தொடரூந்தை தடம் புரட்டிய இரண்டாம் உலகப்போர்!!
4 ஆடி 2017 செவ்வாய் 12:31 | பார்வைகள் : 18758
1992 ஆம் ஆண்டின் டிசம்பர் மாதம் அது. Nord மாவட்டத்தில் உள்ள Valenciennes தொடரூந்து நிலையத்தில் இருந்து பரிசுக்கு வழக்கம் போல் அதிவேக TGV தொடரூந்து, மணிக்கு 300 கிலோ மீட்டர்கள் எனும் வேகத்தில் வந்துகொண்டிருந்தது.
முன்னால் ஒரு இஞ்சின். பின்னால் நான்கு பெட்டிகள்.. உள்ளே 200 பயணிகள் என மிகச்சிறிய தொடரூந்து அது. Haute Picardie, TGV தொடரூந்து நிலையத்தை (அப்போது இந்த நிலையம் முழுமையாக கட்டி முடிக்கப்படவில்லை) நெருங்கிக்கொண்டிருக்கும் போது.. அந்த விபத்து இடம்பெற்றது.
சில நாட்கள் முன்னர் அடித்து பெய்திருந்த பெருமழையினால், தண்டவாளத்தின் கீழே பெரும் குழி ஒன்று தோன்றியிருந்தது தொடரூந்தில் பயணம் செய்திருந்த 200 பேரின் போதாத காலம்!! தொடரூந்தின் இஞ்சின் அந்த தண்டவாளத்தை கடந்து செல்கையில்.. பாரம் தாங்காத தண்டவாளம் கீழ் பக்கமாக வளைந்தது. இஞ்சின் தண்டவாளத்தை விட்டு வெளியே பாய்ந்தது.
இஞ்சின் பெட்டியுடன் தொடுத்திருந்த ஏனைய பெட்டிகளும் சரிந்தன. அதிஷ்ட்டவசமாக இந்த விபத்தில் எவரும் உயிரிழக்கவில்லை. சிலர் இலேசான காயங்களுக்கு மாத்திரம் உள்ளாகினர்.
இது ஒரு பக்கம் இருக்க, இந்த திடீர் பள்ளம் எப்படி தோன்றியது.. என்ற குழப்பம் மேலோங்க..., ஆராய்ச்சிகள் ஆரம்பித்தன. பல நாள் ஆராய்ச்சியின் பின்னர், அது அறிவிக்கப்பட்டது.
அந்த பள்ளம் இரண்டாம் உலகப்போரின் போது ஏற்பட்ட பள்ளம் எனவும், அதை தொடரூந்து கட்டுமான பணியாளர்கள் கவனிக்காமல் பாதை அமைத்துவிட்டார்கள் எனவும் பின்னர் அறிவிக்கப்பட்டது!!