எனக்கே அட்வைசா? : ஸ்டாலின் கேள்வி

8 பங்குனி 2025 சனி 14:19 | பார்வைகள் : 331
கல்வித்துறையில் பிஎச்.டி., நிலையில் இருக்கும் தமிழகத்திற்கே ஆலோசனை சொல்வதா?' என, மத்திய அரசுக்கு, முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
மும்மொழி கொள்கையை உள்ளடக்கிய பி.எம்.ஸ்ரீ., திட்டத்தை செயல்படுத்தினால் தான், அதற்கான நிதியை தமிழகத்திற்கு வழங்க முடியும் என, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியது பெரும் சர்ச்சையானது.
மும்மொழி கொள்கை என்ற பெயரில் ஹிந்தியை திணிக்க, மத்திய அரசு முயற்சிப்பதாகவும், மீண்டும் ஒரு மொழி போருக்கு தமிழகம் தயாராக இருப்பதாகவும், கடந்த 10 நாட்களாக தொடர்ந்து, தி.மு.க., தொண்டர்களுக்கு, அக்கட்சியின் தலைவரும், முதல்வருமான ஸ்டாலின் கடிதம் எழுதி வருகிறார்.
இந்நிலையில் நேற்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: மரம் அமைதியாக இருக்க விரும்பலாம். ஆனால், காற்று ஒரு போதும் ஓயாது. அமைதியாக கடமையை செய்து கொண்டிருந்த எங்களை, இப்படி தொடர் கடிதங்கள் எழுத துாண்டியது, மத்திய கல்வி அமைச்சர் தான். அவர் தன் அதிகார வரம்பை மறந்து, தமிழகத்தில் ஹிந்தியை கட்டாயப்படுத்த துணிந்தார்.
அவரால் ஒருபோதும் வெல்ல முடியாத மொழி போராட்டத்தை, மீண்டும் உயிர்ப்பித்ததற்கான விளைவுகளை எதிர்கொள்கிறார்.
மத்திய அரசின் மிரட்டலுக்கு ஒரு போதும் தமிழகம் அடிபணியாது. புதிய தேசிய கல்வி கொள்கையை நிராகரிக்கும் தமிழகம், அது, 2030க்குள் அடைய வேண்டும் என முன்வைக்கும் பல இலக்குகளை ஏற்கனவே அடைந்து விட்டது. இது, எல்.கே.ஜி., மாணவர், பிஎச்.டி., பட்டதாரிக்கு பாடம் நடத்துவது போல உள்ளது.
டில்லியிலிருந்து வரும் கட்டளைகளை நிறைவேற்றும் மாநிலம் அல்ல தமிழகம். பல்வேறு விஷயங்களில், ஒட்டு மொத்த நாட்டுக்கும் தமிழகம் வழிகாட்டுகிறது. மும்மொழி கொள்கையை ஆதரித்து, பா.ஜ., நடத்தும் கையெழுத்து இயக்கம், இப்போது ஒரு நகைச்சுவை நிகழ்வாக மாறி விட்டது.
இந்த விவகாரத்தை முன்வைத்து, வரும், 2026 சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள பா.ஜ., தயாரா? சட்டசபை தேர்தலை, ஹிந்தி திணிப்பு குறித்து பொது ஓட்டெடுப்பாக மாற்ற தயாரா என, அவர்களுக்கு சவால் விடுக்கிறேன். தமிழகத்தின் மீது ஹிந்தியை திணிக்க முயன்றவர்கள் தோற்கடிக்கப்பட்டனர் என்பதும், அவர்கள் பின் தங்களின் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு, தி.மு.க.,வுடன் இணைந்தனர் என்பதும் தான், தமிழகத்தின் தெளிவான வரலாறு.
பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்திற்கு மாற்றாக, ஹிந்தி காலனி ஆதிக்கத்தை தமிழகம் பொறுத்துக் கொள்ளாது. மத்திய அரசின் திட்டங்கள், நிறுவனங்கள், விருதுகளுக்கு, ஹிந்தி பேசாதவர்கள் மூச்சு திணறும் அளவுக்கு ஹிந்தியில் பெயர் வைக்கப்படுகிறது. இது, ஹிந்தி பேசாதவர்களுக்கு குமட்டலை ஏற்படுத்துகிறது.
