Paristamil Navigation Paristamil advert login

அனைத்துக்கட்சி தலைவர்களை சந்திப்போம்: அண்ணாமலை

அனைத்துக்கட்சி தலைவர்களை சந்திப்போம்: அண்ணாமலை

6 பங்குனி 2125 செவ்வாய் 10:57 | பார்வைகள் : 110


அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்ற, 45 கட்சிகளுக்கும், பா.ஜ., சார்பில் கடிதம் எழுதப்படும். அக்கட்சிகளின் தலைவர்களை, பா.ஜ., மூத்த தலைவர்கள் சந்தித்து, தொகுதி மறுவரையறை தொடர்பாக, சந்தேகம், அச்சம் இருந்தால், அதை நீக்க உரிய விளக்கம் அளிப்பர்,'' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

தமிழக பா.ஜ., சார்பில், மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக, 'சமக்கல்வி எங்கள் உரிமை' என்ற கையெழுத்து இயக்கம் துவக்க நிகழ்ச்சி, சென்னை அமைந்தகரையில் நேற்று நடந்தது. இதை, பா.ஜ., மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் துவக்கி வைத்தார்.

நிகழ்ச்சியில், இணையதளம் வாயிலாக ஆதரவு தெரிவிக்க, 'புதிய கல்வி' என்ற இணையதளத்தை, முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார்.

நிகழ்ச்சியில், அண்ணாமலை, மேலிட இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, மூத்த தலைவர் எச்.ராஜா உட்பட பலர் பங்கேற்றனர்.

டிஜிட்டல் முறை

அப்போது அண்ணாமலை அளித்த பேட்டி:

பிரதமர் மோடி கொண்டு வந்துள்ள, தேசிய கல்விக் கொள்கையில், மூன்றாவது மொழியாக, இந்திய மொழி ஒன்றை தேர்வு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஆனாலும், அதை ஏற்க மறுத்து என்னென்னவோ சொல்கின்றன தமிழக கட்சிகள். மும்மொழிக் கல்விக்கு ஆதரவாக, ஒவ்வொரு கிராமத்திலும் பா.ஜ.,வினர் வீதி வீதியாக சென்று, மக்களிடம் கையெழுத்து வாங்குவர். இதற்கான இணையதளத்தில், டிஜிட்டல் முறையில் கையெழுத்திடும் வசதி உள்ளது.

மே கடைசிக்குள், ஒரு கோடி கையெழுத்துகள் பெற்று, ஜனாதிபதியிடம் வழங்கி, தமிழக மக்களின் குரலை எடுத்துரைப்போம்.

மக்கள் தொகை அடிப்படையில், தொகுதி மறுவரையறை செய்ய வேண்டும் என்பது, காங்கிரசின் அடிப்படை கொள்கை. இதை பிரதமர் மோடி எதிர்க்கிறார்.

லோக்சபாவில், 543 எம்.பி.,க்கள் உள்ளனர். அதில், தமிழகத்தின் பங்கு, 7.17 சதவீதம். எம்.பி.,க்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் பட்சத்தில், தமிழகத்திற்கு, 7.17 சதவீதம் அப்படியே இருக்கும் என, மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா தெளிவாகக் கூறி விட்டார். அப்படி இருக்கும்போது, அனைத்துக்கட்சி கூட்டம் நடத்த வேண்டிய கட்டாயம் என்ன?

தமிழகத்தில் எம்.பி.,க்கள் எண்ணிக்கையை குறைக்கப் போவதாக, முதல்வருக்கு யார் தகவல் தெரிவித்தனர் என தெரிவிக்கவில்லை. தொகுதி மறுவரையை, 2000ல் ஒத்தி வைத்தது, பா.ஜ.,வைச் சேர்ந்த பிரதமர் வாஜ்பாய்.

யாரும் கூறாத நிலையில், தொகுதி மறுவரையறையை, 30 ஆண்டுகளுக்கு தள்ளி வைக்க வேண்டும் என, ஸ்டாலின் கூறுகிறார். தென்மாநிலங்களில் உள்ள அனைத்து கட்சிகளையும் இணைத்து, போராட்டக் குழுவை உருவாக்குவோம் என்கிறார். தமிழகத்திற்கு எட்டு எம்.பி.,க்கள் குறையும் என்று சொல்கின்றனர்.

தேர்தல் கமிஷன், மத்திய அரசு, பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சர், பார்லிமென்டில் நடந்த கடைசி கூட்டம் என, எங்குமே இது சம்பந்தமாக எதுவுமே கூறவில்லை.

எங்கள் கடமை

கூட்டணி குறித்து, மறைமுகமாக யாரிடமும் பேசவில்லை. சட்டசபை தேர்தலுக்கு, இன்னும் ஓராண்டு உள்ளது. நேரம் வரும்போது, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் எந்தெந்த கட்சிகள் இருக்கும் என்பது குறித்த அறிவிப்பு வரும்.

அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்ற, 45 கட்சிகளுக்கும், பா.ஜ., சார்பில் கடிதம் எழுதப்படும். அவர்களை, பா.ஜ., மூத்த தலைவர்கள் சந்தித்து, மறுவரையறை தொடர்பாக, அவர்களுக்கு சந்தேகம் இருந்தால், அதை தெளிவுபடுத்துவர். இதை எங்களின் கடமையாக பார்க்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்