பிரித்தானியக் கடலில் எண்ணெய் கப்பல் ஒன்றும் சரக்கு கப்பல் ஒன்றும் மோதி விபத்து

11 பங்குனி 2025 செவ்வாய் 11:19 | பார்வைகள் : 385
கடும் பனி மூட்டம் காரணமாக எண்ணெய் கப்பல் ஒன்றும் சரக்கு கப்பல் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தில், அதிசயமாக எவரும் உயிரிழக்கவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.
போர் விமானங்களுக்கான எரிபொருளுடன் பயணப்பட்ட அமெரிக்காவின் Stena Immaculate என்ற எண்ணெய் கப்பலும் அதிக நச்சுத்தன்மை கொண்ட சோடியம் சயனைடு ரசாயனத்துடன் பயணப்பட்ட போர்த்துகல் சரக்கு கப்பலும் பனி மூட்டம் காரணமாக மோதியுள்ளது.
இந்த மோதலில் ஸ்டெனாவின் சரக்கு கப்பல் கடுமையான சேதமடைந்து துளை ஏற்பட்டது. இதனையடுத்து விமான எரிபொருள் கடலில் சிந்தியது. அடுத்த நொடி இரண்டு கப்பல்களும் நெருப்பு கோளமாக மாறியுள்ளது.
சுதாரித்துக்கொண்ட ஊழியர்கள் அனைவரும் கடலில் குதித்துள்ளனர்.
இதனால், லேசான காயங்களுடன் அனைவரும் உயிர் தப்பியுள்ளனர்.
பிரித்தானியாவின் ஹல் பகுதியில் இருந்து பத்து மைல் தொலைவில் நடந்த இந்த பெரும் விபத்தை அடுத்து மீட்பு நடவடிக்கைகள் தொடங்கப்பட்டது.
உள்ளூர் நேரப்படி பகல் 10 மணிக்கு நடந்த இந்த விபத்தில், ஒருவர் மட்டுமே மாயமாகியுள்ள நிலையில், எஞ்சிய 36 பேர்களும் மீட்கப்பட்டுள்ளதாக இரவு உறுதி செய்யப்பட்டுள்ளது. விபத்து தொடர்பில் பகல் 9.48 மணிக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து Bridlington, Cleethorpes, Mablethorpe மற்றும் Skegness உள்ளிட்ட பகுதிகளில் இருந்து உயிர்காக்கும் படகுகள் சம்பவயிடத்திற்கு விரைந்தன. பிற்பகல் 2.34 மணியளவில் இரண்டு கப்பல்களில் இருந்த பணியாளர்களும் மீட்கப்பட்டு கிரிம்ஸ்பியில் கரைக்குக் கொண்டுவரப்பட்டனர்.
ஸ்டெனா இம்மாகுலேட் அமெரிக்க இராணுவத்திற்கு சேவை செய்யும் பத்து டேங்கர் கப்பல்களில் ஒன்றாகும், மேலும் இது தேசிய பாதுகாப்பிற்கு முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
இந்த நிலையில் ஸ்கொட்லாந்தில் இருந்து புறப்பட்ட 460 அடி சோலாங் சரக்கு கப்பலானது 16 கடல் மைல் வேகத்தில் நெருங்கிக்கொண்டிருந்தது. ஆனால் கடும் பனிமூட்டம் காரணமாக இரு கப்பல்களும் மோதியதாக கூறப்படுகிறது.