யார் வேண்டுமானாலும் ஆட்சிக்கு வரலாம்; போகலாம், ஹிந்தி ஆதிக்கம் தகர்க்கப்பட்ட பின்னும் பாதுகாப்பு அரணாக நின்றது தி.மு.க.,தான் என்பதை, வரலாறு என்றும் நினைவில் வைத்திருக்கும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
தமிழ்ல எங்கே? : அமித் ஷாவும் கேள்வி
சென்னை : ''சி.ஏ.பி.எப்., என்ற துணை ராணுவ பணிகளுக்கான ஆள்சேர்ப்பு தேர்வுகள், பிராந்திய மொழிகளில் இல்லாமல் இருந்தன. பிரதமர் மோடியின் ஆட்சியில், ஹிந்தி, ஆங்கிலம் மொழியை தாண்டி, தற்போது தமிழ் மற்றும் பிற மொழிகளிலும் எழுதும் சூழல்
உருவாகி உள்ளது.
மற்ற மாநிலங்களின் முதல்வர்களை போல, முதல்வர் ஸ்டாலினும், மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளை தமிழ் மொழியில் துவக்க வேண்டும், என, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசினார்.
மத்திய தொழில் பாதுகாப்பு படையின், 56வது நிறுவன தினத்தை முன்னிட்டு, அரக்கோணம் தக்கோலம் சி.ஐ.எஸ்.எப்., பயிற்சி மையத்தில் நடந்த அணிவகுப்பு நிகழ்ச்சியில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று, சி.ஐ.எஸ்.எப்.,பின், 'சென்டினல்' என்ற இதழை வெளியிட்டார்.
மேலும், 10 பேருக்கு ஜனாதிபதியின் காவலர் பதக்கம், இரண்டு பேருக்கு ஜீவன் ரக் ஷா பதக்கம், 10 பேருக்கு வீரதீர செயல்களுக்கான பதக்கங்கள் வழங்கி கவுரவித்தார். சி.ஐ.எஸ்.எப்., - ஆர்.டி.சி., என்று அழைக்கப்பட்ட தக்கோலம் ஆள்சேர்ப்பு பயிற்சி மையத்தை, ராஜாதித்ய சோழன் ஆர்.டி.சி., தக்கோலம் என, பெயர் மாற்றம் செய்து வைத்தார்.
சி.ஐ.எஸ்.எப்., வீரர்களின், 'சைக்கிளத்தான்' பேரணியை, காணொளி காட்சி வாயிலாக துவக்கி வைத்து, 88 கோடி ரூபாய் மதிப்பிலான உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
பின், அமித்ஷா பேசியதாவது:மத்திய தொழில் பாதுகாப்பு படை, கடந்த, 56 ஆண்டுகளில், நாட்டின் வளர்ச்சி, முன்னேற்றம் மற்றும் பயணம் போன்றவற்றை உறுதி செய்தது மட்டுமின்றி, சுமூகமாக செயல்படுவதிலும் முக்கிய பங்காற்றியுள்ளது. துறைமுகங்கள், விமான நிலையங்கள், முக்கிய வர்த்தகம், சுற்றுலா மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் உள்ளிட்ட, நாட்டின் தொழில் துறை வளர்ச்சியுடன் தொடர்புடைய முக்கிய நிறுவனங்களின் பாதுகாப்பை, சி.ஐ.எஸ்.எப்., இல்லாமல் கற்பனை செய்து பார்க்க முடியாது.
இவர்களின் விசுவாசம், கடின உழைப்பு, அர்ப்பணிப்பு ஆகியவற்றால், நம் நாட்டில் தொழில் துறை பாதுகாப்பாக முன்னேறி வருகிறது. 2047ம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்த பாரதமாக, நம் நாட்டை மாற்ற வேண்டும் என, பிரதமர் மோடி இலக்கு நிர்ணயித்து உள்ளார்.
