பிரபலங்களை பின் தொடரும் Paris Match!! - சில தகவல்கள்!!
21 ஆனி 2017 புதன் 15:30 | பார்வைகள் : 18505
உங்களுக்கு விருப்பமான சில பிரெஞ்சு பத்திரிகைகளில், Paris Match கட்டாயமாக இருக்கும். உலக நட்சத்திரங்கள் அனைவருக்கும் பின்னால் கேமராவும் கையுமாக அலைவதே வாழ்நாள் இலட்சியம் எனக்கொண்டு இயங்குகிறது இப்பத்திரிகை.
இப்பத்திரிகை ஆரம்பித்து 68 வருடங்கள் ஆகிறது. முதல் இதழ், மார்ச் 25, 1949 ஆம் ஆண்டு வெளியானது. முன்னதாக 1939 ஆம் ஆண்டு இப்பத்திரிகை தனியே Match எனும் பெயரில் வெளியாகி.. அடுத்தவருடமே (1940) இழுத்து மூடிவிட்டார்கள். சில பிரதிகள் மாத்திரமே வெளிவந்தாலும், 'அட..!' போட வைத்தது பத்திரிகை.
பின்னர், 1949 ஆம் ஆண்டு Paris Match எனும் பெயரில் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது. Daniel Filipacchi எனும் எழுத்தாளர் மற்றும் புகைப்படக்கலைஞன் இந்த பத்திரிகையை வாங்குகிறார். 1976 இல். அதன் பின்னர் இந்த வார இதழ் மேலும் பரபரப்பாக விற்பனையாகத் தொடங்கியது.
பிரபலங்கள் குறித்த கட்டுரைகள், நேர்காணல்கள்.. புகைப்படத்தொகுப்பு... எப்பத்திரிகையும் வெளியிடாத பிரபலங்களின் சில 'பர்சனல்' போட்டோக்களையும் பிரசுரிக்க... பத்திரிகை வைரலாக பரவியது.
1988 ஆம் ஆண்டில் இப்பத்திரிகை 873,000 பிரதிகளை விற்று அசுர சாதனை படைத்தது. அதன் பின்னர் எப்போதும், ஒவ்வொரு வாரமும் சாதாரணமாக ஆறு இலட்சத்தைத் தாண்டி பிரதிகள் விற்றுத்தள்ளின...
Paris Match என்றால் எப்போதும் சர்ச்சைகள் தான். பிரபலங்கள் எங்கு சென்றாலும், பின்னால் சென்றுவிடும் இப்பத்திரிகை. சினிமா, அரசியல் பிரபலங்கள், கலைஞர்கள் என பிரித்தானிய இளவரசரில் இருந்து, ஷா-ரூ-கான் வரை அனைவரையும் 'ஸ்பை' செய்கிறது பத்திரிகை.
கடந்த வார இதழை பாருங்கள்.. ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோனும் அவரது மனைவியும் வாக்களித்துவிட்டு.. 'ஜாலி'யாக சைக்கிளில் ஒரு ரவுண்டு வர... அதையும் படம் பிடித்து அச்சில் ஏற்றிவிட்டார்கள் paris Match காரர்கள்!!