பரிசில் அதிக விலை கொண்ட Café!! - வாங்க பருகலாம்!!
7 ஆனி 2017 புதன் 13:30 | பார்வைகள் : 18137
பிரான்சின் கஃபே கடைகள் மிக பிரபலம். 'பிரெஞ்சுக் கஃபே!' என்றால் அதற்கு உலகெங்கிலும் தனி மரியாதை உண்டு. நேற்றைய பிரெஞ்சு புதினத்தில் சோம்ப்ஸ் -எலிசேயில் உள்ள Fouquet's உணவகம் குறித்து தெரிவித்திருந்தோம். மேலும் இங்குதான் பரிசில் விலை அதிகம் கொண்ட Café விற்பனையாகிறது எனவும் தெரிவித்தோம்.
இது உண்மையான தகவலா? என்றால் உண்மைதான். பிரபல பத்திரிகை ஒன்று வெளியிட்டுள்ள விலைப்பட்டியலில், சோம்ப்ஸ் -எலிசேயின் Fouquet's உணவகத்தில் உள்ள ஒரு café இன் விலை 8 யூரோக்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எட்டு யூரோக்களுக்கு ஒரு கஃபேயா.. அடேங்கப்பா... அந்த விலை கொடுத்து யார் குடிக்கிறார்கள்.. என கேட்டால்... 8 யூரோ கஃபே தான் இந்த உணவகத்தின் 'ஸ்பெஷல்' என்கிறார்கள் இங்கு பணிபுரிபவர்கள்.
12 ஆம் வட்டாரத்தில், கார்-து-லியோன் நிலையத்துக்கு அருகே உள்ள Le Train Bleu உணவகம் உங்கள் பார்வையில் அடிக்கடி தென்படுவதுதான். பரிசின் இரண்டாவது அதிக விலை கொண்ட கஃபே இங்குதான் விற்பனையாகிறது. அதன் விலை €6.10 ஆகும். தவிர, மூன்றாவது இடத்தில் Café du la Paix உணவகத்தில் விற்பனையாகிறது (9 ஆம் வட்டாரம்). விலை 6 யூரோக்கள்.
தவிர, ஐந்து, நான்கு, மூன்று என பல வித விலைகளில் Café உங்களுக்காக பரிஸ் முழுவதும் விறபனையாகிறது. €1 யூரோ கஃபே கூட சுவையாக தான் உள்ளது.
அட.. கேட்க மறந்துவிட்டோமே... இன்று நீங்கள் எங்கு சென்று கஃபே அருந்துவதாக உத்தேசம்??!!