Paristamil Navigation Paristamil advert login

ஓரணியில் இணைக்க முடியாது

ஓரணியில் இணைக்க முடியாது

6 பங்குனி 2025 வியாழன் 05:41 | பார்வைகள் : 123


எதிர்வரும் மே மாத முதல் வாரத்தில் இடம்பெறலாமென எதிர்பார்க்கப்படும் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் தமிழ் தேசியக் கட்சிகள், வடக்கு, கிழக்கு மாகாணங்களில் ஓரணியாகப் போட்டியிடுவதற்கான முன்முயற்சிகள் எடுக்கப்பட்டு, பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத 7 கட்சிகள் வரை இதுவரை கூட்டணி அமைத்துள்ள நிலையில், பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதான  கட்சிகள் நாம் ஓரணியில் இணைய மாட்டோம் என்பதனை தேசிய மக்கள் சக்தி அரசின் 2025ஆம் ஆண்டுக்கான
வரவு-செலவுத் திட்டம் மீதான வாக்கெடுப்பில் எதிரும் புதிருமாக வாக்களித்து உறுதிப்படுத்தியுள்ளன.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் 2025ஆம் ஆண்டுக்கான  வரவு-செலவுத் திட்டத்தை கடந்த  பெப்ரவரி மாதம். 17ஆம் திகதி ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் என்ற வகையில் பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பித்து
 
வரவு-செலவுத் திட்ட உரையை ஆற்றிய நிலையில், வரவு-செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு  மீதான விவாதம் 7 நாட்கள் இடம்பெற்று கடந்த 25ஆம் திகதி மாலை 6.10 மணியளவில் விவாதம் நிறைவடைந்து வாக்கெடுப்புக்கு விடப்பட்டபோது, ஆதரவாக
155 வாக்குகளும் எதிராக 46 வாக்குகளும் அளிக்கப்பட்ட நிலையில் 109 மேலதிக வாக்குகளினால் வரவு-செலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்டது.
 
வரவு- செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பின்போது பிரதான எதிர்க்கட்சியான சஜித் பிரேமதாச தலைமையிலான  ஐக்கிய மக்கள் சக்தி, ஜீவன் தொண்டமான் எம்.பியாகவுள்ள  ஐக்கியதேசியக்கட்சி, நாமல் ராஜபக்‌ஷ எம்.பியாகவுள்ள பொதுஜன பெரமுன,ரவி கருணாநாயக்க எம்.பியாகவுள்ள  புதிய ஜனநாயக முன்னணி,திலித் ஜயவீர தலைமையிலான  சர்வஜனசக்தி கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான  தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஆகிய கட்சிகள் எதிர்த்து வாக்களித்தன.
தேசிய மக்கள்  சக்தி  அரசாங்கத்தின் இந்த வரவு-செலவுத் திட்டத்தினை சிங்கள எதிர்க்கட்சிகள், அவற்றோடு பங்காளிகளான மலையகத் தமிழ் மற்றும்  முஸ்லிம் கட்சிகள் எதிர்த்து வாக்களித்தபோது, அரசு தரப்பினருடன் இணைந்து யாரும் எதிர்பாராத வகையில் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட எம்.பியான  செல்வம் அடைக்கலநாதன்  ஆதரவாக வாக்களித்து அதிர்ச்சியளித்தார். அதேநேரம், இலங்கை தமிழரசுக் கட்சியின்
8 எம்.பிக்களும் சுயேச்சைக் குழு 17 இந்த யாழ். மாவட்ட எம்.பியான அர்ச்சுனாவும் வாக்களிப்பில் பங்கேற்காது அவர்களும் அதிர்ச்சியளித்தனர்.
 
