பிரான்சின் மிக மோசமான விமான விபத்து! - வரலாற்றில் இருந்து...!!
6 ஆடி 2017 வியாழன் 10:30 | பார்வைகள் : 18605
ஜூன் 3 ஆம் திகதி, 1962 ஆம் ஆண்டு. பரிசின் ஓர்லி விமான நிலையத்தில் இருந்து 122 பயணிகள், 10 விமான ஊழியர்கள் உட்பட மொத்தம் 132 பேருடன் அந்த விமானம் புறப்பட தயாராக இருந்தது.
Air France விமான சேவையின் 007 வகை விமானம் அது. விமானத்துக்குள் இருந்தவர்கள் Georgia இன் Atlanta நகரில் வசிக்கும் கலைஞர்கள். விமானம் புறப்பட தயாரானது...
ஓடுபாதை 8 இல் விமானத்தின் சக்கரங்கள் சுழல.. விமானம் ஓடி.. மெதுவாக வேகம் எடுத்தது. ஆனால் வழக்கத்துக்கு மாறாக விமானத்தில் இருந்து வித்தியாசமாக ஒரு சத்தம் எழுந்தது. பயணிகளுக்கு மெல்ல அச்சம் எழுந்தாலும்.. விமானத்தின் சத்தம் அப்படித்தான் போலும் என அமைதியாக இருந்துவிட்டார்கள்.
3000 அடி நீளமுள்ள ஓடுதளம் அது. அதன் முடிவில் விமானம் மேலே எழும்பி காற்றி பறக்க ஆரம்பித்துவிடும்.
விமானம் உச்சவேகத்தில் ஓடுதளத்தில் ஓட.. குறிப்பிட்ட ஒரு இரைச்சல் சத்தமும் அதிகரித்தது.. ஓடுதளத்தின் முக்கால் வாசி தூரத்தை கடந்து மேலெழும்ப தயாரான நிலையில்.. விமானத்தின் கியர் (விசை) இழுக்கப்படுகிறது. ஆனால் அது கைகொடுக்கவில்லை.. எதோ பிரச்சனை என உணர்ந்த விமானிகள் விமானத்தை நிறுத்தும் முயற்சியை மேற்கொண்டனர்.
இரைச்சல் சத்தத்துடன் கட்டுப்பாட்டு அறைக்குள் இருந்து தகவல் பெற.. விமானத்தின் முன் சக்கரங்கள் மட்டும் ஓடுதளத்தை விட்டு எழுந்த நிலையில்.. அப்படியே கட்டுப்பாடு இழந்து விமானத்தின் முன் சக்கரங்கள் ஓடுதளத்தில் வந்து விழுந்தது.
சூழ்நிலையை உணர்ந்துகொள்ளும் முன், விமானம் சடுதியாக தீப்பிடித்துவிட்டது. இமைக்கும் நொடிக்குள் பாரிய சத்தத்துடன் வெடித்து எரிந்து கொண்டிருந்தது விமானம்.
மீட்புக்குழு வந்து சேரும் முன், விமானத்தில் இருந்த 122 பயணிகளும் தீயில் கருகி உயிரிழந்தனர். தவிர விமானக்குழுவில் இருந்த மூவர் தீ காயங்களுடன் தப்பிக்க, ஏனைய ஏழு பேரும் விமானத்தோடு எரிந்து சாம்பலானார்கள். உயிருடன் இருந்த மூவரையும் மீட்புக்குழுவினர் மருத்துவமனையில் சேர்க்க, அதிலும் ஒருவர் உயிரிழந்தார்.
மொத்தம் 130 உயிர்கள் ஒருசில நிமிடங்களில் பறிக்கப்பட, மிக மோசமான விமான விபத்தாக இது வரலாற்றில் பதிவானது.