நாகரிகம் இல்லாதவர்கள் என்று சொன்னதால்...தி.மு.க., அமளி

11 பங்குனி 2025 செவ்வாய் 05:36 | பார்வைகள் : 216
பிஎம் ஸ்ரீ திட்டம் குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ஏற்பதாக முதலில் கூறிவிட்டு, இப்போது ஏன் மறுக்க வேண்டும்? எனக்கு கிடைத்த தகவலின்படி, பிஎம் ஸ்ரீ திட்டத்தை ஏற்றுக்கொள்வதற்கு, முதல்வர் ஸ்டாலின் தயாராகவே இருந்துள்ளார். ஆனால், புதிய நபராக ஒருவர், இந்த விஷயத்தில் நுழைந்துள்ளார். அந்த, 'சூப்பர் முதல்வர்' தான், இதை தடுத்துள்ளார். அவர் யார் என்பதை கனிமொழி வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும்,'' என, லோக்சபாவில் நேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அதிரடியாக பேசியதை அடுத்து, தி.மு.க., - எம்.பி.,க்கள் கொந்தளித்து அமளியில் இறங்கினர். இதனால், சபாநாயகர் ஓம் பிர்லா, சபையை ஒத்திவைக்க நேரிட்டது. அத்துடன், 'தி.மு.க., - எம்.பி.,க்கள் நாகரிகமற்றவர்கள்' என பிரதான் கூறியதற்கும், கனிமொழி உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், அந்த வார்த்தையை மத்திய அமைச்சர் வாபஸ் பெற்றதுடன், சபைக் குறிப்பில் இருந்தும் நீக்கப்பட்டது.
பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு நேற்று துவங்கியது.
லோக் சபாவில் கேள்வி நேரத்தின்போது, தென்சென்னை தி.மு.க., - எம்.பி., தமிழச்சி தங்கபாண்டியன், ''பிஎம் ஸ்ரீ திட்டத்தை எதிர்ப்பதால், தமிழகத்திற்கான 2,000 கோடி ரூபாய் கல்வி நிதி, வேறு சில மாநிலங்களுக்கு திருப்பி விடப்படுவது கூட்டாட்சி முறைக்கு எதிரானது. கல்விக்கான நிதியை பழிவாங்கும் கருவியாக பயன்படுத்துவது சரியா?'' என்று கேட்டார்.
விவாதிக்க தயார்
இதற்கு பதில் அளித்து மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசியதாவது: நடப்பு நிதியாண்டு முடிய இன்னும் 20 நாட்களே உள்ளன. பிஎம் ஸ்ரீ திட்டம் விவகாரத்தில், பல மாதங்களாக நடந்த ஆலோசனைகளை போலவே, இப்போதும் வெளிப்படையான, சுமுகமான விவாதத்திற்கு, மத்திய அரசு தயாராகவே உள்ளது.
ஆனால், இந்த விஷயத்தில் தமிழக ஆட்சியாளர்களின் நிலை மாறியுள்ளது. பிஎம் ஸ்ரீ திட்டத்தை ஏற்றுக்கொள்ளவும், மத்திய அரசுடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடவும், ஒரு கட்டத்தில் தமிழக அரசு தயாராகவே இருந்தது.
தமிழக கல்வி அமைச்சர் என்னை சந்திக்க வந்தபோது, தற்போது கேள்வி கேட்டவர் உட்பட, தி.மு.க., - எம்.பி.,க்களும் உடன் வந்திருந்தனர். அப்போது அவர்கள், பிஎம் ஸ்ரீ திட்டத்திற்கு ஒப்புதல் தெரிவித்தனர். என்னுடன் பேசும்போது சம்மதம் தெரிவித்து விட்டு, திரும்பிச் சென்றவுடன் என்ன காரணத்தினாலோ, 'யு டர்ன்' அடித்து விட்டனர். அப்படியானால், இது அவர்களின் பிரச்னை.
பா.ஜ., ஆளும் மாநிலங்கள் மட்டுமின்றி, காங்கிரஸ் ஆளும் கர்நாடகா, ஹிமாச்சல பிரதேச மாநிலங்களும், பிஎம் ஸ்ரீ திட்டத்தை ஏற்று அமல்படுத்தி வருகின்றன. இந்த திட்டத்திற்கான நிதியை தர மத்திய அரசு தயார்.
ஆனால், இவர்களோ நேர்மையற்றவர்களாக உள்ளனர். தமிழக மாணவர்களுக்கு பொறுப்பு உள்ளவர்களாக நடந்து கொள்ள மறுக்கின்றனர். மாணவர்களின் எதிர்காலத்தை பாழாக்குகின்றனர். கல்வி விஷயத்தில் இவர்கள் சேட்டை செய்கின்றனர்.
