தொலைபேசியூடாக விளம்பரங்கள் செய்ய முடியாது.. வருகிறது சட்டம்!!

6 பங்குனி 2025 வியாழன் 16:34 | பார்வைகள் : 728
தொலைபேசியூடாக அழைப்பெடுத்து விளம்பரங்களோ, பொருட்கள் விற்பனையோ செய்ய, வாடிக்கையாளர்களிடம் முன் அனுமதி பெற வேண்டும் எனும் சட்டம் இயற்றப்பட உள்ளது.
தொலைபேசி அழைப்புகளூடாக மேற்கொள்ளப்படும் விளம்பரங்கள் பெரும் தலைவலியாக மாறியுள்ளது. இதனைக் கட்டுப்படுத்த முன்னதாக ஒரு புதிய சட்டம் ஒன்று இயற்றப்பட்டது. காலை, நண்பகல், மாலை என உணவு இடைவேளை நேரத்திலும் இரவுகளிலும் அழைப்பு எடுப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டு சட்டம் இயற்றப்பட்டது.
இந்நிலையில், “வாடிக்கையாளர்களின் முன் அனுமதி இன்றி அழைப்பு மேற்கொள்ளக்கூடாது” என ஒரு வரைவு ஒன்று முன்மொழியப்பட்டது. அதை அடுத்து, இன்று மார்ச் 6, வியாழக்கிழமை இது தொடர்பில் கருத்துக்கணிப்பு ஒன்று பாராளுமன்றத்தில் மேற்கொள்ளப்பட்டது.
இந்த வரைவுக்கு ஆதரவாக வாக்குகள் பெறப்பட்டதை அடுத்து, சபாநாயகரால் இது சட்டமாக உருவாக்க ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதை அடுத்து, ஜனவரி 1, 2026 ஆம் ஆண்டு முதல் சட்டமாக மாறுகிறது. இந்த சட்டத்தை மீறுவோருக்கு 5 ஆண்டுகள் சிறை, €500,000 யூரோக்கள் குற்றப்பணமும் அறவிடப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.