மொஸ்கோ மீது தாக்குதலை தொடங்கிய உக்ரைன்

11 பங்குனி 2025 செவ்வாய் 08:21 | பார்வைகள் : 635
ரஸ்ய தலைநகர் மொஸ்கோவின் மீது உக்ரைன் நடத்திய ஆளில்லா விமானதாக்குதல்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்துள்ள அதிகாரிகள் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார் என குறிப்பிட்டுள்ளனர்.
அதேவேளை ஆளில்லா விமான தாக்குதலில் மொஸ்கோவிற்கு வெளியே உள்ள விட்னோய் மற்றும் டொமெடெடோவோ ஆகிய நகரங்களில் உயிரிழப்புகளும் காயங்களும் ஏற்பட்டுள்ளதாக பிராந்திய ஆளுநர் தெரிவித்துள்ளார்.
தாக்குதல்களில் ஏழு கட்டிடங்கள் சேதமடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மொஸ்கோவை நோக்கி செலுத்தப்பட்ட 75 ஆளில்லா விமானங்கள் செயல் இழக்கச்செய்யப்பட்டன என மொஸ்கோ மேயர் தெரிவித்துள்ளார்.
ஆளில்லா விமான சிதறல்கள் காரணமாக கூரையொன்று சேதமடைந்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார். மொஸ்கோ மீதான இந்த தாக்குதலை தொடர்ந்து ஒருபுகையிரத சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளது,விமானநிலையங்களில் விமானங்கள் பயணிப்பது குறித்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
கடந்த 2022 இல் உக்ரைன் மீது ரஸ்யா தாக்குதலை ஆரம்பித்த பின்னர் மொஸ்கோ மீது மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரும் ஆளில்லா விமானதாக்குதல் இது என தெரிவிக்கப்படுகின்றது.
சவுதி அரேபியாவில் உக்ரைன் அமெரிக்க பிரதிநிதிகள் மத்தியில் மிக முக்கிய பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாவதற்கு முன்னர் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில் அந்த தாக்குதலில் மொஸ்கோவில் சேதமடைந்த கட்டிடங்களையும்,எரியுண்ட வாகனங்களையும் காண்பிக்கும் படங்களை மொஸ்கோ ஆளுநர் வெளியிட்டுள்ளார்.
மேலும் ஆளில்லா விமான தாக்குதலால் சேதமடைந்த வீடுகளில் இருந்து மூன்று சிறுவர்கள் உட்பட 12 பேரை வெளியேற்றியதாகவும் மொஸ்கோ ஆளுநர் தெரிவித்துள்ளார்.