ரஷ்ய சொத்துக்களில் இருந்து உக்ரேனுக்கு €30.6 பில்லியன்... உச்சிமாநாட்டில் தீர்மானம்!!

7 பங்குனி 2025 வெள்ளி 10:00 | பார்வைகள் : 1663
நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற உச்சிமாநாட்டின் முடிவில் ஐரோப்பிய ஒன்றியம் (EU) தரப்பில் €30.6 பில்லியன் யூரோக்கள் உக்ரேனுக்கு வழங்கும் என ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் அறிவித்துள்ளார்.இந்த பணம் ஐரோப்பாவில் உள்ள ரஷ்ய அசையாத சொத்துக்களில் இருந்து எடுத்து வழங்கப்பட உள்ளதாக மக்ரோன் தெரிவித்தார்.
ரஷ்ய-உக்ரேன் யுத்தம் ஆரம்பித்ததன் பின்னர் ஐரோப்பாவின் பல நாடுகளில் உள்ள ரஷ்யாவின் சொத்துக்கள் முடக்கப்பட்டிருந்தமை அறிந்ததே. அவற்றின் பெறுமதை ரஷ்ய யுத்தத்துக்கு எதிராக பயன்படுத்தும் திட்டங்களை ஐரோப்பா மேற்கொண்டுவருகிறது. அதன் ஒரு பகுதியாகவே உக்ரேனுக்கு மிக அவசியமான ஆயுதங்களை வழங்க இந்த €30.6 பில்லியன் யூரோக்கள் இந்த 2025 ஆம் ஆண்டில் வழங்கப்படும் என மக்ரோன் அறிவித்தார்.
அதேவேளை, ஐரோப்பா கண்டத்தின் எல்லைகளை பாதுகாக்க 800 பில்லியன் யூரோக்களை செலவிட தயாராக இருப்பதாக ஐரோப்பிய ஆணையம் (Commission européenne) திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.