அதை நிறைவேற்றுவதில், சி.ஐ.எஸ்.எப்., பங்களிப்பு மிகவும் முக்கியமானதாக இருக்கும்.
டில்லியில், சி.ஐ.எஸ்.எப்., தினத்தை கொண்டாடுவது போல், மற்ற இடங்களிலும் கொண்டாட வேண்டும் என, 2019ல் முடிவெடுக்கப்பட்டது. அதன்படி தக்கோலத்தில், சி.ஐ.எஸ்.எப்., மண்டல பயிற்சி மையத்தில் நடந்தது.
இந்தியாவின் கலாசாரத்தை வலுப்படுத்துவதில், தமிழகத்தின் கலாசாரம் பல வழிகளில் குறிப்பிடத்தக்க பங்கு வகித்துள்ளது நிர்வாகச் சீர்திருத்தங்கள், ஆன்மிக சிகரங்களை எட்டுவது, கல்வி தரத்தை நிர்ணயிப்பது போன்றவற்றிலும், நாட்டின் பண்பாட்டை தமிழகம் பெரிதும் வலுப்படுத்தியுள்ளது.
தமிழ் மொழி, கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் ஆகியவை, இந்திய கலாசாரத்தின் விலை மதிப்பற்ற ஆபரணங்களாக விளங்குகின்றன. இதனால், தக்கோலத்தில் உள்ள சி.ஐ.எஸ்.எப்., பிராந்திய பயிற்சி மையத்திற்கு சோழ வம்சத்தின் சிறந்த மன்னனான ராஜாதித்ய சோழன் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இது, பெருமைக்குரிய விஷயம். இந்த மண்ணில் நடந்த போரில் ராஜாதித்ய சோழன், அசாத்தியமான வீரத்தை வெளிக்காட்டி உன்னத தியாகம் செய்து, சோழ சாம்ராஜ்யத்தின் புகழ்பெற்ற மரபுகளை முன்னேற்றினார்.
சி.ஐ.எஸ்.எப்., படையில், கடந்தாண்டு 14 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியிடங்கள் நிரப்பப்பட்டு உள்ளன. 50 ஆயிரம் பேரை பணியமர்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
சி.ஏ.பி.எப்., என்ற துணை ராணுவ பணிகளுக்கான ஆட்சேர்ப்பு தேர்வுகள், பிராந்திய மொழிகளில் இல்லாமல் இருந்தது. பிரதமர் மோடியின் ஆட்சியில் ஹிந்தி, ஆங்கிலம் மொழிகளை தாண்டி, தற்போது தமிழ் மற்றும் பிற மொழிகளிலும் எழுதும் சூழல் உருவாகி உள்ளது.
மற்ற மாநிலங்களின் முதல்வர்களை போல், முதல்வர் ஸ்டாலினும் மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளை, தமிழ் மொழியில் துவங்க வேண்டும். இதன் வாயிலாக, தமிழ் தாய்மொழியாக்குவதை வலுப்படுத்துவதோடு, தமிழ்வழி பாடம் படிக்கும் மாணவர்களுக்கும் பயன் உள்ளதாகவும், சம வாய்ப்பு அளிப்பதாகவும் இருக்கும்.
மத்திய தொழில் பாதுகாப்பு படைக்கு அதிநவீன தொழில்நுட்பத்தை, மத்திய அரசு வழங்கியுள்ளது, வளர்ந்து வரும் தொழில்நுட்ப முன்னேற்றங்களை, இந்தப் படையினருக்கு தொடர்ந்து வழங்கி வருகிறோம். உத்தர பிரதேசத்தில் உள்ள ஜெவர் விமான நிலையம், மகாராஷ்டிராவில் உள்ள நவி மும்பை விமான நிலையம் ஆகியவை, சி.ஐ.எஸ்.எப்., பாதுகாப்பின் கீழ் விரைவில் சேர்க்கப்படும். அவற்றில் ஒன்று முற்றிலும் பெண்களைக் கொண்ட படைப் பிரிவாக இருக்கும். இவ்வாறு அவர் பேசினார்.