ஐக்கிய அரபு அமீரகத்தில் பெண் உள்பட 3 இந்தியர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றம் - மத்திய அரசு தகவல்

7 பங்குனி 2025 வெள்ளி 14:49 | பார்வைகள் : 203
ஐக்கிய அரபு அமீரகத்தில் வெவ்வேறு கொலை வழக்குகளில் கைதான பெண் உள்ளிட்ட 3 இந்தியர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த தகவலை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் உறுதி செய்துள்ளது.
அதன்படி, உத்தரபிரதேச மாநிலம் பண்டா மாவட்டத்தைச் சேர்ந்த ஷாஜாதி கான் (வயது 33) என்ற பெண், கடந்த 2021-ம் ஆண்டு வீட்டு வேலைக்காக ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகர் அபுதாபிக்கு சென்றார். பின்னர் அங்குள்ள ஒரு வீட்டில் வேலைக்கு சேர்ந்தார். கடந்த 2022-ம் ஆண்டு அந்த வீட்டின் உரிமையாளரின் மனைவிக்கு ஆண் குழந்தை பிறந்ததையடுத்து அந்த குழந்தையை பராமரிக்கும் வேலையையும் ஷாஜாதி கான் செய்து வந்தார்.
இந்த சூழலில் பிறந்த 4 மாதங்களில் அந்த குழந்தை திடீரென இறந்தது. இதையடுத்து, குழந்தையை ஷாஜாதி தான் கொலை செய்தார் என வீட்டின் உரிமையாளர் புகார் அளித்ததை தொடர்ந்து, அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கில் ஷாஜாதிக்கு மரண தண்டனை விதித்து அபுதாபி கோர்ட்டு தீர்ப்பளித்தது. இதனையடுத்து கடந்த மாதம் 14-ந் தேதி தனது தந்தை ஷபீர்கானிடம் செல்போனில் பேசிய ஷாஜாதி தனக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது குறித்து தெரிவித்தார்.
அதன்பிறகு ஷாஜாதியின் கதி என்ன என்பது தெரியாத நிலையில், தனது மகளின் நிலை குறித்து அறிய ஷபீர்கான் டெல்லி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணையின்போது பிப்ரவரி 15-ந் தேதி ஷாஜாதிக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக மத்திய அரசு கோர்ட்டில் தெரிவித்தது. மேலும் அபுதாபியில் நடைபெறும் ஷாஜாதியின் இறுதி சடங்கில் அவரது பெற்றோரை பங்கேற்க வைப்பதற்கான முயற்சிகளை எடுத்து வருவதாகவும் மத்திய அரசு தெரிவித்தது.
அதன்படி ஷாஜாதியின் உடல் அவரது பெற்றோரின் முன்னிலையில் அபுதாபியில் நேற்று அடக்கம் செய்யப்பட்டது. முன்னதாக அங்குள்ள மசூதியில் நடைபெற்ற ஷாஜாதியின் இறுதி சடங்கில் அவரது குடும்பத்தினர் கலந்து கொண்டு, அவரது உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினர்.
அவரை தொடர்ந்து மற்றொரு வழக்கில் அல் அய்னில் தனியார் நிறுவனத்தில் கேரளாவை சேர்ந்த முகமது ரினாஷ் அரங்கிலோட்டு என்பவர் பணியாற்றி வந்தார். கண்ணூர் மாவட்டத்தை சேர்ந்த ரினாஷ் அமீரகத்தை சேர்ந்தவரை கொலை செய்ததாக அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
மனநலம் பாதிக்கப்பட்ட நபரிடம் இருந்து தப்பிக்க முயற்சித்தபோது தற்செயலாக கொலை நிகழ்ந்ததாகவும், அரசு தலையிட்டு அவரை காப்பாற்ற வேண்டும் என அவரது தாயார் கேரள முதல் மந்திரி பினராயி விஜயனிடம் மனு அளித்திருந்தார்.
அதேபோல் மற்றொரு வழக்கில் கேரளாவை சேர்ந்த முரளீதரன் பெரும்தட்டா வலப்பில் என்ற நபர் இந்தியர் ஒருவரை கொலை செய்ததாக கடந்த 2009-ம் ஆண்டு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
இதில் இருவருக்கும் தனித்தனி கொலை வழக்குகளில் மரண தண்டனை விதிக்கப்பட்டு கடந்த பிப்ரவரி 28-ந் தேதி நிறைவேற்றப்பட்டதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.
இதில் ரினாஷ் என்பவரின் இறுதிச் சடங்கு அபுதாபியில் நேற்று நடந்தது. இறுதிச்சடங்கில் ரினாஷின் குடும்பத்தினர் கலந்து கொண்டனர். இறுதி சடங்கை தொடர்ந்து ரினாஷின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
மேலும் மற்றொரு கொலை வழக்கில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட முரளீதரன் உடல் அடக்கம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது.
மரண தண்டனையை குறைக்கக்கோரி பல்வேறு கருணை மனுக்கள் அளிக்கப்பட்டும் அந்த கோரிக்கைகள் ஏற்கப்படவில்லை என மத்திய அரசு தரப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. பல்வேறு நாடுகளில் 54 இந்தியர்கள் மரண தண்டனை பெற்று சிறையில் உள்ளனர். இதில் 29 பேர் அமீரகத்தில் தண்டனை பெற்றவர்கள் என பாராளுமன்றத்தில் மத்திய வெளியுறவு இணை மந்திரி கீர்த்தி வர்தன் சிங் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.