கூட்டணி குறித்த அறிவிப்புக்கு இன்னும் 6 மாதம் இருக்கு! பழனிசாமி

5 பங்குனி 2025 புதன் 03:15 | பார்வைகள் : 1185
இதுவரை பா.ஜ.,வுடன் கூட்டணி கிடையாது என உரத்த குரலில் பேசி வந்த, அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமி, தற்போது, அந்த குரலை தளர்த்தியுள்ளார். ''கூட்டணி குறித்த அறிவிப்புக்கு இன்னும் ஆறு மாத காலம் இருக்கிறது. ஆனாலும், தி.மு.க., தான் எங்கள் முக்கிய எதிரி. ஓட்டுகளை சிதற விடாமல் ஒருங்கிணைத்து, தி.மு.க.,வை வீழ்த்துவதே, அ.தி.மு.க.,வின் கடமை,'' என, பா.ஜ., கூட்டணி தொடர்பான கேள்விக்கு, அவர் பதில் அளித்திருக்கிறார்.
மேலும், ''ராஜ்யசபா எம்.பி., 'சீட்' வழங்குவதாக, தே.மு.தி.க.,வுக்கு எந்த உத்தரவாதமும் அளிக்கவில்லை,'' என்றும், அவர் கைவிரித்துள்ளார்.
கடந்த சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி தோல்வியை தழுவிய பின், தோல்விக்கான காரணம் குறித்து, கட்சியின் மூத்த தலைவர்கள் பலருடன், பல கட்டமாக பேச்சு நடத்தினார் பழனிசாமி.
அதில் ஒரு சிலர், 'பா.ஜ.,வோடு கூட்டணியில் இருந்ததால், சிறுபான்மையினரின் ஓட்டுகள் நமக்கு கிடைக்கவில்லை. அதனால், பா.ஜ.,வோடு கூட்டணி இல்லை என்று அறிவித்து, தமிழகத்தில் பா.ஜ., அல்லாத வலுவான கூட்டணியை கட்டமைத்து செயல்பட்டால் மட்டுமே, தி.மு.க.,வை வீழ்த்த முடியும்' என தெரிவித்தனர்.
இதை அப்படியே ஏற்றுக்கொண்ட பழனிசாமி, கொஞ்ச காலத்துக்கு அமைதியாக இருந்தார். அந்த சமயத்தில் தான், 'ஊழல் ஆட்சி நடத்தியவர் ஜெயலலிதா' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை விமர்சித்தார்.
பா.ஜ.,வோடு கூட்டணி இல்லை என்று அறிவிப்பதற்கு சரியான காரணம் தேடிய பழனிசாமிக்கு, அண்ணாமலையின் கருத்து ஆதரவாக அமைந்தது.
உடனே, 'ஜெயலலிதாவை விமர்சித்த அண்ணாமலையை, 48 மணி நேரத்துக்குள் தமிழக பா.ஜ., தலைவர் பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும்; இல்லையென்றால், பா.ஜ.,வுடனான கூட்டணியை மறு பரிசீலனை செய்ய வேண்டியிருக்கும்' என, மத்திய பா.ஜ., தலைமைக்கு நெருக்கடி கொடுத்தார் பழனிசாமி.
அதில் பெரிய அளவில் ஆர்வம் செலுத்தாத பா.ஜ., தலைமை, உள்துறை அமைச்சர் அமித்ஷாவை விட்டு, இந்தப் பிரச்னையை, 'டீல்' செய்ய வைத்தது. இதையடுத்து, பழனிசாமியை டில்லிக்கு வரவழைத்துப் பேசினார் அமித்ஷா. அப்போது, அண்ணாமலையையும் அருகே உட்கார வைத்துக் கொண்டார்.
அண்ணாமலை பேசிய பேச்சு எதற்கும் அமித்ஷா தரப்பில் இருந்து பதில் வராத சூழலில், பா.ஜ.,வுக்கு எதிராக இருக்கும் கட்சியின் மூத்த தலைவர்கள் சிலர், பழனிசாமிக்கு நெருக்கடி கொடுத்தனர். பா.ஜ., கூட்டணியை விட்டு உடனே வெளியேற வேண்டும் என அவர்கள் சொன்னதைக் கேட்டு, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்தார் பழனிசாமி.
படுதோல்வி
அதன் தொடர்ச்சியாக, 2024ல் நடந்த லோக்சபா தேர்தலுக்காக, தன் தலைமையில் வலுவான கூட்டணியை கட்டமைக்க முயன்றார்; ஆனால், முடியவில்லை. தே.மு.தி.க., தவிர மற்ற எந்தக் கட்சியும் முன்வரவில்லை. கூட்டணியில் இருந்த பா.ம.க.,வும், பா.ஜ., பக்கம் போய் விட்டது.
