தட்டம்மை தொற்றுநோய் பிரான்சின் சில பகுதிகளில் தீவிரம்.

11 பங்குனி 2025 செவ்வாய் 11:10 | பார்வைகள் : 979
குறிப்பாக சிறுவர்கள் மற்றும் குழந்தைகளை அதிகம் பாதிக்கும் தட்டம்மை தொற்றுநோய் பிரான்சின் சில பகுதிகளில் அதிகரித்து உள்ளது என பிரான்ஸ் சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. சிவப்பு திட்டுகள், 39 டிகிரி செல்சியஸ் முதல் 40 டிகிரி செல்சியஸ் வரையான கடுமையான காய்ச்சல், உடல் சோர்வு, வலி, தலைமுதல் பாதம் வரை அரிப்பு, என குழந்தைகளையும் சிறுவர்களையும் கடுமையாக இந்த நோய் தாக்கி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Hauts-de-France பகுதியில் 50 நோயாளிகளும் Auvergne-Rhône-Alpes பகுதியில் 23 நோயாளிகளும் இதுவரை கண்டறியப்பட்டுள்ளனர் என பிராந்திய சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. பிரான்ஸ் முழுவதும் 2018-ம் ஆண்டிற்கு பின்னர் பிறந்த அனைவரும் தட்டம்மை தொற்றுநோய்க்கு எதிரான தடுப்பூசிகளை செலுத்திக் கொள்ள வேண்டும் என பிரான்ஸ் சுகாதார அமைப்பும் வேண்டுகோள் விடுத்துள்ளது.
Hauts-de-France பகுதிக்கான மருத்துவ ஆலோசகர் Dr Patrick Goldstein தெரிவிக்கையில் "தட்டம்மை தொற்றுநோய் சிலவேளைகளில் சாதரணமாக கடந்து செல்லும் சில நேரங்களில் அதுவே ஆபத்தானதாக அமைந்துவிடும். இவ்வாண்டு அமெரிக்காவில் தட்டம்மை தொற்றுநோயின் தாக்கத்தால் இருவர் மரணமடைந்துள்ளனர்" என தெரிவித்துள்ளார்.