Paristamil Navigation Paristamil advert login

கல்வி நிதி தராமல் வீண்பிடிவாதம்; மத்திய அரசு மீது முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு

கல்வி நிதி தராமல் வீண்பிடிவாதம்; மத்திய அரசு மீது முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு

7 பங்குனி 2025 வெள்ளி 10:46 | பார்வைகள் : 165


மத்திய பா.ஜ., அரசு தான் மாநில உரிமைகளை மதிக்காமல், தமிழகத்துக்கு கல்வி நிதியைத் தரமாட்டோம் என வீண்பிடிவாதம் பிடிக்கிறது' என முதல்வர் ஸ்டாலின் குற்றம் சாட்டி உள்ளார்.

அவரது கடிதம்: மும்மொழிக் கொள்கையை ஏற்கமாட்டோம் என்று தமிழகம் பிடிவாதமாக இருப்பதால் மத்திய அரசு தர வேண்டிய நிதியை இழக்க வேண்டியுள்ளதே என்று சிலர் கேட்கிறார்கள். தமிழகம் பிடிவாதமாக இல்லை. தன்னுடைய மொழிக்கொள்கை என்ன என்பதில் தெளிவாக இருக்கிறது. மத்திய பா.ஜ., அரசு தான் மாநில உரிமைகளை மதிக்காமல், தமிழகத்துக்கு கல்வி நிதியைத் தரமாட்டோம் என வீண்பிடிவாதம் பிடிக்கிறது.

ஆட்சி மொழி

தி.மு.க., அரசு இந்திய அரசியல் சட்டத்தை மதித்து நடக்கிறது. மத்திய பா.ஜ., அரசு அந்த அரசியல் சட்டத்தையே சிதைக்கின்ற வேலையை செய்கிறது. இந்தியாவின் ஆட்சி மொழி அலுவல் மொழியாக ஹிந்தியுடன், இணை ஆட்சிமொழியாக ஆங்கிலமும் இருப்பதால், இந்த நிலை நீடிக்கவேண்டும் என்பதை தி.மு.க., தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. தாய்மொழியைப் பாதுகாத்துக் கொள்வதற்கு, தமிழகம் போட்டுத் தந்த பாதையையே பல மாநிலங்களும் பின்பற்றுகின்றன.

மொழித் திணிப்பு

ஹிந்தி ஆதிக்கத்திலிருந்து இந்திய மொழிகளைக் காத்து நிற்பது திராவிட இயக்கத்தின் மொழிக் கொள்கை தான். ஹிந்தி பேசும் மாநிலங்களில் எத்தனை பேர் மும்மொழிப் பாடத்திட்டத்தில் பயின்று வருகின்றனர்? அவர்கள் படிக்கின்ற மூன்றாவது மொழி எது? ஹிந்தியைத் தவிர இரண்டாவதாக ஒரு மொழியை சரிவரக்கற்றுத்தரும் கல்வி நிறுவனங்கள் எத்தனை உள்ளன? தமிழகத்தில் மூன்றாவது மொழித் திணிப்புக்கான நியாயமான காரணத்தை மத்திய பா.ஜ., அரசு சொல்லட்டும்.

மாநில சுயாட்சி

தமிழகத்தின் கல்வி வளர்ச்சியையும், திறன் மேம்பாட்டையும் மத்திய பா.ஜ., அரசின் அறிக்கைகளே பாராட்டு கின்றன. இதன்பிறகும், மூன்றாவது மொழியைத் தமிழகத்தின் மீது திணிக்க முயற்சிப்பதும், இந்த வல்லாதிக்கப் போக்கை ஏற்க மறுத்தால் நிதி தர முடியாது என மறுப்பதும் தமிழர்கள் மீது பா.ஜ., அரசு திட்டமிட்டு நடத்துகின்ற தாக்குதலாகும். உரிமைகளை நிலைநிறுத்திடும் வகையில், மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி என்ற நிலையை அடைந்திட பாடுபடுவோம்.

தொகுதி மறுசீரமைப்பு

மாநில உரிமைகளைப் பறிப்பதையே மறைமுகக் கொள்கைத் திட்டமாக கொண்டுள்ள மத்திய பா.ஜ., அரசு, தொகுதி மறுசீரமைப்பின் மூலமாக தென்னிந்திய மாநிலங்களின் லோக்சபா தொகுதிகளைக் குறைத்திடத் திட்டமிட்டுள்ள நிலையில், அதற்கு எதிரான முதல் முழக்கத்தை எழுப்பியிருக்கிறது தி.மு.க., அரசு. மாநில உரிமைக் குரலை நசுக்கிவிட போராட்டங்களை நடத்த வேண்டிய தேவை ஏற்பட்டாலும் அதையும் செய்வோம். ஹிந்தித் திணிப்பை என்றும் எதிர்ப்போம். இன்னுயிர்த் தமிழை எந்நாளும் காப்போம். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்