இதனால், கிட்டத்தட்ட தனித்தே தேர்தலை எதிர்கொண்ட சூழ்நிலையில், அ.தி.மு.க.,வுக்கு தேர்தலில் படுதோல்வியே பரிசாக கிடைத்தது. அடுத்தடுத்து நடந்த இடைத்தேர்தல்களில் தோல்வி உறுதி என்பதை முன்கூட்டியே கணித்த பழனிசாமி, தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கினார். இதனால், கட்சித் தொண்டர்கள் சோர்வடைந்தனர். ஆனாலும், பழனிசாமியின் உறுதி தொடர்ந்தது.
இதற்கிடையில், கட்சியில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்டவர்கள் ஒன்றுசேர்ந்து, அ.தி.மு.க.,வுக்கு பல வகையிலும் நெருக்கடி கொடுத்தனர். இந்நிலையில் தான், புது வரவாக நடிகர் விஜய், த.வெ.க.,வை துவக்கினார்.
ரகசிய பேச்சு
உடனே, நடிகர் விஜயோடு கூட்டணி அமைத்து, வரும் சட்டசபைத் தேர்தலை எதிர்கொள்ளலாம் என பழனிசாமிக்கு, கட்சியின் மூத்த முன்னோடிகள் சிலர் ஆலோசனை சொல்ல, அதன் அடிப்படையில் சிலர் த.வெ.க.,வுடன் ரகசிய பேச்சு நடத்தினர்.
ஆனால், அக்கட்சியின் ஆலோசகரான பிரஷாந்த் கிஷோர், வரும் சட்டசபைத் தேர்தலில் த.வெ.க., தனித்து போட்டியிடும் என அறிவித்து, பழனிசாமி ஆசைக்கு தடை போட்டு விட்டார். இதையடுத்து, 'இனியும் பா.ஜ.,வை விலக்கி வைத்து விட்டு, கூட்டணி அரசியல் செய்ய முடியாது; பா.ஜ.,வோடு இணக்கமாக செல்லலாம். அப்போதுதான், தி.மு.க.,வை வீழ்த்த முடியும்' என, பழனிசாமியிடம் அவரது ஆதரவு நிர்வாகிகள் அறிவுறுத்தி உள்ளனர்.
வழக்கம் போல், இதையும் ஏற்காமல் முரண்டு பிடித்த பழனிசாமி, யதார்த்தத்தை உணர்ந்து பா.ஜ.,வோடு கூட்டணி செல்வதே சரியாக இருக்கும் என்ற முடிவுக்கு வந்துள்ளார். இதையடுத்தே, அவருடைய அணுகுமுறையில் திடீர் மாற்றம் ஏற்பட்டிருப்பதாக கூறும் கட்சியினர், ஆத்துாரில் அளித்த பேட்டியே அவருடைய மனநிலையை மாற்றத்தை தெளிவாக்குகிறது என்று சொல்லி சந்தோஷப்படுகின்றனர்.
வீழ்த்த வேண்டும்
சேலம் மாவட்டம், ஆத்துாரில், பழனிசாமி அளித்த பேட்டி:
நான் முதல்வராக இருந்தது முதல், அ.தி.மு.க., பற்றி மட்டுமே விமர்சனங்கள் வைக்கப்படுகிறது. தி.மு.க.,வில் எவ்வளவு அக்கிரமம் நடக்கிறது... அது குறித்து எந்த செய்தியும் வெளிவருவதில்லை. விஜயலட்சுமியுடனான சீமானுக்கான பிரச்னை, தனிப்பட்ட விவகாரம். அது குறித்து எதுவும் சொல்வதற்கில்லை.
தி.மு.க., வாய்ப் பேச்சில் மட்டும் அழகு; செயலில் பூஜ்ஜியம். வார்த்தை ஜாலத்தில் தி.மு.க.,வினர் கெட்டிக்காரர்கள். தமிழகத்துக்கு தேவையான நிதி கொடுக்கவில்லை என்றால், அதற்கு மத்திய அரசிடம் அழுத்தம் கொடுக்க வேண்டும்; லோக்சபாவிலும் பேசவேண்டும். நாற்பது எம்.பி.,க்களை வைத்துக் கொண்டு என்னதான் செய்கின்றனர்?