வரவு-செலவுத் திட்டத்தின் மீதான விவாதத்தில்  தமிழ், மலையக, முஸ்லிம் கட்சிகளின் நிலைப்பாடுகளை  அவர்கள் முன்வைத்த உரைகளின் மூலம் பார்த்தால்,  இந்த வரவு-செலவுத் திட்டத்தில் வடக்கு மாகாணத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ள தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் வடக்கு போலவே யுத்தத்தினால் அதிகம் பாதிக்கப்பட்ட, முஸ்லிம்கள் அதிகம் வாழும் கிழக்கு மாகாணத்தை முற்றாகப் புறக்கணித்து விட்டதாக முஸ்லிம் கட்சிகளின் தலைவர்களும் எம்.பிக்களும் கடுமையாக விமர்சித்ததுடன் வரவு செலவுத்திட்டத்த்தை தூக்கி எறிய
வேண்டும் எனவும் கொந்தளித்தனர்.
மலையக தமிழ் அரசியல் கட்சிகளினது தலைவர்கள் எம்.பிக்களும்  மலையக மக்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக விமர்சித்தனர். தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள  அதிகரிப்பு எதிர்பார்த்தளவுக்கு வழங்கப்படவில்லை, அந்த மக்களின் அடிப்படை வசதிகளில் அக்கறை காட்டப்படவில்லை என குற்றம் சாட்டியதுடன், அவர்கள் தமது விமர்சனத்திற்கும் குற்றச்சாட்டுக்களுக்கும்  நியாயம் கற்பிக்கும் வகையில்
வரவு-செலவுத் திட்டத்தை எதிர்த்து வாக்களித்தனர்.
 
வடக்கு, கிழக்கு மாகாணங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்த் தேசியக் கட்சிகளைப் பொறுத்தவரையில் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தைத் தலைவராகக் கொண்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் வரவு-செலவுத் திட்டத்தை எதிர்த்து விமர்சித்தது. இனவாதத்தால் வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், இந்த வரவு-செலவுத் திட்டத்தின் மூலம் சிறந்த ஆரம்பத்தை அரசாங்கம் முன்வைக்கும் என்றும் எதிர்பார்த்தோம். ஆனால், தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வாக எதனையும் இதில் பார்க்க முடியவில்லை. ஜனாதிபதி குறிப்பிட்டவாறு வடக்கு, கிழக்கில் மக்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படும் என்றே எதிர்பார்த்தோம். இந்த மாகாணங்களுக்காக விசேடமாக நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. எனவே, வடக்கு, கிழக்கு மக்களின் பிரச்சினைகளுக்குத்   தீர்வு கிடைக்கும் வரையில் அரசாங்கத்தின் வரவு-செலவுத் திட்டத்தை எதிர்த்து வாக்களிப்பதைத் தவிர, வேறு எந்த தெரிவுகளும் எமக்கு  கிடையாது என்று அதன் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்  தெரிவித்ததுடன், வரவு-செலவுத் திட்டத்தை  எதிர்த்தும் வாக்களித்தார்.
 
இலங்கை தமிழரசுக் கட்சியின் சார்பில் பேசிய பலரும் வரவு-செலவுத் திட்டத்தை கடுமையாக விமர்சிக்கவோ எதிர்ப்போமென கூறவோ இல்லை. கிழக்கு மாகாணம் புறக்கணிக்கப்பட்டுள்ளது. நிலையான அரசியல் தீர்வு ஊடாக மாத்திரமே எமது மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியும். வரவு-செலவுத் திட்டத்தில் தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைகள் பற்றிக் குறிப்பிடப்படவில்லை என்றே  கூறினார்கள். ஆனால், இறுதியில் வாக்கெடுப்பில் பங்கேற்காது தவிர்த்து  விட்டனர்.
 
