அ.தி.மு.க.,வைப் பற்றி நான் பேசவில்லை: அண்ணாமலை பதில்

10 பங்குனி 2025 திங்கள் 10:11 | பார்வைகள் : 127
நேற்று கூட்டணி தொடர்பாக நான் பேசியதில் அ.தி.மு.க.,வைப் பற்றி குறிப்பிடவில்லை,'' என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறினார்.
கோவையில் நேற்று நிருபர்களைச் சந்தித்த அண்ணாமலை,' தமிழகத்தில் பா.ஜ., உடன் கூட்டணி வைக்க தவம் கிடக்கிறார்கள்,' எனக்கூறியிருந்தார்.
இது தொடர்பாக அ.தி.மு.க., பொதுச்செயலர் இ.பி.எஸ்., நிருபர்களிடம் கூறுகையில், '' எங்கே அ.தி.மு.க.,வைப் பற்றி அண்ணாமலை குறிப்பிட்டார். தவறாக பேசாதீர்கள். எங்க அப்படி யார் சொன்னது எனக்கூறியிருந்தார்.
இந்நிலையில், இது தொடர்பாக கோவை விமான நிலையத்தில் நிருபர்களிடம் அண்ணாமலை கூறியதாவது: டிவியில் இரவு 7 - 9 வரை நடக்கும் விவாதங்களுக்கு ( டிபேட்) அரசியல் விமர்சகர், எந்த அரசியல் கட்சியையும் சேராதவர் என இரண்டு பேரை கொண்டு வந்து அமர வைத்து நான் சொன்னதையும், அ.தி.மு.க., பொதுச் செயலர் இ.பி.எஸ்., சொன்னதையும் திரித்து பேசுகிறீர்கள். நேற்று நான் பேசியதில் அ.தி.மு.க.,வை குறிப்பிடவில்லை. பா.ஜ.,வின் நிலையைப் பற்றி மட்டுமே குறிப்பிட்டேன். அ.தி.மு.க., பற்றி இ.பி.எஸ்., பேசுகிறார். இது நியாயம் தானே.
டிவியில் நடக்கும் விவாதங்களை நான் பார்ப்பது கிடையாது. அதில், விவாதத்தில் அமர்பவர்களுக்கு களத்தில் நடப்பது என்ன தெரியும். அரசியல் விமர்சகர் என்ற போர்வையில் சென்று பா.ஜ.,வை திட்டுவதையே வேலையாக வைத்து உள்ளனர். பத்திரிகையாளர்கள் என பலர் பேசுகின்றனர். அவர்கள் யார்?
அரசியல் விமர்சகர்கள் நடுநிலையாக பேசுகிறார்களா? அவர்களுக்கு தி.மு.க., கூட்டணி வெற்றி பெற வேண்டும். அதற்கு எந்த மாதிரி கூட்டணி அமைய வேண்டும் என்பதை அரசியல் விமர்சகர்கள் முடிவு செய்கிறார்கள். அதற்கு நானும், இ.பி.எஸ்.,சும் எப்படி தொடர்ந்து பேச முடியும்.
பத்திரிகையாளர்களுக்கு களத்தில் நடப்பது தெரியும். விவாதத்தில் அமர்பவர்களுக்கு என்ன தெரியும்? ஏசி அறையில் அமர்ந்து கட்டுரை எழுதுவதை விட வேறு என்ன தெரியும்? இவ்வாறு அண்ணாமலை கூறினார்.