30 ஆண்டு! தொகுதி மறுவரையறை என்ற பேச்சே கேட்கக்கூடாது

6 பங்குனி 2025 வியாழன் 02:54 | பார்வைகள் : 137
மக்கள்தொகை கட்டுப்பாட்டை, அனைத்து மாநிலங்களும் முன்னெடுப்பதை ஊக்குவிக்கும் வகையில், 1971ம் ஆண்டு மக்கள்தொகை அடிப்படையிலேயே, லோக்சபா தொகுதிகள் தொடர்ந்து வரையறுக்கப்படும் என, 2000ம் ஆண்டில், அப்போதைய பிரதமர் உறுதி அளித்தார். அந்த வரையறை, 2026ம் ஆண்டில் இருந்து மேலும் 30 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படும் என, பிரதமர் உறுதி அளிக்க வேண்டும்' என, அனைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அடுத்த ஆண்டு லோக்சபா தொகுதிகள் மறு சீரமைப்பு செய்யப்பட உள்ளன. தற்போதைய மக்கள்தொகை அடிப்படையில், தொகுதிகளை மறுசீரமைப்பு செய்தால், தமிழகத்தில் தொகுதிகள் எண்ணிக்கை குறையும். எனவே, அவ்வாறு செய்யக் கூடாது என, முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
இந்நிலையில், தொகுதி மறுவரையறை குறித்து ஆலோசிப்பதற்காக, நேற்று சென்னையில் அனைத்து கட்சிகள் கூட்டத்தை முதல்வர் கூட்டினார். தலைமைச் செயலகத்தில் நடந்த கூட்டத்திற்கு, முதல்வர் ஸ்டாலின் தலைமை வகித்தார்.
அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
நாட்டின் கூட்டாட்சி அமைப்புக்கும், தமிழகம் மற்றும் தென் மாநிலங்களின் அரசியல் பிரதிநிதித்துவ உரிமைக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடிய, மக்கள்தொகை அடிப்படையிலான லோக்சபா தொகுதி மறுசீரமைப்பை ஒருமனதாக எதிர்க்கிறோம்
நாட்டின் நலனுக்காக, மக்கள்தொகை கட்டுப்பாட்டை முனைப்பாக செயல்படுத்திய ஒரே காரணத்திற்காக, தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களின் பார்லி மென்ட் பிரதிநிதித்துவம் குறைக்கப்படுவது, முற்றிலும் நியாயமற்றது.
அந்த வகையில் மக்கள்தொகை கட்டுப்பாட்டை, அனைத்து மாநிலங்களும் முன்னெடுப்பதை ஊக்குவிக்கும் வகையில், 1971ம்ஆண்டு மக்கள்தொகை அடிப்படையிலேயே, லோக்சபா தொகுதிகள் தொடர்ந்து வரையறுக்கப்படும் என, 2000ம் ஆண்டில், அப்போதைய பிரதமர் உறுதி அளித்தார்.
