற்கத்திய நாடுகளால் தனிமைப்படுத்தப்பட்டதை எதிர்கொண்டுள்ள ரஷ்யா, ஆப்பிரிக்காவில் புதிய கூட்டாண்மைகளை உருவாக்க முயற்சித்துள்ளது.
சமீபத்திய ஆண்டுகளில் இராணுவ ரீதியாகவும் அதன் செல்வாக்கு ஆப்பிரிக்காவில் வளர்ந்து வருகிறது. இந்த நிலையில் மாலி, நைஜர் மற்றும் புர்கினா பாசோ ஆகிய நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் செர்ஜி லாவ்ரோவுடன் ஒரு உச்சிமாநாட்டிற்காக மாஸ்கோவில் வியாழக்கிழமை சந்தித்துள்ளனர்.
மூன்று சஹேலிய நாடுகளும் ஆட்சிக் கவிழ்ப்புகளில் அதிகாரத்தைக் கைப்பற்றிய இராணுவ ஆட்சிக் குழுக்களால் வழிநடத்தப்படுகின்றன, மேலும் முன்னாள் காலனித்துவ சக்தியான பிரான்சிலிருந்து விலகி ரஷ்யாவுடன் நெருக்கமாகி வருகின்றன.
மட்டுமின்றி, இந்த நாடுகளில் தீவிரவாத கிளர்ச்சியை எதிர்த்துப் போராட அவர்களுக்கு உதவ ரஷ்யா கூலிப்படைகளை அனுப்பி வருகிறது. மாலியின் வெளிவிவகார அமைச்சர் Abdoulaye Diop தெரிவிக்கையில், பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் ரஷ்யாவும் தாங்களும் ஒரே இலக்குடன் செயல்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.
உக்ரைனை ஒரு பயங்கரவாத நாடாகவே மாலி கருதுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மாலி கடந்த ஆண்டு உக்ரைனுடனான தூதரக உறவுகளை முறித்துக் கொண்டது, மாலி துருப்புக்கள் சந்தித்த கடுமையான தோல்வியில் உக்ரைன் ஒரு பங்கைக் கொண்டிருந்ததாக உக்ரைனின் மூத்த அதிகாரி ஒருவர் ஒப்புக்கொண்டதாகக் குற்றம் சாட்டியது.
மாலியின் கடும் பின்னடைவில் கொல்லப்பட்டவர்களில் ரஷ்யாவின் வாக்னர் கூலிப்படை குழுவின் உறுப்பினர்களும் அடங்குவர். மாலியை அடுத்து நைஜர் நாடும் உக்ரைனுடனான உறவுகளைத் துண்டித்துக் கொண்டதுடன், உக்ரைன் பயங்கரவாத அமைப்புகளை ஆதரிப்பதாக குற்றஞ்சாட்டியது.
மாலியில் ரஷ்ய இராணுவம் களமிறங்கியுள்ளதுடன், நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகிறது. மட்டுமின்றி, மாலி, புர்கினா மற்றும் நைஜர் ஆகிய நாடுகளுடன் பாதுகாப்பு ஒப்பந்தங்களை முன்னெடுத்து, அவர்களுக்கு இராணுவ உபகரணங்களையும் ரஷ்யா வழங்கியுள்ளது.
அத்துடன் கூட்டு இராணுவப்படை ஒன்றை உருவாக்கும் முயற்சியில் ரஷ்யா களமிறங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.