1985 ஆம் ஆண்டில் ஒரு நாள்...!!
19 ஆனி 2017 திங்கள் 11:30 | பார்வைகள் : 19098
Doubs மாவட்டத்தின் மலையக கிராமம் Mouthe. தடுக்கி விழுந்தால்.. அருகில் சுவிட்சர்லாந்து. அழகான புல்வெளிகளும்.. ஓடைகளும்.. நதிகளும் கொண்ட கிராமம். சரித்திரத்தில் தப்பித்தவறியேனும் 1000 ஐ தொடாத மக்கள் தொகை கொண்ட கிராமம்.
சாதாரணமாகவே குளிர் அதிகப்படியாக நிலவும் கிராமம் இது. அன்று ஜனவரி 17, 1985 ஆம் ஆண்டு. வழக்கத்துக்கு மாறாக அதிக குளிர் நிலவியது. மக்கள் வீட்டை விட்டு வெளியேறாமல்.. கம்பளிக்குள் முடங்கிக்கிடந்தனர். பல மர வீடுகள் குளிருக்கு தாக்குபிடித்தாலும்... அதிகளவான குளிர் மற்றும் பனிப்பொழிவு கிராமவாசிகளை சீண்டவே செய்தது.
கூதல் காய மூட்டப்பட்ட நெருப்புக்களே தஞ்சம் என அதன் அருகிலேயே இருந்து குளிர் காய்ந்தனர். அக்கம் பக்க கிராமங்களிலும் அன்று இதுதான் பிரச்சனையாக இருந்தது. குளிர் ஒன்றும் அப்பகுதி மக்களுக்கு புதிதல்ல.. ஆனாலும் அன்று அமோகமான குளிர். அதே Doubs மாவட்டத்தின் Combsfroide கிராமம், Chapelle-des-Bois கிராமம் என அனைத்தும் உறைந்து போய் இருந்தது.
பின்னர் அன்றைய நாளில், 'இன்று பிரான்சில் வரலாறு காணாத அதிக குளிர் நிலவியது!' என அறிவிக்கப்பட்டது. இதுவரை காலமும் பிரான்சில் நிலவிய அதிகூடிய குளிரான -37 செல்சியஸ்சை தகர்த்தெறிந்து... புதிய 'ரெக்கோர்ட்' படைத்தது.
அன்று ஒரே நாளில், Chapelle-des-Bois கிராமத்தில் -39 செல்சியசும், அருகே Combsfroide கிராமத்தில் -39.5 செல்சியசும் பதிவாகி அதிர்ச்சைய ஏற்படுத்த... சிறிது நேரங்களுக்குள்ளாக Mouthe கிராமத்தில் -41 செல்சியஸ் குளிர் என பதிவாகியது.
மறுநாள் பத்திரிகைகளில், தொலைக்காட்சிகளில் இதுதான் தலைப்புச் செய்தி..! இன்றுவரை அதிக குளிர் பதிவான பிரெஞ்சு கிராமமாக Mouthe உள்ளது.