அந்த வரையறை, 2026ம் ஆண்டில் இருந்து மேலும் 30 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படும் என, பிரதமர் உறுதி அளிக்க வேண்டும்
லோக்சபாவில் தற்போதைய உறுப்பினர்களின் எண்ணிக்கை உயர்த்தப்பட்டால், 1971ம் ஆண்டு மக்கள்தொகை அடிப்படையில், லோக்சபா மற்றும் ராஜ்யசபாவில், தற்போது மாநிலங்களுக்கு எந்த விகிதத்தில் தொகுதிகள் எண்ணிக்கை உள்ளதோ, அதே விகிதத்தில், தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களின் தொகுதிகள் எண்ணிக்கையை உயர்த்த, தேவையான அரசியல் சட்ட திருத்தத்தை, மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும்
* தொகுதி மறு சீரமைப்பின் காரணமாக, பார்லிமென்டில் தமிழகத்தின் தற்போதைய பிரதிநிதித்துவ சதவீதமான, 7.18ஐ எக்காரணம் கொண்டும், மத்திய அரசு மாற்றம் செய்யக் கூடாது
* தொகுதி மறுசீரமைப்புக்கு, தமிழகம் எதிரானதாக இல்லை. அதே சமயம், 50 ஆண்டுகளாக, சமூக, பொருளாதார நலத் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தியதற்கான தண்டனையாக, தொகுதி மறுசீரமைப்பு அமைந்து விடக் கூடாது
* இக்கோரிக்கைகளையும், அவை சார்ந்த போராட்டத்தையும் முன்னெடுத்து செல்லவும், மக்கள் மத்தியில் இப்பிரச்னை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில், எம்.பி.,க்கள் கொண்ட கட்சி பிரதிநிதிகள் அடங்கிய கூட்டு நடவடிக்கை குழு அமைக்கவும், அதற்கான முறையான அழைப்பை, அந்த கட்சிகளுக்கு அனுப்பி வைக்கவும், கூட்டம் தீர்மானிக்கிறது.இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அ.தி.மு.க., - ஜெயகுமார்: தமிழகத்தில் தற்போதைய பிரதிநிதித்துவ விகிதாச்சாரமான, 7.18 சதவீதத்திற்கு குறையாமலும், தற்போதுள்ள 39 லோக்சபா தொகுதிகள் எண்ணிக்கைக்கு குறையாமலும், தொகுதி மறுசீரமைப்பு செய்யப்பட்ட பின்னரும் இருக்கும்படி நிர்ணயம் செய்ய வேண்டும். அப்போதுதான் மக்கள்தொகையை குறைத்த தமிழகம் போன்ற மாநிலங்களுக்கு, பாதிப்பை ஏற்படுத்தாமல், அனைவராலும் ஏற்று கொள்ளப்படும் முடிவாக அமையும்.
தற்போது லோக்சபா தொகுதிகள் எண்ணிக்கை, 543 என்பதை மாற்றாமல், ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள லோக்சபா தொகுதிகளின் சராசரி மக்கள்தொகை அடிப்படையில், எண்ணிக்கை மாறாமல் மறுசீரமைப்பு செய்தால், எந்த மாநிலத்திற்கும் பாதிப்பு ஏற்படாது.
இதனால், மாநிலங்களுக்குள் இடம் மாறுதல் போன்ற காரணங்களால், சில தொகுதிகளில் அதிக அளவில் மக்கள்தொகை கூடி உள்ளதால், அவற்றை சீரமைக்க வாய்ப்பு ஏற்படும்.
வி.சி., தலைவர் திருமாவளவன்: மறுவரையறை செய்தே தீர வேண்டும் என, மத்திய அரசு முடிவெடுத்தால், அனைத்து மாநிலங்களுக்கும், சமச்சீரான முறையில் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும்.
பா.ம.க., தலைவர் அன்புமணி: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தொகுதி மறுசீரமைப்பில் தமிழகத்திற்கு உள்ள தொகுதிகள் எண்ணிக்கையை குறைக்க மாட்டோம் என அழுத்தம் திருத்தமாக கூறியிருக்கிறார். ஆனால், உத்தர பிரதேசம், பீஹார் உள்ளிட்ட மாநிலங்களில் எவ்வளவு தொகுதிகளை அதிகரிக்கப் போகிறோம் என்பதை சொல்லவில்லை.
மத்திய அரசு, அவர்களுக்குள் மறுசீரமைப்பை பற்றி பேசிக் கொண்டிருக்கிறது. எனவே, இந்த கூட்டம் அவசியமானது. முதல்வர் ஸ்டாலின், தென் மாநில முதல்வர்களை சந்தித்து இதுகுறித்து பேச வேண்டும். தொடர்ந்து சட்ட ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும், மத்திய அரசுக்கு அழுத்தம் தரவேண்டும்.
