சிறிய கிராமம் ஒன்றுக்கு ரகசிய விஜயம் மேற்கொண்ட மக்ரோன்!!

5 பங்குனி 2025 புதன் 06:42 | பார்வைகள் : 2455
ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன், Yonne மாவட்டத்தில் உள்ள சிறிய கிராமம் ஒன்றுக்கு ரகசிய விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.
நேற்று மார்ச் 4, செவ்வாய்க்கிழமை பிற்பகல் இந்த பயணம் அமைந்திருந்தது. எலிசே திட்டமிடலில் இல்லாத இந்த பயணம், மிக குறுகிய நேரமே அமைந்திருந்தது. Yonne மாவட்டத்தில் உள்ள ஆயிரத்துக்கும் குறைவானவர்கள் மட்டுமே வசிக்கும் Augy எனும் சிறு கிராமத்துக்கு ஜனாதிபதி பயணித்திருந்தார்.
குறித்த கிராமத்தின் நகர முதல்வரையும், அப்பகுதி மக்களையும் சந்தித்து ஜனாதிபதி உரையாடினார்.
இது தொடர்பில் நகர முதல்வர் Nicolas Briolland தெரிவிக்கையில், “ஜனாதிபதியின் பிராந்திய அலுவலகர் சந்திக்க வருவார்.. ஏற்பாடு செய்யவும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் இறுதியில் ஜனாதிபதியே வருகை தந்தார். அவர் வருவார் என நினைக்கவில்லை” என தெரிவித்தார்.
அக்கிராமத்தில் ‘அரசாங்கம் தொடர்பான அறிவித்தல்களை பெறும்’ ‘பிரெஞ்சு சேவை மையம்’ ஒன்று அமைக்கப்பட்டு அது திறந்து வைக்கப்படுவதற்கு ஜனாதிபதிக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால் எலிசே தரப்பில் எந்த பதிலும் அளிக்கப்படவில்லை. எனவே ஜனாதிபதி இல்லாமல் திறப்புவிழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், ஜனாதிபதி உலங்குவானூர்தியில் வருகை தந்திருந்தார்.
ரிபன் வெட்டி நிலையத்தை திறந்து வைத்த ஜனாதிபதி ஒருமணிநேரத்திலேயே பரிசுக்கு திருபினார்.