அமெரிக்க மது பானங்களுக்கு தடை - பிரிட்டிஷ் கொலம்பிய அரசாங்கம்

11 பங்குனி 2025 செவ்வாய் 08:40 | பார்வைகள் : 442
பிரிட்டிஷ் கொலம்பியா மாகாண மதுபானக் கடைகளில் இருந்து அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட அனைத்து மதுபானங்களையும் நீக்குவதாக முதல்வர் டேவிட் எபி (David Eby) அறிவித்துள்ளார்.
அமெரிக்காவினால் கனடியப் பொருட்களுக்கு வரி விதிக்கப்பட்டமை மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் கனடிய எதிர்ப்பு நிலைப்பாடுகளுக்கு பதிலடியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி கனடிய நீர் குறித்து அதிக ஆர்வம் காட்டினால், அவருக்கு அவரது அமெரிக்க நீர்மதுவை வைத்துக்கொள்ள உதவுகிறோம் என முதல்வர் டேவிட் எபி நகைச்சுவையாக தெரிவித்துள்ளார்.
முன்னதாகவே, குடியரசு கட்சியினால் நிர்வாகம் செய்யப்பட்ட மாநிலங்களில் (Republican-controlled "red states") தயாரிக்கப்படும் மதுபானங்களுக்கு பிரிட்டிஷ் கொலம்பியா தடை விதித்திருந்தது.
தற்போது அனைத்து அமெரிக்க மதுபானங்களையும் நீக்க முடிவு செய்துள்ளதாக பிரிட்டிஷ் கொலம்பிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
"மக்கள் அமெரிக்க தயாரிப்புகளைப் பார்ப்பதே வேண்டாம் என்பதே அவர்களின் உணர்வு," என எபி குறிப்பிட்டார்.
மதுபான விநியோக குழுமத்திற்கு (Liquor Distribution Branch) அமெரிக்க மதுபானங்களை வாங்குவதை உடனடியாக நிறுத்த ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அரசுக்கு சொந்தமான 200 மதுபானக் கடைகளில் இந்த ஆணை அமுல்படுத்தப்பட உள்ளது. பிரிட்டிஷ் கொலம்பிய தயாரிப்புக்களுக்கு நாம் முன்னுரிமை அளிக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.