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்: மக்கள்தொகை அடிப்படையிலான மறுசீரமைப்பால், தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, பஞ்சாப், ஒடிசா உள்ளிட்ட மாநிலங்கள் மட்டுமின்றி, வடகிழக்கு மாநிலங்களும் பாதிக்கப்படும். இதை தடுக்க, முதல்வர் எடுத்துள்ள முயற்சியை பாராட்டுகிறேன். மறுசீரமைப்பு என்ற பேச்சை, எந்த நேரத்தில், எதற்காக பேசுகின்றனர் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். லோக்சபா தொகுதிகள் எண்ணிக்கையை குறைக்கக் கூடாது. ஜனநாயகத்தையும், கூட்டாட்சியையும், பன்முக தன்மையையும் காக்க வேண்டும்.
த.வெ.க., பொதுச்செயலர் ஆனந்த்: தொகுதி மறுசீரமைப்பு தேவையற்றது. இதுதான் எங்கள் கட்சி தலைவர் விஜயின் நிலைப்பாடு.
பா.ஜ., - நா.த.க., புறக்கணிப்பு
பா.ஜ., நாம் தமிழர் உள்ளிட்ட, ஏழு கட்சிகள், அனைத்து கட்சி கூட்டத்தை புறக்கணித்தன.தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட 66 அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. அதன்படி, 59 கட்சிகளின் தலைவர்கள், பிரதிநிதிகள் பங்கேற்றனர். தமிழக பா.ஜ., நாம் தமிழர் கட்சி, த.மா.கா., புதிய நீதி கட்சி, புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்தன.
இதற்கிடையில், கூட்டம் நடக்கும்போது, அங்கு வந்த ஒரு கட்சியினர், தங்களுக்கு அழைப்பு விடுக்கவில்லை என, வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அனைத்து கட்சிகள் கூட்டத்தில், முதல்வர் கொண்டு வந்த தீர்மானத்தை, 60 கட்சிகள் வரவேற்றுள்ளன. தீர்மானத்தை ஒட்டி பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கருத்து தெரிவித்தனர். அதன் அடிப்படையில் தீர்மானத்தில் திருத்தம் செய்ய, முதல்வர் அறிவுறுத்தினார். தொகுதி வரையறை செய்யும்பட்சத்தில், இதுகுறித்து லோக்சபாவில் எழுத்துப்பூர்வமாக பிரதமர் தெரிவிக்க வேண்டும். அரசியல் அமைப்பு சட்டத்திலும் திருத்தம் மேற்கொள்ள வேண்டும். அனைத்து கட்சி கூட்டத்தின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து, முதல்வர் முடிவு செய்வார். தொகுதி வரையறை தேவையற்றது என, பல கட்சிகள் தெரிவித்துள்ளன. இதில் அரசியல் செய்ய வேண்டியது எதுவும் இல்லை. - தங்கம் தென்னரசு,நிதி அமைச்சர்.
தமிழகத்திற்கு மட்டுமல்ல, தென் இந்தியாவுக்கே அபாயமான செயல்!
