மொழி பிரச்னையில் ஸ்டாலின் பிரிவினைவாதம்: சட்ட நடவடிக்கை எடுக்க சுவாமி வலியுறுத்தல்

10 பங்குனி 2025 திங்கள் 12:23 | பார்வைகள் : 134
மும்மொழி கொள்கைக்கு எதிராகவும், இருமொழி கொள்கையை வலியுறுத்தியும் தொண்டர்களுக்கு தினமும் கடிதம் எழுதி வருகிறார் முதல்வர் ஸ்டாலின். அதில், 'சோவியத் யூனியன் என்ற மாபெரும் ஒன்றியம் பல்வேறு மொழிகளைப் பேசும் தேசிய இனங்களைக் கொண்டிருந்தது. பெரும்பான்மை மொழியான ரஷ்ய மொழி ஆதிக்கம் செலுத்தியதாலேயே, சோவியத் யூனியன் சிதைவடைந்து, 15க்கும் மேற்பட்ட நாடுகளாக பிரிந்தது' என்று, குறிப்பிட்டிருக்கிறார்.
இதைச் சொல்வதன் வாயிலாக, இந்தியாவிலும் அப்படியொரு நிலை ஏற்படும் என்பதைத்தான் மறைமுகமாக ஸ்டாலின் சொல்ல வருகிறார். அவருடைய எழுத்தும், பேச்சும் இந்திய இறையாண்மைக்கு எதிராக இருப்பதால், அவர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ள முடியும்,” என, ஸ்டாலினுக்கு எதிராக கொந்தளிக்கிறார் பா.ஜ., மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி.
அவர் நம் நாளிதழுக்கு அளித்த பேட்டி: 2021ல், செய்ய முடியாத ஏகப்பட்ட வாக்குறுதிகளை அளித்து, மக்களை முட்டாளாக்கி ஓட்டுகளைப் பெற்று ஆட்சிக்கு வந்துவிட்டது தி.மு.க., ஆனால், சொன்னபடி அவர்களால் எதையும் செய்ய முடியவில்லை. நான்கு ஆண்டுகால ஆட்சியில், குறிப்பிட்டு சொல்லக்கூடிய எந்த சாதனையையும், அவர்கள் செய்யவில்லை.
தமிழகம் முழுதும் சட்டம் - ஒழுங்கு சந்தி சிரிக்கிறது; கொலை, கொள்ளை, வன்புணர்வு நிகழ்வுகள் தினந்தோறும் கணக்கில்லாமல் நடக்கின்றன. போதைப் பொருள் நடமாட்டம் தங்கு தடையின்றி நடக்கிறது. பள்ளிகள், கல்லுாரி வாசலிலும் போதைப் பொருள் வியாபாரம் இருப்பதால், எதிர்காலத்தை கட்டி அமைக்க வேண்டிய மாணவ சமூகம் சீரழிந்துள்ளது.
எதிர்கால தமிழகம் மிகப்பெரிய சீரழிவுக்குள்ளாகும். இது தொடர்பான விமர்சனங்கள், கொந்தளிப்புகள், அரசுக்கு எதிரான மனநிலையை மக்கள் மத்தியில் உருவாக்கி உள்ளன. இன்னும் ஓராண்டில் சட்டசபைத் தேர்தலை தமிழகம் சந்திக்கவிருக்கும் சூழலில், இதெல்லாம் தி.மு.க.,வுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என அக்கட்சியினரும், முதல்வர் ஸ்டாலினும் அச்சப்படுகின்றனர்.
ஆட்சி குறித்த விமர்சனங்களும் மக்கள் மத்தியில் சென்றடையாமல் பார்த்து கொள்ள, மடைமாற்றும் திட்டம் தான் மும்மொழி கொள்கைக்கு எதிரான தி.மு.க., முழக்கம். அதற்காக, இருமொழி கொள்கையை உயர்த்திப் பிடித்தும், மும்மொழி கொள்கையை தாழ்த்தியும் தொடர் பிரசாரங்களை மேற்கொண்டிருக்கும் ஸ்டாலின், தொண்டர்களுக்கு தினந்தோறும் கடிதம் எழுதுகிறார். அப்படி எழுதிய ஒரு கடிதத்தில் தான், இந்தியா சிதறும் என்பது போல, சோவித் யூனியனை குறிப்பிட்டு மிரட்டி இருக்கிறார். இதை எளிதாக எடுத்துக் கொண்டு, கடந்து போய் விட முடியாது. முழுக்க முழுக்க இந்திய இறையாண்மைக்கு எதிரான கருத்து இது.
