ஹைதராபாதிலிருந்து மேதா பட்கர் வெளியேற்றம்

5 பங்குனி 2125 திங்கள் 10:21 | பார்வைகள் : 120
அனுமதியின்றி வந்ததாக கூறி, சமூக செயற்பாட்டாளர் மேதா பட்கரை, ஹைதராபாதிலிருந்து போலீசார் வெளியேற்றினர்.
தெலுங்கானா மாநிலத்தில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ரேவந்த் ரெட்டி முதல்வராக உள்ளார். இம்மாநில தலைநகரான ஹைதராபாதில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்க, சமூக செயற்பாட்டாளர் மேதா பட்கர், நேற்று முன்தினம் வந்தார். அப்போது, முசி நதி அருகே உள்ள, 'நர்மதா பச்சாவ் அந்தோலன்' என்ற தன் அமைப்பைச் சேர்ந்த உறுப்பினர் வீட்டுக்கு சென்றார்.
அங்கு வந்த போலீசார், உடனடியாக அங்கிருந்து வெளியேறும்படி கூறினர். சட்டம் - ஒழுங்கை காரணம் காட்டி, அங்கிருந்து செல்ல அறிவுறுத்தப்பட்டதால், வேறு வழியின்றி அந்த இடத்தை விட்டு மேதா பட்கர் வெளியேறினார்.
எனினும், முசி நதிக்கு உயிரூட்ட, மாநில காங்., அரசு மேற்கொள்ளும் நடவடிக்கையால், அந்த பகுதியில் வசித்த அப்பாவி மக்கள் பலர் அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கு ஆதரவாக, மேதா பட்கர் போராட்டம் நடத்த போவதாக செய்தி பரவியதை அடுத்து, அவரை அந்த இடத்திலிருந்து போலீசார் அப்புறப்படுத்தினர்
இதுகுறித்து போலீசார் கூறும்போது, 'நாடு முழுதும் அறியப்பட்ட சமூக சேவகரான மேதா பட்கர் எங்கு செல்கிறார் என்பதை முன்கூட்டியே போலீசாருக்கு தெரிவிக்க வேண்டும். ஆனால், அவர் எவ்வித தகவலுமின்றி திடீரென வந்ததால், அங்கிருந்து வெளியேற உத்தரவிட்டோம்' என்றனர்.