வரும், 2026 சட்டசபை தேர்தலில், பா.ஜ.,வுடன் கூட்டணி சேர உள்ளதாக செய்திகள் பரவி உள்ளன. எங்களைப் பொறுத்தவரை, ஒரே எதிரி, தி.மு.க.,தான். அந்த கட்சியை வீழ்த்த வேண்டும் என்பதே குறிக்கோள். ஓட்டுகள் சிதறாமல் ஒருங்கிணைந்து, தி.மு.க.,வை வீழ்த்துவது தான், அ.தி.மு.க.,வின் தலையாய கடமை. இது, 2026 தேர்தலில் நடக்கும்.
தி.மு.க.,வை வீழ்த்தும்படியான கூட்டணி அமையும். கூட்டணியில் யார் யார் பங்கு பெறுவர் என்பது குறித்து, ஆறு மாதங்களுக்கு பின் தான் கூற முடியும். தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு இருக்கிறது.
தே.மு.தி.க.,வுக்கு ராஜ்யசபா, 'சீட்' அளிப்பது குறித்து, நாங்கள் எங்கேயும் சொல்லவில்லை. லோக்சபா தேர்தல் அறிக்கைப்படி நடந்து கொள்வோம். இவ்வாறு அவர் கூறினார்.
ராஜ்யசபா 'சீட்' மறுப்பு; பிரேமலதா அதிர்ச்சி
லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணியில் இணைந்து, தே.மு.தி.க., போட்டியிட்டது. அக்கட்சிக்கு மூன்று தொகுதிகளுடன், ராஜ்யசபா 'சீட்' ஒதுக்கப்பட்டு இருப்பதாக, தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதா கூறி வந்தார். இதுதொடர்பாக ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளதாகவும், சமீபத்தில் பிரேமலதா பேட்டி அளித்தார். அதேநேரத்தில், நெருக்கடியான சூழலில் உள்ள அ.தி.மு.க., தலைமைக்கு, டில்லியில் அரசியல் பணிகளை மேற்கொள்ள ராஜ்யசபா எம்.பி., தேவை என்ற நிலை ஏற்பட்டு உள்ளது. அதனால், தன் தீவிர விசுவாசிக்கு இப்பதவியை வழங்க, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி முடிவெடுத்துள்ளார். எனவே, தே.மு.தி.க.,வுக்கு ராஜ்யசபா 'சீட்' கிடைக்க வாய்ப்பில்லை என்ற தகவல் பரவி வந்தது. அதை உறுதிப்படுத்தும் வகையில், தே.மு.தி.க.,விற்கு ராஜ்யசபா சீட் வழங்கும் வகையில், எந்த ஒப்பந்தமும் செய்யவில்லை என, பழனிசாமி நேற்று உறுதியாக கூறியுள்ளார். இது, தே.மு.தி.க., தலைமைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தே.மு.தி.க., தலைமை அலுவலகத்திற்கு நேற்று வந்த பிரேமலதாவிடம், இதுகுறித்து கேள்வி எழுப்பபட்டது. பதில் எதுவும் கூறாமல், அவர் சென்று விட்டார். இதுதொடர்பாக, சமூக வலைதள பக்கத்தில், ஒரு கருத்தை பதிவு செய்து, அதை அவசர அவசரமாக அவரே நீக்கி விட்டார். இப்பிரச்னை தொடர்பாக, தே.மு.தி.க., நிர்வாகிகள் யாரும் கருத்து தெரிவிக்க வேண்டாம் என்றும் அவர் தடை போட்டுள்ளார்.
'தி.மு.க.,வை வீட்டுக்கு அனுப்பணும்!'
அடுத்தாண்டு தேர்தலில், தி.மு.க.,வை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்பது தான், அனைவரின் விருப்பமும். தமிழகத்தில் தி.மு.க., ஆட்சியில் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. கூட்டணி பற்றி பேச காலமும் சூழலும் இன்னும் வரவில்லை; வரும்போது கூட்டணி அமைப்பு பற்றி பேசுவோம்.
அடுத்தாண்டு தேர்தலில், தி.மு.க., வீட்டுக்கு போக வேண்டும். பா.ஜ., நன்றாக வளர்ந்து வருகிறது. நாங்கள் எல்லாரிடமும் அன்பாக தான் பழகுகிறோம். எங்களுக்கு எதிரி கிடையாது. எங்கள் கூட்டணியில் யார் இருக்க வேண்டும் என்பதை, வரும் காலத்தில் பேசுவோம்.
அண்ணாமலை, தலைவர், தமிழக பா.ஜ.,