இந்தியா சந்திக்கும் சவால்கள்: ராஜ்நாத் சிங் பட்டியல்

4 பங்குனி 2025 செவ்வாய் 20:05 | பார்வைகள் : 652
உள்நாட்டில் பயங்கரவாதிகள், பிரிவினைவாதிகள், நக்சலைட்கள், மதக்கலவரம், சட்டவிரோத அகதிகள் ஆகிய சவால்களை இந்தியா எதிர்கொண்டு வருகிறது,'' என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசினார்.
டில்லியில் டி.ஆர்.டி.ஓ., சார்பில் நடக்கும் கண்காட்சி மற்றும் மாநாட்டில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியதாவது: உள்நாட்டு பாதுகாப்பும் மற்றும் வெளிப்புற பாதுகாப்பும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் போன்றவை. இதில் ஏற்படும் மாற்றங்களை புரிந்து கொண்டு அதற்கு ஏற்றவாறு நமது பாதுகாப்புக் கொள்கையில் மாற்றம் ஏற்படுத்த வேண்டியது அவசியம்.
இந்த புதிய யுகத்தில், நாம் புது மாதிரியான சவால்களை எதிர்கொண்டு வருகிறோம். நம்முன் உள்ள சவால்களின் தன்மைகளை நாம் புரிந்து கொள்ள வேண்டும். உள்நாட்டு பாதுகாப்பு மிகவும் கவனிக்கப்படும் நிலையில், பயங்கரவாதிகள், பிரிவினைவாதிகள், நக்சலைட்கள், மதக்கலவரம், எல்லை தாண்டி வரும் சட்டவிரோத அகதிகள் மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட குற்றங்கள் ஆகிய அச்சுறுத்தல்களை சந்தித்து வருகிறோம்.
இந்தியாவிற்கு வெளியேயான பாதுகாப்பிலும் நாம் பல சவால்களை சந்தித்து வருகிறோம். முன்பு, இவை வழக்கமானதாக இருந்தது. தற்போது வழக்கத்திற்கு மாறாக, நவீன போர் உத்திகள், சைபர் மற்றும் விண்வெளி சார்ந்த சவால்களையும் இந்தியா எதிர்கொண்டு வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.