2026 சட்டசபை தேர்தலிலும் 5 முனை போட்டிதான்; முடிவு எப்படி இருக்கும்?

5 பங்குனி 2025 புதன் 16:40 | பார்வைகள் : 914
விஜய்யின் தவெக தனித்தே போட்டியிட முடிவு செய்து இருப்பதாக பிரசாந்த் கிஷோர் கூறியிருக்கிறார். இதனால் சட்டசபை தேர்தலில் 5 முனை போட்டிக்கே அதிக வாய்ப்புகள் உள்ளன.
அரசியலில் யாரும் நிரந்தர நண்பனும் இல்லை, நிரந்தர எதிரியும் இல்லை என்று சொல்வார்கள். மக்கள் பிரச்சினைகளில் ஆளுங்கட்சியுடன் மோதும் அரசியல் கட்சிகள் கூட தேர்தல் நேரத்தில் எல்லாவற்றையும் மறந்துவிட்டு அவர்களுடன் கூட்டணி அமைத்துக் கொள்வார்கள். இதற்கு கடந்த கால தேர்தல்களில் அமைந்த கூட்டணிகளே சாட்சி.
தமிழ்நாட்டில் இன்றைக்கு தி.மு.க.வும், பா.ஜ.க.வும் எதிரும் புதிருமான கட்சி. ஆனால், 2001-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் இந்த 2 கட்சிகளும் கூட்டணி அமைத்திருந்தன. அதேபோல், இன்றைக்கு தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ், இரு கம்யூனிஸ்டு கட்சிகள் அப்போது அ.தி.மு.க. கூட்டணியில் இருந்தன. பா.ம.க.வும், த.மா.கா.வும் அதே கூட்டணியில்தான் அங்கம் வகித்தன. மும்முனை போட்டி நிலவிய இந்த தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்றது.