அதிவேக இன்டர்நெட் சேவை: ஏர்டெல் - ஸ்டார்லிங்க் ஒப்பந்தம்

11 பங்குனி 2025 செவ்வாய் 13:05 | பார்வைகள் : 181
இந்தியாவில் தனது பயனர்களுக்கு அதிவேக இன்டர்நெட் சேவை கிடைப்பதற்காக ஸ்டார்லிங்க் நிறுவனத்துடன் ஏர்டெல் ஒப்பந்தம் போட்டு உள்ளது.
உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க், டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களை நடத்தி வருகிறார். அதில், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் கீழ் ஸ்டார்லிங்க் இயங்கி வருகிறது. மொபைல்போன் சிக்னல் இல்லாத இடங்களுக்கும் சாட்டிலைட் மூலம் இணையச் சேவை கிடைக்க வேண்டும் என்பதே ஸ்டார்லிங்க்கின் திட்டம். ஸ்டார்லிங்கின் சேவை இதுவரை இந்தியாவில் கிடைக்காமல் இருந்தது.
இந்நிலையில், தனது பயனர்களுக்கு அதிவேக இணைய சேவை கிடைக்க வேண்டும் என்பதற்காக ஏர்டெல் நிறுவனமானது, ஸ்டார்லிங்க் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டு உள்ளது.
வணிக நுகர்வோர்களுக்காக ஏர்டெல் வாயிலாக ஸ்டார்லிங்க் சேவை கிடைப்பதால், இந்தியாவின் கிராமப்புறங்களில் உள்ள பள்ளிகள், சுகாதார நிலையங்கள் உள்ளிட்டவற்றை இணைக்க ஏதுவாக இருக்கும் என ஏர்டெல் நிறுவனம் கூறியுள்ளது. மேலும், ஸ்டார்லிங்க் நிறுவனத்தின் சாதனங்களை ஏர்டெல் நடத்தும் நிறுவனங்களில் கிடைக்க செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு உள்ளதாகவும் அந்த நிறுவனம் கூறியுள்ளது.