சுயேச்சைக் குழு 17இன் தலைவரும் யாழ். மாவட்ட எம்.பியும்  தன்னை ஒரு விடுதலைப் புலிகளின் தீவிர பற்றாளராகக் காட்டுபவரும்   எந்தக்கொள்கையுமில்லாத  தினமும் ஒரு அரசியல் செய்பவருமான  இ.அர்ச்சுனாவும் இந்த வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. வரவு-செலவுத் திட்டத்தை ஜனாதிபதி சமர்ப்பித்த பெப்ரவரி 17ஆம் திகதி மாலை இடம்பெற்ற உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் திருத்த சட்டமூல விவாதத்தில் பங்கேற்று அந்த விடயத்துக்குப் புறம்பாக
வரவு-செலவுத் திட்டத்தை ஆதரித்துப் பேசிய அர்ச்சுனா எம்.பி. எதிர்க்கட்சிகள் பக்கத்தில் இந்த வரவு-செலவுத் திட்டத்தை ஆதரிக்கும் ஒரேயொருவர் தான் மட்டுமே என்று கூறி, வரவு-செலவுத் திட்டத்தை புகழ்ந்தார். உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்  திருத்த சட்டமூலத்தை நிறைவேற்ற  நடந்த வாக்கெடுப்பில் ஆதரவாக வாக்களித்து விட்டு  அரசின்
வரவு-செலவுத் திட்டம்  வாக்கெடுப்பு நடத்தப்பட்டு நிறைவேற்றப்பட்டதாகவும் அதில் தான் ஆதரவாக வாக்களித்ததாகவும் சமூக ஊடகங்களில் எந்தவித
அறிவுமின்றிக் கூறினார்.
 
பின்னர் அவர் வரவு-செலவுத் திட்ட விவாதத்தில் உரையாற்றுகையில்  அனுரகுமார அரசையும் வரவு-செலவுத் திட்டத்தையும் மிகக்கடுமையாக எதிர்த்து விமர்சித்தார். அரசு தமிழ் மக்களுக்குப் பிச்சை போடுவதாகவும் வசைபாடினார், இந்நிலையில், வரவு-செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான  வாக்கெடுப்பு நடத்தப்பட்டபோது  அவர் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.
இலங்கை தமிழரசுக் கட்சி எம்.பிக்களும் அர்ச்சுனா எம்.பியும்  இந்த வாக்கெடுப்பில்  பங்கேற்காமையை எதிர்ப்பு என்றோ வாக்கெடுப்பு பகிஷ்கரிப்பு என்றோ நடுநிலை என்றோ கருத முடியாது. ஏனெனில்,  ஒன்று ஆதரவாக வாக்களிக்க வேண்டும் இல்லையெனில், எதிர்த்து வாக்களிக்க வேண்டும். அல்லது சபையில் அமர்ந்திருந்தவாறு எதிர்த்தோ, ஆதரவாகவோ வாக்களிக்காது நடு நிலை என அறிவித்திருக்க வேண்டும். அல்லது வாக்கெடுப்பை  பகிஷ்கரிக்கின்றோம் என் அறிவித்து விட்டாவது சபைக்கு வராதிருந்திருக்க வேண்டும்.  ஆனால், எந்த அறிவிப்பும் இல்லாது இவர்கள் வாக்கெடுப்பில் பங்கேற்காதது சபைக்கு சமூகமளிக்காதோர் என்ற பட்டியலில் மட்டுமே சேரும்.  
தமிழ் மக்களின் பிரச்சினைகளில்,தேர்தல்களில்
தமிழ்த் தேசியக் கட்சிகளிடையில்
 ஏற்படும் குழப்பம், முரண்பாடுகள் போன்றே தேசிய மக்கள் சக்தி  அரசாங்கத்தின் 2025ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தை எதிர்ப்பதா? ஆதரிப்பதா? என்பதிலும் தமிழ்த் தேசியக் கட்சிகளிடையில் குழப்பநிலை, முரண்பாடுகள் ஏற்பட்டன.
 
எனவே, ஒரு வரவு-செலவுத் திட்டத்தில்  கூட தமிழ் மக்கள் நலன் சார்ந்து ஒரே முடிவை எடுக்க முடியாத இந்த தமிழ்த் தேசிய கட்சிகளும் தலைவர்களும்
எம்.பிக்களும் தமிழ் மக்களின் பிரச்சினைக்கான  தீர்வில் புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தில் இவர்கள் எப்படி ஒரே கொள்கையில், ஒரே முடிவில் நிற்பார்கள்? ஆகவே, நாய் வாலை  நிமிர்த்த முடியாது என்பதுபோல,  தமிழ் தேசிய கட்சிகளை ஒருபோதும் ஓரணியில் இணைக்க முடியாது என்பது மீண்டும்
ஒரு முறை நிரூபிக்கப்பட்டுள்ளது.

நன்றி tamilmirror

 

வர்த்தக‌ விளம்பரங்கள்