தொகுதி மறுவரையறையால் வட மாநிலங்களுக்கே பலன்: சிதம்பரம்

10 பங்குனி 2025 திங்கள் 06:06 | பார்வைகள் : 248
மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை நடந்தால், வட மாநிலங்கள் தான் பலன் பெறும். அங்கு தொகுதிகளின் எண்ணிக்கை உயரும்,'' என முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் கூறியுள்ளார்.
இது தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் கூறியதாவது: நாட்டில் எந்த மாநிலத்திலும் மும்மொழிக் கொள்கை கிடையாது. முக்கியமாக ஹிந்தி பேசும் மாநிலங்களில் ஒரு மொழிக்கொள்கை தான் அமலில் உள்ளது.
அலுவல் மொழி, கற்பிக்கும் மொழி அனைத்தும் ஹிந்தியில் தான் உள்ளது. இதற்கு அடுத்து வேறு மொழி பயன்படுத்தப்படுகிறது என்றால், ஹிந்திக்கு நெருக்கமான சமஸ்கிருதம் தான் கற்பிக்கப்படுகிறது. வெகு சில பள்ளிகளில் மட்டும் தான், ஆங்கிலம் பேசத் தெரிந்த ஆசிரியர்கள் உள்ளனர்.
தமிழகத்தில் மத்திய அரசு நடத்தும் 52 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் உள்ளன. இங்கு ஆங்கில வழியில் தான் பாடம் கற்பிக்கப்படுகிறது. அடுத்து ஹிந்தி அல்லது சமஸ்கிருதம் தான் கற்றுக் கொடுக்கப்படுகிறது. இந்த பள்ளிகளில், மும்மொழிக் கொள்கை கிடையாது. 100 ஆண்டுகளுக்கு முன்பு, மஹாத்மா காந்தி துவக்கிய 'தக்ஷின் பாரத் ஹிந்தி பிரசார சபை' உள்ளது. இங்கு லட்சக்கணக்கான மாணவர்கள் தாங்களாக விரும்பி ஹிந்தி கற்கின்றனர். இரு மொழிக் கொள்கை சிறந்தது தான். அதில் வெற்றியும் பெற்றுள்ளோம்.
2026 க்கு பிறகு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டால், அதனைத் தொடர்ந்து தொகுதி மறுவரையறையும், அதனைத் தொடர்ந்து தொகுதிகளின் எண்ணிக்கையிலும் மாற்றம் நடக்கும். தற்போது, மாநிலங்களின் மக்கள் தொகை அடிப்படையில் மறுவரையறை நடந்தால், தென் மாநிலங்களில் உள்ள தொகுதிகளின் எண்ணிக்கை 103 ஆக குறையும். தற்போது 129 உள்ளது. 26 தொகுதிகளை இழக்க வேண்டி இருக்கும். ஆனால் உ.பி., பீஹார், ம.பி., மற்றும் ராஜஸ்தான் போன்ற மக்கள் தொகை அதிகம் உள்ள மாநிலங்களுக்கு பலன் கிடைக்கும். அங்கு தொகுதிகளின் எண்ணிக்கை உயரும்.
தென் மாநிலங்களில் மக்கள் தொகை பெருக்கம் கட்டுப்படுத்தப்பட்டு உளளது. ஆனால், வட மாநிலங்களில் இதற்கு இன்னும் 10 -15 ஆண்டுகள் ஆகும். 129 எம்.பி.,க்கள் கொண்ட தென் மாநிலங்களின் குரல் பார்லிமென்டில் எதிரொலிக்கவில்லை. எம்.பி.,க்கள் எண்ணிக்கை 103 ஆக குறைந்தால் நிலைமை மோசமாகும். இவ்வாறு சிதம்பரம் கூறினார்.