வைத்திய துறைக்காக வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா விடுத்த கோரிக்கை

7 பங்குனி 2025 வெள்ளி 05:27 | பார்வைகள் : 573
வைத்திய துறையில் இடைநிலை ஆளணியொன்று ஸ்தாபிக்கப்பட வேண்டுமெனக் கோரி யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா ஒத்திவைப்புவேளை பிரேரணையொன்றை முன்வைத்துள்ளார்.
கடந்த 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி அல்லது அரசியல் ஸ்திரமற்ற நிலை காரணமாகப் பெருமளவான வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறினர்.
வைத்தியர்கள் மாத்திரமல்ல தாதியர்களும் நாட்டிலிருந்து வெளியேறினர்.
எமது நாட்டை பொருத்தமட்டில் வைத்தியர் ஒருவர் உருவாவதற்கு 7 மில்லியன் முதல் 128 மில்லியன் ரூபாய் வரை செலவாகுமென மதிப்பிடப்பட்டுள்ளது.
கல்விப் பொதுத்தராதர உயர்தரம் முதல் எம்.பி.பி.எஸ். வைத்தியராகுவதற்குக் குறைந்தபட்சம் 15 வருடங்கள் ஆகின்றன. அவ்வாறானதொரு நிலையில், 15 மில்லியன் ரூபாய் வரை செலவிடப்படுகிறது.
கடந்த வருடத்தில் மாத்திரம் 2 ஆயிரத்து 400 வைத்தியர்கள் நாட்டிலிருந்து வெளியேறியுள்ள நிலையில், 35 பில்லியன் ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளது.
இந்த வருடம் 50 ஆயிரம் வைத்தியர்கள் நாட்டைவிட்டு வெளியேறவுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டிருந்தார்.
அவ்வாறு வெளியேறுவார்களானால் பெறுமளவு நிதி விரயமாக்கப்படும்.
நாட்டை பொறுத்தவரையில் வைத்திய துறையில் முதுகலைமானி பயிற்சியாளர்களிடமிருந்தே அதிகளவு சேவை பெறப்படுகிறது.
ஆனால், அவர்கள் தொடர்பில் ஒருபோதும் உரிய முறையில் அவதானம் செலுத்தப்படுவதில்லை.
ஆகவே, இடைநிலை ஆளணியொன்று ஸ்தாபிக்கப்பட வேண்டுமென எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில், குறித்த பிரேரணையை வழிமொழிந்த நாடாளுமன்ற உறுப்பினர் பி.சத்தியலிங்கம், வெளிநாடு செல்லும் வைத்தியர்களைத் தடுத்து நிறுத்தும் வகையிலான முறைமையொன்றைக் கொண்டுவரப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை, முல்லைத்தீவு மாவட்டத்தின் சுகாதார தேவைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கோரிக்கை விடுத்துள்ளார்.