அனைத்து கட்சிகள் கூட்டத்தில், முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:தமிழகம் மிகப்பெரிய உரிமை போராட்டத்தை நடத்த வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டு உள்ளது. அதை உணர்த்தவே இந்த கூட்டம். தொகுதி மறுசீரமைப்பு எனும் கத்தி, தென் மாநிலங்களின் தலைக்கு மேல் தொங்கிக் கொண்டு இருக்கிறது. இதனால், தமிழகம் கடுமையாக பாதிக்கப்பட உள்ளது. தமிழகத்தில், 39 லோக்சபா தொகுதிகள் உள்ளன. இதை குறைக்கும் அபாயம் நெருங்கி கொண்டிருக்கிறது. மத்திய அரசு, 2026ம் ஆண்டு லோக்சபா தொகுதிகளின் எண்ணிக்கையை மறுசீரமைப்பு செய்யப் போகிறது. பொதுவாக இதை மக்கள்தொகையை கணக்கிட்டுத்தான் செய்வர்.மக்கள்தொகையை கட்டுப்படுத்த வேண்டும் என்பது, நாட்டின் மிக முக்கியமான இலக்கு. அந்த இலக்கில், தமிழகம் வெற்றி பெற்றிருக்கிறது. பல பத்தாண்டுகளாக வெற்றிகரமான குடும்ப கட்டுப்பாடு திட்டங்கள், பெண்கள் கல்வி மற்றும் சுகாதார முன் முயற்சிகள் வழியாக, நாம் இதை சாதித்திருக்கிறோம்.தற்போதுள்ள, 543 லோக்சபா தொகுதிகள் தொடர்ந்தால், மக்கள்தொகை குறைவாக இருப்பதால், நம்முடைய தொகுதிகளின் எண்ணிக்கை குறைக்கப்பட வாய்ப்பிருக்கிறது. தமிழகம் மொத்தமாக எட்டு லோக்சபா தொகுதிகளை இழக்கும். அதாவது இனி தமிழகத்திற்கு, 31 எம்.பி.,க்கள்தான் இருப்பர்.லோக்சபா தொகுதிகளின் எண்ணிக்கை, 848 ஆக உயர்த்தப்பட்டு, தற்போதைய விகிதாச்சாரத்தின்படி மறுசீரமைப்பு செய்யப்பட்டால், நமக்கு கூடுதலாக 22 தொகுதிகள் கிடைக்க வேண்டும். ஆனால், தற்போதைய மக்கள்தொகையின்படி மறுசீரமைப்பு செய்தால், 10 தொகுதிகள்தான் கூடுதலாக கிடைக்கும். இதனால், நாம் 12 கூடுதல் தொகுதிகளை இழக்க நேரிடும். இந்த இரண்டு முறைகளிலும், நமக்கான பிரதிநிதித்துவம் குறைந்து, அதிக மக்கள்தொகை கொண்ட மாநிலங்களுக்கு, அதிக பிரதிநிதித்துவம் கிடைக்கும். இதனால், தமிழகத்தின் குரல் நசுக்கப்படும்.இது வெறும் உறுப்பினர்களின் எண்ணிக்கை குறித்த கவலை இல்லை; தமிழகத்தின் உரிமை சார்ந்த கவலை. தமிழகம் எதிர்கொள்ள இருக்கும் பிரச்னையில், அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் தலைவர்கள் ஒன்றிணைய வேண்டும். அனைத்து கட்சிகளும், கட்சி எல்லைகளைக் கடந்து, குரல் கொடுக்க வேண்டும்.மக்கள்தொகை அடிப்படையில், தொகுதி மறுசீரமைப்பு செய்தால், அது தமிழக மக்களின் பிரதிநிதித்துவ எண்ணிக்கையை குறைத்து விடும். எனவே, இந்த சதியை, நாம் அனைவரும் சேர்ந்து முறியடித்தாக வேண்டும்.தொகுதி மறுசீரமைப்பு என்பது, தமிழகத்துக்கு மட்டுமல்ல; ஒட்டுமொத்த தென் இந்தியாவுக்கே அபாயமான செயல். இதில் நமக்குள் கருத்து மாறுபாடு இருக்கக் கூடாது.தற்போது, 39 எம்.பி.,க்கள் இருக்கும்போது எழுப்பும் குரலையே, மத்திய அரசு ஏற்க மறுக்கும் நிலையில், எம்.பி.,க்கள் எண்ணிக்கை குறைக்கப்பட்டால், அது தமிழகத்திற்கு இழைக்கப்பட்ட அழிக்க முடியாத அநீதியாக மாறும். எனவே, மக்கள்தொகை கணக்கெடுப்பு அடிப்படையில், தொகுதி மறுசீரமைப்பு செய்யப்படுவதை, நாம் ஆணித்தரமாக எதிர்க்க வேண்டும்.இவ்வாறு முதல்வர் பேசினார்.