மத்திய அரசு மீது பழி போட்டு, தமிழக மாணவர்களை தவறாக வழி நடத்துகின்றனர். இவர்கள் செய்வது அநியாயம்; இவர்கள் ஜனநாயகத்திற்கு விரோதமானவர்கள்.
ஆதாரம் தருகிறேன்
அடிப்படை நாகரிகம் தெரியாதவர்கள். நாடு முழுதும் அமல்படுத்தப்படும் ஒரு கல்வி திட்டத்தில், தமிழக மாணவர்களை இணையவிடாமல் தடுப்பதோடு, அவர்களின் உரிமையை இவர்கள் பறிக்கின்றனர். என்னை வந்து பார்க்கட்டும். அவர்கள் தந்த வாக்குறுதிகளையும், ஆதாரங்களையும் தருகிறேன்.
என்னால் தேதியைக் கூட துல்லியமாக சொல்ல முடியும். கடந்த ஆண்டு மார்ச் 15ல் புரிந்துணர்வு ஒப்பந்தம் தொடர்பாக, மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் அனுப்பியது. இவ்வாறு திட்டத்தை ஏற்பதாக ஒப்புக்கொண்டு விட்டு, இப்போது ஏன் மறுக்க வேண்டும்? என்ன காரணத்தால் இப்படி செய்கின்றனர்.
எனக்கு கிடைத்த தகவல் இதுதான். இவர்களின் முதல்வர் ஸ்டாலின்,பிஎம் ஸ்ரீ திட்டத்தை ஏற்க தயாராகவே இருந்துள்ளார். ஆனால், புதிய நபர் ஒருவர் இந்த விஷயத்தில் நுழைந்துள்ளார். அந்த, 'சூப்பர் முதல்வர்' தான் இதை தடுத்துள்ளார்.
சகோதரி கனிமொழி, தமிழக மக்களுக்கு நேர்மையானவராக நடந்துகொள்ள வேண்டும். அந்த சூப்பர் முதல்வர் யார் என்பதை அவர் கூற வேண்டும். இவர்தான் என்னை பார்க்க வந்தார். என் சேம்பருக்கே வந்து பேசினார். அவரே இப்போது மாற்றிப் பேசுவது, நேர்மையற்ற செயல்; துரதிர்ஷ்டவசமானது.
தி.மு.க.,வினர் தங்களின் தோல்விகளை மறைக்க இவ்வாறு நாடகமாடுகின்றனர். ஜனநாயக அமைப்பில் இது முறையற்றது. தமிழக மாணவர்கள் விஷயத்தில், இவர்கள் அனைவரும் அரசியல் செய்கின்றனர். இவ்வாறு அமைச்சர் பிரதான் பேசினார்.
பேசும்போது, மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் உணர்ச்சிப் பிழம்பாகக் காணப்பட்டார். அவர்தான் மிகுந்த ஆவேசத்துடன் பேசினார் என்றால், அதைவிட ஆவேசம் மற்றும் ஆக்ரோஷத்துடனும், தி.மு.க., - எம்.பி.,க்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்து குரல் எழுப்பியபடி நின்றனர். பின், அனைவரும் சபாநாயகர் ஓம் பிர்லாவின் இருக்கையை முற்றுகையிட்டனர். சில எம்.பி.,க்கள் அமைச்சர் தர்மேந்திர பிரதானை நோக்கி நேருக்கு நேர் கைகளை நீட்டி கத்தினர். இதனால், சபை மிகுந்த பரபரப்பில் இருந்தது. இந்த பிரச்னையால் கேள்வி நேரத்தின் முதல் அரை மணி நேரம் முழுதும் அமளியாக இருந்தது. தி.மு.க., - எம்.பி.,க்களின் ஆவேசக் கூச்சலால், சபையை நண்பகல் 12:00 மணி வரை சபாநாயகர் ஒத்திவைத்தார்.
வார்த்தைகளை திரும்ப பெறுகிறேன்
பூஜ்ஜிய நேரத்தில் தி.மு.க., - எம்.பி.., கனிமொழி பேசியதாவது:
தமிழக எம்.பி.,க்கள், தமிழக அரசு மற்றும் தமிழக மக்கள் குறித்து, மத்திய அமைச்சர் தன் பதிலுரையில் குறிப்பிட்டுப் பேசியது மிகவும் வேதனையாக உள்ளது. மிகுந்த வலியை தருகிறது. சர்வ சிக் ஷ அபியான் திட்டத்துக்கான நிதியை பெறுவதற்காக, எம்.பி.,க்களுடன் சென்று, அவரை நான் சந்தித்தது உண்மையே. தமிழக அமைச்சரும், அந்த குழுவில் இருந்தார். அப்போது, 'பிஎம் ஸ்ரீ' திட்டத்தில் பிரச்சனைகள் உள்ளன. நாங்கள் முழுமையாக ஏற்க முடியாது. மும்மொழிக் கொள்கை ஏற்புடையது அல்ல' என்று தெளிவாகக் கூறினோம். பிரதமர் மோடிக்கு, முதல்வர் ஸ்டாலின் எழுதிய கடிதத்தில் கூட, 'புதிய கல்விக் கொள்கையை முழுமையாக ஏற்க முடியாது. அதேநேரத்தில், எங்களுக்கு உரிய கல்வி நிதியை வழங்க வேண்டும்' என்று தெரிவித்திருந்தார். எனவே, தமிழக எம்.பி.,க்கள் ஒரு போதும், பிஎம் ஸ்ரீ திட்டத்தை ஏற்கவில்லை.இவ்வாறு அவர் பேசினார்.
