எக்ஸ் தளத்தை முடக்க உக்ரைன் சதி? - எலான் மஸ்க் குற்றச்சாட்டு

11 பங்குனி 2025 செவ்வாய் 11:13 | பார்வைகள் : 185
எக்ஸ் தளத்தின்மீதான தாக்குதலின் பின்னணியில் ஒரு நாடு உள்ளதாக எலான் மஸ்க் குற்றஞ்சாட்டியுள்ளார்.
பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க்கிற்கு சொந்தமான சமூகவலைத்தளமான எக்ஸ்(X), நேற்று மதியம் 3 மணியளவில் முடங்கியது.
உலகம் முழுவதும் கணினி, ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ் என அனைத்து தளங்களிலும் எக்ஸ் சமூகவலைத்தளம் முடங்கியதால், பயனர்கள் அந்த தளத்தை பயன்படுத்த முடியாமல் அவதியுற்றனர்.
4 மணியளவில் மீண்டும் செயல்பட தொடங்கிய நிலையில், மீண்டும் 7 மணி மற்றும் 10 மணியளவில் முடக்கத்தை சந்தித்தது.
இந்நிலையில், எக்ஸ் தளத்தின் முடக்கத்திற்கு பின்னணியில் உக்ரைன் நாடு உள்ளதாக அதன் உரிமையாளர் எலான் மஸ்க் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் அளித்த நேர்காணலில், "என்ன நடந்தது என்று எங்களுக்குத் தெரியவில்லை, ஆனால் எக்ஸ் தளத்தை முடக்க பெரியளவில் சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சைபர் தாக்குதல் நடத்தியவர்களின் ஐ.பி முகவரிகள் உக்ரைன் பகுதியில் இருந்து செயல்பட்டிருக்கிறது என தெரிய வந்துள்ளது" என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக அவர் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "எக்ஸ்(X) மீது ஒரு பெரிய சைபர் தாக்குதல் நடந்தது. நாங்கள் ஒவ்வொரு நாளும் தாக்கப்படுகிறோம்.
இந்த தாக்குதல் அதிக வளங்களைக் கொண்டு நடத்தப்பட்டுள்ளது. ஒரு பெரிய, ஒருங்கிணைந்த குழு அல்லது நாடு இதில் சம்பந்தப்பட்டிருக்கலாம்" என தெரிவித்துள்ளார்.
2022 ஆம் ஆண்டு தொடங்கி நடைபெற்று வரும் உக்ரைன் - ரஷ்யா போரில், எலான் மஸ்க்கிற்கு சொந்தமான ஸ்டார்லிங்க் நிறுவனம் உக்ரைனுக்கு இணைய சேவையை வழங்கி வருகிறது.
சமீபத்தில் எலான் மஸ்க் அளித்த நேர்காணல் ஒன்றில், "உக்ரைனுக்கு வழங்கிவரும் இணைய சேவையை நிறுத்தினால் அந்நாடு சீர்குலைந்துவிடும், உக்ரைன் ராணுவத்தின் முதுகெலும்பாக ஸ்டார் லிங்க் சேவையே இருக்கிறது. ஆனால் அதை நிறுத்தப்போவதில்லை" என தெரிவித்தார்.
சமீப காலமாக ரஷ்யா உடனான போரில், உக்ரைனின் நிலைப்பாட்டை எலான் மஸ்க் விமர்சித்து வந்த நிலையில், இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது.