உக்ரேன் ஜனாதிபதியை அழைத்துக்கொண்டு அமெரிக்கா செல்கிறாரா மக்ரோன்??! - பிரித்தானிய ஊடகம் வெளியிட்ட பரபரப்பு செய்தி!!

5 பங்குனி 2025 புதன் 19:15 | பார்வைகள் : 2645
உக்ரேன் ஜனாதிபதி செலன்ஸியை அழைத்துக்கொண்டு ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் அமெரிக்காவுக்குச் செல்ல உள்ளதாக பிரித்தானிய ஊடகம் ஒன்று வெளியிட்ட செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இரு நாட்டு ஜனாதிபதிகளும் தனித்தனியே பயணங்கள் மேற்கொண்டு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பினைச் சந்தித்திருந்தமை அறிந்ததே. குறிப்பாக ட்ரம்ப்-செலன்ஸ்கி இருவருக்குமிடையிலான சந்திப்பு அரசியல் களத்தில் பரப்பரப்பின் உச்சமாக அமைந்திருந்தது. இரு ஜனாதிபதிகளும் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தனர். பின்னர் ஒப்பந்தங்கள் எதுவும் கைச்சாத்திடாமல் செலன்ஸ்கி நாடு திரும்பியிருந்தார்.
கிட்டத்தட்ட உக்ரேனை கைவிடும் நிலையில் அமெரிக்க இருப்பதாகவும், அமெரிக்காவின் உதவி இல்லாமல் உக்ரேனினால் ‘கள முனையை’ சமாளிக்க முடியாது எனவும் அரசியல் அவதானிப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அதை அடுத்து, செலன்ஸ்கி மற்றும் மக்ரோன் ஆகிய இருவரும் வரும் வாரங்களில் அமெரிக்காவுக்குச் செல்ல உள்ளதாகவும், அவர்களுடன் பிரித்தானிய பிரதமர் கியஸ் ஸ்டாமரும் உடன் செல்வதாகவும் பிரித்தானியாவின் பிரபலமான Sky News ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
மூவரும் இணைந்து அமெரிக்க ஜனாதிபதியுடன் சமாதான பேச்சுவார்த்தை ஒன்றை நிகழ்த்துவார்கள் எனவும் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேவேளை, இந்த செய்தி தொடர்பாக பதில் எதுவும் வெளியிடாமல் எலிசே மாளிகை மெளனம் காத்து வருகிறது.