Paristamil Navigation Paristamil advert login

த.வெ.க.,வினர் கைது: தி.மு.க., அரசுக்கு விஜய் கண்டிப்பு

த.வெ.க.,வினர் கைது: தி.மு.க., அரசுக்கு விஜய் கண்டிப்பு

9 பங்குனி 2025 ஞாயிறு 06:06 | பார்வைகள் : 181


பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் மற்றும் வன்முறையை கண்டித்து போராட்டம் நடத்திய த.வெ.க., கட்சியினரை கைது செய்ததை வன்மையாக கண்டிப்பதாக அக்கட்சித் தலைவர் விஜய் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: தமிழகத்தில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லாமலும் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகியும் வரும் நிலையில், அவர்களுக்கு முழுமையான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது அவசியமாகிறது. பெண்களுக்கு முழுமையான பாதுகாப்பை ஏற்படுத்தித் தர வேண்டும் எனத் தமிழக அரசை வலியுறுத்தி, உலக மகளிர் தினமான இன்று தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் தமிழகம் முழுவதும் மகளிர் அணியினர் மற்றும் தோழர்கள் அறவழியில் அடையாளப் போராட்டத்தை நடத்தினர்.

தங்களுக்கான உரிமை கிடைக்காத பட்சத்தில் அதை வலியுறுத்திக் கேட்டுப் பெற வேண்டிய நிலையில் தமிழகப் பெண்கள் இருப்பதால்தான் தமிழக வெற்றிக் கழகம் சார்பாக இந்த அறவழி அடையாளப் போராட்டமானது நடைபெற்றது. ஆனால் தமிழக மக்கள் தங்களின் தேவைகளுக்காகக் கூட போராட்டத்தை நடத்தக் கூடாது என்ற அராஜகப் போக்குடன் தமிழக அரசு, கழக மகளிர் மற்றும் தோழர்களைக் கைது செய்திருக்கிறது. இதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

தமிழகம் முழுவதும் கைது செய்யப்பட்டுள்ள தமிழக வெற்றிக் கழகத் தோழர்களையும் மகளிரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் எனத் தமிழக அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் விஜய் கூறியுள்ளார்.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்