இந்த விஷயத்தில், சட்டப்பூர்வ நடவடிக்கையை மத்திய அரசு எடுக்காமல் இருந்து, ஒவ்வொரு முதல்வரும் இப்படி பேசத் துவங்கினால், அது இந்தியாவின் ஸ்திரத்தன்மைக்கே ஆபத்தாக முடியும். இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் கீழ், இந்திய ஒற்றுமைக்கு எந்த இடத்திலும் ஊறுவிளைவிக்க மாட்டேன் என, உறுதிமொழி எடுத்துக் கொண்ட முதல்வர், இப்படி பேசுவது சட்டத்துக்குப் புறம்பானது.
எனவே, பிரிவினைவாதத்துக்கு அச்சாரமிடும் ஸ்டாலின் மீது, மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால், சட்டப்பூர்வமாக இதை அணுகி, நடவடிக்கை எடுக்க வைக்கும் முயற்சியில் இறங்குவேன்.
தன் இஷ்டத்துக்கு கருத்து சொல்லும் முதல்வர் ஸ்டாலின், சோவியத் யூனியன் சிதறுண்டதற்கு மொழிப் பிரச்னை காரணம் என, எங்கு படித்தார் என விபரத்தை வெளியிட வேண்டும். கற்பனை கருத்துகளை கூறி மக்களை குழப்பக்கூடாது. இவ்வாறு சுவாமி கூறினார்.
சோவியத் யூனியன் போல இந்தியா சிதறும்
தன் கடிதத்தில் முதல்வர் ஸ்டாலின் கூறியிருப்பது இதுதான்:இந்திய அரசியல் சட்டத்தின் 8வது அட்டவணையில் இடம்பெற்றுள்ள மொழிகளும், இவை தவிர, பத்தாயிரம் பேருக்கு மேல் பேசக்கூடிய மொழிகளும் மட்டுமே, தாய்மொழி எனக் கணக்கிடப்பட வேண்டும் என்ற, வழிகாட்டு நெறிமுறை வகுக்கப்பட்டது. அதனால், தாய்மொழிகளின் பட்டியலில் இருந்த, 1500க்கும் மேற்பட்ட மொழிகள் தங்கள் தகுதியை இழந்தன என, மொழியியல் அறிஞர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.தாய்மொழியாகவே அங்கீகரிக்கப்படாத மொழிகளைச் சேர்ந்தவர்கள் எப்படி இந்தியாவில் தங்கள் வாழ்வுரிமைக்கானத் தேவைகளை எதிர்கொள்வர்? ஆதிக்கம் செலுத்தும் மொழியைக் கட்டாயமாக ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலைதான் அவர்களுக்கு ஏற்படும்.அடுத்த தலைமுறை தன் தாய்மொழியை இழந்து, ஆதிக்க மொழியே அனைத்தும் என்ற நிலைக்குத் தள்ளப்படும். அதனால்தான் மொழித் திணிப்பை, திராவிட இயக்கம் தொடர்ந்து எதிர்த்து வருகிறது.உலகின் மிகப் பெரும் வல்லராசாக இருந்த சோவியத் யூனியன் என்ற மாபெரும் ஒன்றியம், பல்வேறு மொழிகளைப் பேசும் தேசிய இனங்களைக் கொண்டிருந்தது. எனினும், அதில் பெரும்பான்மை மொழியான ரஷ்ய மொழி ஆதிக்கம் செலுத்தியது. சோவியத் யூனியன் சிதைவடைந்து, 15க்கும் மேற்பட்ட நாடுகளாக பிரிந்தததில், அரசியல், -பொருளாதாரப் பின்னணிகளுடன், மொழி ஆதிக்கமும் ஒரு காரணமாக அமைந்தது.இணைந்திருந்த சோவியத் யூனியனில், பெரும்பான்மை மொழிக்காரர்களாக இருந்த ரஷ்ய மொழிக்காரர்கள், பிரிந்து சென்ற நாடுகளில் சிறுபான்மையினராக மாறினர். எங்கள் ரஷ்ய மொழியையும் ஆட்சிமொழியாக ஆக்குங்கள் என்று, லாட்வியா உள்ளிட்ட நாடுகளிடம், அவர்கள் கேட்கக்கூடிய நிலைமை உண்டானது.தாய்மொழி என்பது ஒரு தேன்கூடு. அதில் கைவைப்பது ஆபத்து. கட்டாயமாக ஒரு மொழியைத் திணித்தால், அது பகையுணர்ச்சிக்கே இடம் கொடுக்கும். நாட்டின் ஒற்றுமைக்கு பாதிப்பை ஏற்படுத்தும். மொழித் திணிப்பால் பிளவுபட்ட தேசங்களின் வரலாறு நம் பக்கத்திலேயே இருக்கிறது.