இதற்கு அமைச்சர் தர்மேந்திர பிரதான் அளித்த பதில்:
நாகரிகமற்றவர்கள் என்று, தமிழக மக்களையோ, தமிழக அரசையோ, எம்.பி.,க்களையோ நான் குறிப்பிடவில்லை. இருப்பினும், ஒரு வேகத்தில் பேசும்போது ஏதாவது புண்படுத்தியிருந்தால், அந்த வார்த்தைகளை திரும்ப பெற்றுக் கொள்கிறேன்.
அதேநேரத்தில், தமிழக எம்.பி.,க்கள் பலமுறை என்னை சந்தித்தனர். தமிழக கல்வி அமைச்சரை, கனிமொழி தான் பலமுறை அழைத்து வந்தார். அந்த ஆலோசனையின்போது, ஒரு கட்டத்தில் அவர்கள் அனைத்துக்கும் ஒப்புக்கொண்டு விட்டனர்.
உண்மை வெளிவர வேண்டும் என்பதற்காக இதை கூறுகிறேன். நீங்கள் இந்த உண்மைகளை கேட்டே ஆக வேண்டும். வெறுமனே சத்தம் போடுவதாலோ, கூச்சலிடுவதாலோ எந்த பயனும் இல்லை. இங்கு என்னிடம் பேசிவிட்டு, அவர்கள் சென்னை சென்று, முதல்வர் ஸ்டாலினிடம் அனைத்தையும் கூறியுள்ளனர்.
எனக்கு கிடைத்த தகவலின்படி, அவரும் தன் ஒப்புதலை தந்துவிட்டு, 'சரி மேற்கொண்டு, என்ன செய்ய வேண்டுமோ செய்யுங்கள்' என்று கூறிவிட்டார்..
அதன்பின், அவர்களுக்குள் சில உட்பிரச்னைகள் எழுந்துள்ளன. இவை எல்லாவற்றையும் அவர்கள்தான் என்னிடம் தனிப்பட்ட முறையில் கூறினர். அதிகாரப்பூர்வமற்ற வகையில், அவர்கள் என்னிடம் தெரிவித்தவற்றையே கூறுகிறேன்.
இந்த விஷயத்தில், இதுதான் உண்மையில் நடந்த விஷயங்கள். இப்போதும் ஒன்றும் கெட்டு விடவில்லை. இன்று மார்ச் 10. இந்த நிதியாண்டு முடிவதற்குள் அவர்கள் என்னிடம் வந்து, எதை எல்லாம் ஒப்புக்கொண்டு விட்டு சென்றனரோ, அவற்றை எல்லாம் ஒருமித்த மனதுடன் மீண்டும் வந்து கூறட்டும். மத்திய அரசு என்ன செய்ய வேண்டுமோ; அதை நிச்சயம் செய்யும்.
இவ்வாறு அவர் பதிலளித்தார்.
இதன்பின், அமைச்சர் பிரதான் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, லோக்சபா சபாநாயகர் ஓம்பிர்லாவிடம், தி.மு.க., - எம்.பி., கனிமொழி உரிமை மீறல் நோட்டீஸ் கொடுத்துள்ளார்.
வெற்று கூச்சல் போடுகின்றனர்
பார்லிமென்ட் வளாகத்தில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியதாவது:அரசியல் நலன்களை விட, மாணவர்களின் நலன் மேலானது என்பதை, தமிழகத்தில் உள்ள தி.மு.க., அரசு உணர வேண்டும். பிஎம்- ஸ்ரீ திட்டத்தில், பயிற்று மொழியாக தமிழ் மட்டுமே இருக்கும். ஆனாலும், அவர்களின் எதிர்ப்பு என்னவென்று எனக்கு புரியவில்லை. அவர்களிடம் உண்மை எதுவும் இல்லை; வெற்றுக்கூச்சல் போடுகின்றனர். பொய்யாக ஒரு பரபரப்பை உருவாக்கி, மற்றவர்களை தவறாக வழி நடத்துகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.