Paristamil Navigation Paristamil advert login

வெயிலில் அதிக நேரம் பணியாற்றாதீர்: பொது சுகாதாரத்துறை வேண்டுகோள்

வெயிலில் அதிக நேரம் பணியாற்றாதீர்: பொது சுகாதாரத்துறை வேண்டுகோள்

5 பங்குனி 2125 திங்கள் 08:19 | பார்வைகள் : 1820


வெயில் தாக்கம் அதிகம் காணப்படும் நேரங்களில், வெயிலில் தீவிரமாக பணியாற்றாதீர்,' என, பொது சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது.

தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்களுக்கு வெப்பநிலை அதிகரிக்கும்' என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், மனிதர்களுக்கு ஏற்படும் வெப்ப பாதிப்புகளை தவிர்ப்பதற்கான வழிகாட்டுதல்களை, பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் வெளியிட்டுள்ளார்.

அதன் விபரம்:

அதிகரிக்கும் வெப்ப நிலையால் ஏற்படும் விளைவுகளை தடுக்க, பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் செயல்படுவது அவசியம். உடலில் நீர்ச்சத்தை தக்க வைத்து கொள்வது முக்கியம். அதற்கு அதிக நீர் அருந்த வேண்டும். உப்பு சர்க்கரை கரைசல், எலுமிச்சை சாறு, மோர், இளநீர் உள்ளிட்ட பானங்களையும் அருந்தலாம்.

இறுக்கமான ஆடைகளை அணியாமல், பருத்தி ஆடைகளை தளர்வாக அணியலாம். குடை, தொப்பி, கையுறை என, வெப்பத்திலிருந்து தற்காக்கும் பொருட்களை பயன்படுத்த வேண்டும். காலணி அணிந்து வெளியே செல்ல வேண்டும். வசிப்பிடங்களில், காற்றோட்டம் இருப்பதை, உறுதி செய்வது முக்கியம்.

முதியோர், இணை நோயாளிகள், குழந்தைகள், கர்ப்பிணியர், நேரடி வெயிலில் பணியாற்றுவோர், குளிர் பிரதேசங்களில் இருந்து வந்தவர்கள், முன்னெச்சரிக்கையுடன் இருத்தல் அவசியம்.

உடலின் வெப்பநிலை அதிகமாகாத வகையில், தற்காத்து கொள்ள வேண்டும். வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் நேரங்களில், வெளியே செல்வதை தவிர்க்கவும். வெயிலில் தீவிரமாக பணியாற்றக் கூடாது. மது, புகை, தேநீர் போன்றவற்றை அருந்துவதை தவிர்க்க வேண்டும்.

பழைய உணவுகள், அதிக புரதம் உள்ள உணவுகளை உட்கொள்ளக் கூடாது. நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் வாகனங்களுக்கு அருகே, குழந்தைகளை அனுமதிக்கக் கூடாது. அதிலிருந்து வெளியேறும் அதீத வெப்பம், உடல் நலத்தை பாதிக்கும். தலைவலி, மயக்கம், தலை சுற்றல் ஏற்பட்டால், மருத்துவ உதவியை உடனடியாக நாட வேண்டும். தேவைப்பட்டால் அவசர கால 108 சேவையை அழைக்கலாம். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்