Paristamil Navigation Paristamil advert login

பயங்கரவாதத்தை உறுதியுடன் எதிர்கொள்வோம்: ஜெய்சங்கர்

 பயங்கரவாதத்தை உறுதியுடன் எதிர்கொள்வோம்: ஜெய்சங்கர்

8 பங்குனி 2025 சனி 13:17 | பார்வைகள் : 451


பயங்கரவாதத்தை உறுதியுடன் எதிர்கொள்வோம், என, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் திட்டவட்டமாக தெரிவித்தார்.

ஐரோப்பிய நாடுகளான பிரிட்டன், அயர்லாந்தில், நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

ராஜதந்திரம்

பிரிட்டனைத் தொடர்ந்து, அயர்லாந்து சென்ற ஜெய்சங்கர், அந்நாட்டு அதிபர் மைக்கேல் ஹிக்கின்சை சந்தித்தார். இதையடுத்து, டப்ளினில் உள்ள, 'யுனிவர்சிடி காலேஜ் டப்ளின்' என்ற உயர் கல்வி நிறுவனத்தில், இந்திய துாதரகம் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:

பயங்கரவாதம் என்பது இன்றளவும் மிகவும் ஆதிக்கம் செலுத்தும் பிரச்னையாக இருப்பது குறித்து இந்தியா கவலை அடைகிறது. நீண்டகாலமாக பயங்கரவாதத்தை எதிர்கொள்ளும் ஒரு நாட்டின் வெளியுறவு அமைச்சராக, இதை நான் பேசுவது பொருத்தமாக இருக்கும்.

பயங்கரவாதம் என்ற சவாலை உறுதியுடன் நாம் எதிர்கொள்வோம். எந்தவித மோதல்களையும் பேச்சு, ராஜதந்திர ரீதியாக தீர்க்கலாம்.

அயர்லாந்துக்கும் இந்தியாவுக்கும் வரலாற்று தொடர்பு உண்டு. இந்திய முன்னாள் ஜனாதிபதி வி.வி.கிரி, இங்குதான் சட்டம் பயின்றார். இன்றும் 13,000 இந்திய மாணவர்கள் அயர்லாந்தில் படிக்கின்றனர்.

இவ்வாறு அவர் பேசினார்.

கண்டனம்

லண்டனில், நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரை தாக்க முயன்ற காலிஸ்தான் பயங்கரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்கும்படி, பிரிட்டனுக்கு இந்தியா வலியுறுத்தி உள்ளது. வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஸ்வால் நேற்று கூறுகையில், “இரு நாட்டு உறவை சீர்குலைக்கும் நோக்கம் கொண்ட பயங்கரவாதிகளுக்கு உரிமம் வழங்கப்பட்டது போல், இந்த தாக்குதல் சம்பவம் இருக்கிறது.

இதற்கு மிகப்பெரிய பின்னணி இருக்கிறது. இந்த சம்பவத்திலும் முந்தைய நிகழ்வுகளிலும் பயங்கரவாதிகள் மீது பிரிட்டன் எடுக்கும் நடவடிக்கைகளை பொறுத்தே அந்நாட்டு அரசு வெளியிட்ட அறிக்கையின் நேர்மைத்தன்மை குறித்த நம்பார்வை அமையும்” என்றார்.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்